Home » சனத் நிஷாந்தவின் மரணம் 2024 இல்!
சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில் -: எம். எஸ். முஸப்பிர்

சனத் நிஷாந்தவின் மரணம் 2024 இல்!

ஏற்கனவே கணித்த ஜோதிடர்

by Damith Pushpika
January 28, 2024 6:45 am 0 comment

வெறுங்கையுடன் உலகிற்கு வந்து, வெறுங்கையுடனேயே உலகை விட்டுச் செல்லும் வாழ்க்கைப் பயணத்தில் மரணம் எம்மை இவ்வுலகிலிருந்து அழைத்துச் செல்லும் தினத்தை முன்னரே தெரிந்து கொள்ள முடியுமானால் உங்களால் அந்தப் பயணத்தைத் தடுக்க முடியுமா?

கடந்த 24ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த பெரேராவும் சில காலங்களுக்கு முன்னர், தனது மரணம் தொடர்பில் இவ்வாறான பல கணிப்புகளை அறிந்துகொண்டுள்ளார்.

அவற்றுள் மிக அண்மையில் மாதம்பையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர், 2024ஆம் ஆண்டில் விபத்தொன்றில் அவரது மரணம் நிகழும் என்றும், 2024ஆம் ஆண்டைக் கடந்துவிட்டால் அவர் ஒரு ராஜாவாக மாறும் அளவுக்கு அதிர்ஷ்டமும் சக்தியும் கொண்ட கிரக அமைப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஹலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல அரசியல் கூட்டங்களில் சிரித்துக்கொண்டே இந்தக் கதையை கூறியிருந்தார். காரணம், அவருக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கவில்லை. எனினும், தனது அரசியல் பயணத்தின் போது, ​​பலதடவைகள் மரணத்தின் வாசலுக்கச் சென்று திரும்பிய அவர், கொலை மிரட்டல்கள், கும்பல் தாக்குதல்கள் என பல சவால்களை எதிர்கொண்டிருந்தார். தனது ஆன்மிக பலமே மற்றும் உடல் பலம் இரண்டையுமே அவர் எப்போதும் நம்பியதாக அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது தனக்கு கடுமையான தோஷம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

“நான் நீண்ட நாட்கள் வாழ மாட்டேன் என்று இரண்டு ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அரசியலால் நான் மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்பியிருக்கின்றேன். எனினும் நான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். அரசியலும் செய்கிறேன். இந்தக் கதைகளால் எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை அரசியலில் இருந்து விலகச் சொல்கிறார்கள்” என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தர். அவர் தனது வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய ஜோதிடர்களின் கணிப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் சிந்துத்து வந்துள்ளார். அதனால்தான் அவர் தனது ஊடகச் செயலாளரான மூத்த ஊடகவியலாளர் பி.சி. ஹெட்டியாராச்சியிடம் சில காலங்களுக்கு முன் சில விடயங்களைச் சொல்லியிருந்தார்.

“அரசியல் காரணமாக, சில நேரம் த.மு.தசநாயக்காவுக்கு நடந்ததே எனக்கும் நடக்கக் கூடும். நான் இல்லாமல் போனாலும் எனது மனைவியும் குழந்தைகளும் எவ்விதக் கஷ்டங்களுமின்றி வாழ வேண்டும் என்பதற்காகவே நான் வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தேன். எவ்வாறிருந்தாலும் நான் எனது அறுபதாவது வயதில் அரசியலை விட்டு விலகுவேன். அதற்கு இன்னும் 12 வருடங்கள் உள்ளன”

எனினும் விதி அவருக்கு அந்தப் 12 வருடங்களை விட்டு வைக்கவில்லை. கடந்த 15ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா பயணித்த சொகுசு ஜீப் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் 11ஆவது கிலோ மீற்றருக்கருகில் விபத்துக்குள்ளானது. அதே திசையில் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கன்டெய்னர் கனரக வாகனத்தின் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் உயிரிழந்ததோடு, உயிரிழக்கும் போது அவரது வயது 48 ஆகும்.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பிரதம சட்ட வைத்திய நிபுணர் ரமேஷ் அழகியவண்ண மற்றும் விசேட வைத்திய நிபுணர் வியானி டயஸ் ஆகியோர் தலைமையில் ராகமை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, விபத்தின் காரணமாக இராஜாங்க அமைச்சரின் தலை, இடது கால் மற்றும் மார்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்கள் மற்றும் உட்புறமான இரத்தப்போக்கு போன்றவையே மரணத்திற்குக் காரணம் என ராகமை போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சுதர்சன திசாநாயக்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு தீராத நோய்களோ, வேறு எந்த நோய்களுமோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. என்றாலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவர் மரணத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளது. அந்த துரதிஷ்டவசமான சந்தர்ப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் மனைவி மலவி ஆராச்சிகே சாமரி பிரியங்கா (40) இவ்வாறு கூறினார்.

“எனது கணவனுக்கு சாப்பிட, தூங்க, ஓய்வெடுக்க என எதற்குமே நேரமிருக்கவில்லை. நான் குழந்தைகளை கவனித்துக்கொண்டதால், அவர் அரசியலில் முழுமையாக ஈடுபட்டார். பதவிக்கும் சுய நலன்களுக்கும் ஆசைப்பட்டு கட்சி மாறவோ, கட்சிக்கு துரோகம் இழைக்கவோ இல்லை. தனது பிரதேச மக்களுக்காகவே அவர் நீண்ட காலம் பணியாற்றினாலும், நாட்டு மக்களுக்குச் செய்யும் சேவையிலும் அவர் குறைவைக்கவில்லை. பிறப்பால் அவர் ஒரு கத்தோலிக்கராக இருந்தாலும் அவருக்கு இன, மத வேறுபாடுகள் இருக்கவில்லை. புத்தளம் மாவட்டத்தில் எல்லா மதங்களையும், இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு எவ்வித பாகுபாடுகளுமின்றி எனது கணவர் சேவையாற்றினார். நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது எங்கள் வீடு தீக்கிரையாக்கப்பட்டதால் நாம் இருப்பதற்கு வீடில்லாததால் அன்று இரவே நாங்கள் கொழும்புக்கு வர வேண்டியதாயிற்று. சம்பவம் இடம்பெற்ற தினம் உறவினர் திருமணம் என்பதால் குடும்பமாக கலந்து கொண்டு எனது கணவர் வேறு வாகனத்தில் எங்களை கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அவ்வாறே அவர் வேறொரு திருமணத்துக்குச் சிலாபத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது….” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாயின் மடியில் அமர்ந்திருந்த சிறுவயது மகன், “அம்மா அழாதே” என்று தன் கைகளால் தாயின் கண்களைத் துடைத்துவிட்டு, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தானே துடைத்து, அருகில் இருந்தவர்களின் கண்களையும் கண்ணீரால் நிரப்பினான். அந்தக் குழந்தைகள் தந்தையை இழந்த வேதனையைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

குருகமகே சனத் நிஷாந்த பெரேரா 1975ஆம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி ஆராச்சிக்கட்டில் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைக் கொண்ட ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார். சனத் நிஷாந்த சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், அவரது தாயும் மூத்த சகோதரருடன் இணைந்து தொடங்கிய வியாபாரமே குடும்பத்தின் ஒரே வருமானமாக ஆகியது. ஆராச்சிக்கட்டுவ அரசினர் பாடசாலை, ராஜாகந்தலுவ கனிஷ் வித்தியாலயம், சிலாபம் சாந்தமரியா ஆண்கள் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர் தனது இளமைக் காலத்திலிருந்தே சமூக சேவகராகவும் கலைஞராகவும் பிரதேசத்தில் அறியப்பட்டவர். 1996ஆம் ஆண்டு, அன்றைய ஆராச்சிக்கட்டுவ உள்ளூராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்லி சரத் ஹேமச்சந்திரவின் வழிகாட்டலின் கீழ் சனத் நிஷாந்த தீவிர அரசியலில் பிரவேசித்தார். அதன்படி 2000ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

2000ஆம் ஆண்டில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சனத் நிஷாந்தவின் மூத்த சகோதரரான சுமித் கபில பெரேரா உயிரிழந்ததோடு, அவரது இரண்டாவது மூத்த சகோதரரான ஜனத் சமந்த பெரேரா இரண்டு தடவைகள் ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 2001ஆம் ஆண்டில் அரசியல் பழிவாங்கல் காரணமாக சனத்தின் வீட்டில் அமைந்திருந்த வியாபார நிலையம் எதிர்த்தரப்பினரால் தீக்கிரையாக்கப்பட்டதால் அவரும், குடும்பத்தினரும் பாரிய நெருக்கடியைச் சந்தித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் அதிவேகமாக பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இராஜாங்க அமைச்சரின் சாரதி பிரபாத் எரங்க (29) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எமது வாகனம் முன்னால் சென்ற கன்டெய்னரை முந்திச் செல்லத் தயாரான போது, ​​வலது பக்கத்தில் வேகமாக வந்த கார் ஒன்று எம்மை முந்திச் சென்றது. அந்த கார் எமது வாகனத்தில் மோதிவிடும் எனப் பயந்து நான் எமது வாகனத்தை இடது பக்கம் திருப்பினேன். அந்நேரம் எமது வாகனம் பலத்த சத்தத்துடன் கண்டெய்னர் மீது மோதியது. வாகனம் சுழல்வது போல் இருந்தது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” இராஜாங்க அமைச்சரின் வாகனச் சாரதியையும் அவ்வாகனம் மோதிய கன்டெய்னர் வாகனச் சாரதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இராஜாங்க அமைச்சரின் வாகனச் சாரதியின் கவனயீனம் மற்றும் கடுமையான வேகம் என்பன இந்த விபத்திற்குக் காரணமாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அமைச்சரின் மரண விசாரணையின் போது சாட்சியமளித்த அவரது சகோதரர்களில் ஒருவரான ஜகத் சமந்த, தனது சகோதரர் மது அருந்துவதில்லை என தெரிவித்துள்ளார். தனது சகோதரரின் இழப்பு அவரது மனைவி, 12, 10 மற்றும் 9 வயதுகளையுடை மூன்று மகள்கள் மற்றும் ஐந்து வயது மகன் உட்பட குடும்பத்தினருக்கு தாங்க முடியாத இழப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரின் மனைவி மலவி ஆராச்சிகே சமரி பிரியங்கா, பம்மல, காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் முதற் தடவையாக சனத் நிசாந்தவை தேவாலயம் ஒன்றிலேயே சந்தித்துள்ளார். அதற்குச் சில காலங்களுக்குப் பின்னர் அவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்துள்ளார். அந்தக் காலத்தில் சனத் நிஷாந்த வடமேல் மாகாண சபை உறுப்பினராக இருந்ததோடு, ஒரு வழக்கு தொடர்பில் சட்டத்தரணியைச் சந்திப்பதற்காக பல தடவைகள் சட்டத்தரணியின் அலுலலகத்திற்குச் சென்று வந்துள்ளார். அவ்வாறு ஒருநாள் சென்றபோது சமரியின் கையிலிருந்த பேனா தவறி சனத் நிஷாந்தவின் காலுக்கருகில் வீழ்ந்துள்ளது. அந்நேரம் கீழே குணிந்து பேனாவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த சமரியின் தலையில் கையை வைத்து நல்லா இருங்கள் என சனத் நிஷாந்த ஆசீர்வாதம் செய்துள்ளார். அவ்வாறு ஆரம்பித்த அவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. பின்னர் சில காலம் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றிய சமரி, கணவரின் ஓய்வில்லாத அரசியல் நடவடிக்கைகளினால் தனது சட்டத்தரணி தொழிலுக்கு விடை கொடுத்துவிட்டு தனது கணவரின் பிரத்தியேகச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

“கணவரின் இழப்பு விபரிக்க முடியாத வலியைத் தந்தாலும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவருக்கு பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. அவருடைய மரணத்துடன் அவை அழிந்துவிடக் கூடாது. எதிர்காலத்தில் ஒரு சட்டத்தரணியாக தேவைப்பட்டால், அவருக்காக அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து, அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்”. கணவரின் இழப்பு தாங்க முடியாத துயரைத் தந்தாலும், கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உறுதியான உள்ளத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக புத்தளம் ஆராச்சிக்கட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்ததோடு, இறுதிக் கிரியைகள் இன்று 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தளம் ராஜகந்தளுவை கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறவுள்ளன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division