கண்டி மற்றும் யாழ்ப்பாண உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ. நடராஜன் எழுதிய “ பொரம் த விலேஜ் டு த குளோபல் ஸ்டேச்” (அனுபவ வாழ்க்கை குறிப்பு) ஆங்கில நூல் வெளியிட்டு விழா 03-.02.-2024 சனிக்கிழமை பி. ப. 4.00- முதல் 5.30 வரையிலும் பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு முன்னால் உள்ள பேராதனை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார்.
சமூகச் செயற்பாட்டாளர் முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தனின் வரவேற்புரைடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் நூல் பற்றிய கருத்துரையினை பேராதனை பல்லைக்கழக சட்டத் துறைப் பேராசிரியர் நெலும் தீபிகா உடகமவும், நூல் பற்றிய அறிமுகவுரையினை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் பி. எஸ். அபயக்கோன் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வி. மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்துவர். ஏற்புரையினை நூலாசிரியரும் ஓய்வு பெற்ற தூதுவருமான ஏ. நடராஜன் நிகழ்த்துவார். இந்நூல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாட்டினை கண்டி நகரிலுள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலாசிரியரும் கண்டி மற்றும் யாழ்ப்பாண உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ. நடராஜன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கி செவ்வி:
கண்டியில் உதவி உயர்ஸ்தானிகராக கடமையாற்றும் பொழுது எல்லா மனிதர்களுடனும் சமனாக கர்வமில்லாமல் பழகும் எளிமையான ராஜ தந்திரக் கம்பீரமும் எதையும் கூர்ந்து அவதானித்து புரிந்து கொள்ளும் கூரிய புத்தி நுட்பமும் பன்முகப் பார்வையும் கொண்ட உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூற முடியுமா?
நிச்சயமாக. நான் இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவன். என்னுடைய பள்ளிப் பருவத்தை திருநெல்வேலியில் முடித்துக் கொண்டு அதன் பிறகு இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு 1983ஆம் ஆண்டு சென்றேன். நான் வெளியுறவுத் துறையில் 1984ஆம் ஆண்டு சேர்ந்தேன். அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளில் பணிபுரிந்துள்ளேன். யெமன், ஸ்பெயின், சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ், பூட்டான், இலங்கை போன்ற நாடுகளில் பணியாற்றினேன். குறிப்பாக இலங்கையில் கண்டியில் மூன்று ஆண்டுகளும், இறுதியாக யாழ்ப்பாணத்தில் மூன்று ஆண்டுகளும் பணியாற்றிவிட்டு 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
நீங்கள் வெளிக் கொணர்ந்துள்ள நூல் குறித்து…
நான் பல ஆண்டுகள் உயர்ஸ்தானிகராக பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றி நூல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளேன். எனது பள்ளிப் பருவம், இளமைக் காலம், எனது குடும்பச் சூழ்நிலை மற்றும் இந்தியத் தூதரகங்களில் பணிபுரியும் போது பெற்ற விசித்திரமான அனுபவங்களைப் பற்றி என்னுடை நூலில் எழுதியுள்ளேன்.
நான் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தமையினால் இந்திய மீனவர் பிரச்சினை, கச்சதீவு, போர்க்காலப் பிரச்சினைகள், இந்திய அமைதிப்படை என யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றி என்னுடைய நூலில் சுருக்கமாக எழுதியுள்ளேன்.
நீங்கள் கண்டியில் பணிபுரிந்த கால கட்டத்தில் உங்களது பணிகள் குறித்து நான் நிறைய செய்திகள் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கியுள்ளேன். அன்று அரும்பிய நட்பு நீங்கள் கண்டியில் இருக்கும் வரையிலும் நீடித்து வளர்ந்தது. உங்கள் காலத்தில் நீங்கள் மலையக மக்களுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றியும் அவர்களுடைய குணாம்சங்கள் பற்றியும் கூறுங்கள்?
2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை கண்டியிலுள்ள உதவித் தூதுவரகத்தில் துணைத் தூதுவராகப் பணிபுரிந்தேன். அங்கு பணிபுரிந்தமையை ஒரு வரப்பிரகாசமாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் எங்களுடைய மக்கள் அதாவது இந்திய வம்சாவளி மக்கள் அங்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ , வடமேல் ஆகிய மாகாணங்களில் வாழ்கின்றனர். அதேவேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஒரு தொகையினர் வாழ்கின்றனர்.
இவற்றை அவதானிக்கும் பொழுது எனக்கு சந்தோகமாக இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் என்னிடம் வந்து கூறும் போது, ஆம், இவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் என்றுதான் நான் கருதுவேன்.
அது மட்டுமல்ல அவர்களுடன் சந்தித்துப் பேசிப் பழகும் போது அவர்கள் என்னை ஓர் உறவினராகத்தான் கருதினார்கள். மலையகத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் என்னை மதித்தார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. அந்தளவுக்கு அழகான பண்பான அற்புதமான மக்கள் மலையகத்தில் இருக்கின்றார்கள். அதற்காக மற்ற நாட்டைச் சார்ந்தவர்கள் கெட்டவர்கள் என்று கூறவில்லை. ஆனால் இவ்வளவு நல்ல குணமுள்ளவர்களை நான் அவதானித்தது இலங்கையில் தான். அதுவும் குறிப்பாக மலையதத்தில் தான். நான் அவர்களிடமிருந்து நல்ல கௌரவத்தையும் நல்ல அனுபவத்தையும் பெற்றுக் கொண்டேன்.
இப்பொழுதும் கூட நான் இந்தியாவில் இருக்கும் போது, மலையகத் தமிழர்களைப் பற்றி யாரும் பேசினால் உடனே நான் இடையிட்டு அந்த மக்களைப் பற்றி அவர்களுடைய நல்ல குணங்களை எடுத்துச் சொல்வதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை. நாங்கள் நண்பர்களுடனோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ பேசும் போது மலையகத் தமிழர்கள் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுவேன்.
மத்திய மாகாணமாக இருக்கட்டும் ஊவா மாகாணமாக இருக்கட்டும் அல்லது வடமேல் மாகாணமாக இருக்கட்டும் எல்லாத் தோட்டங்களுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துள்ளேன். அது மட்டுமல்ல தோட்டத்திற்குள் எங்கெங்கெல்லாம் பாடசாலைகள் இருக்கின்றனவோ அந்தப் பாடசாலைகளுக்குச் சென்று அந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும், அதிபர்களையும் சந்தித்துப் பேசும் பொழுது, கண்டியில் இந்திய துணைத் தூதரகம் பல ஆண்டுகளாக இருக்கின்றது. அப்படி இருந்தும் எங்கள் பாடசாலைக்கு வந்த முதல் இந்திய தூதுவர் நீங்கள்தான் என்று கூறும் பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை குறிப்பாக ஏராளமான நூல்கள் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றோம். இசைக் கருவிகளை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றோம். விளையாட்டுச் சாதனங்களை ஏராளமாகக் கொடுத்திருக்கின்றோம்.
ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கியிருக்கின்றோம். நான் இருக்கின்ற காலத்தில் மட்டுமல்ல அதற்கு முன்பும் அவ்வாறு வழங்கப்பட்டன. ஊவா மாகாணத்திற்கு 2000 வீடுகளும் மத்திய மாகாணத்துக்கு 2000 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன.
அந்த வகையில் என்னுடைய பங்கும் இருக்கின்றது என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். இப்படி ஏராளமான செயற்பாடுகள் செய்திருந்தாலும் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்திருக்க வேண்டுமோ என்ற குறைபாடு என் மனதிற்குள் இப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கின்றது
நீங்கள் வடக்கு மாகாணத்தில் ஆற்றிய பங்களிப்பு பற்றிக் கூறுவீர்களா?
நான் மத்திய மாகாணத்தை விட வடக்கு மாகாணத்தில் அதிகளவு பங்களிப்புச் செய்திருக்கின்றேன். ஒன்று மட்டும் கூறுகின்றேன். கண்டியை விட்டு ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் வந்து விட்டேன். இன்றும் மக்கள் என்னை மறக்க வில்லை. நானும் அவர்களை மறக்கவில்லை.
நேர்காணல்: இக்பால் அலி