நாட்டில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாகவும் சமூக ஊடகங்கள் மீதுதான் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். சமூக ஊடகங்கள் காரணமாகவே இக்காலத்தில் மக்கள் மத்தியில் பலவிதமான குற்றச்செயல்கள் பெருகியுள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சமூக ஊடகம் என்பது ‘கடிவாளம் இல்லாத குதிரை’ என்பது பொதுவான கருத்து ஆகும். கட்டுப்படுத்துவதற்கு ‘கடிவாளம்’ இல்லாத குதிரை தறிகெட்டுச் செல்வதைப் போன்று, சமூக ஊடகங்களும் ஒழுக்கவிழுமியங்களை மீறியவாறு சென்று கொண்டிருப்பதையே நாம் காண்கின்றோம்.
சமூக ஊடகங்கள் வாயிலாக நமது மக்களிடம் வந்து சேருகின்ற நல்ல விடயங்கள் மிகச் சொற்பம் என்றே கூற வேண்டும். தீய விடயங்களே அதிகளவில் வந்து சேருகின்றன. சமூகத்துக்குத் தீங்கான விடயங்கள் மக்களிடம் வந்து சேருவதுடன் மாத்திரமன்றி, அவ்வாறான தீயபழக்கவழக்கங்கள் எமது சமூகத்துக்குள் பரவி வருவதையும் காண முடிகின்றது.
பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு சமூக ஊடகங்கள் வழியேற்படுத்திக் கொடுப்பதாக பரவலாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது. தவறான நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி ஏமாந்து போனவர்கள் அநேகர். உண்மை நட்பென்று நம்பி திருமணமும் செய்து கொண்டு, இறுதியில் தமது வாழ்க்கையையே இழந்தவர்கள் ஏராளம்.
முகநூல் வாயிலான நட்பை நம்பி பெருந்தொகைப் பணத்தை இழந்தவர்கள் பற்றி நாம் ஊடகங்களில் அறிகிறோம். முகநூல் மூலமான தொடர்பினால் பலவிதமான சிக்கல்களில் அகப்பட்டு சீர்குலைந்து போனவர்களின் துயரக்கதைகள் அதிகம்.
அதேசமயம் இன மற்றும் மத ரீதியான வதந்திகளால் குழப்பங்களும் மோதல்களும் உருவாகுவதற்கு சமூக ஊடகங்கள் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளன. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பலவற்றுக்கு சமூக ஊடகங்கள் எண்ணெய் வார்த்திருக்கின்றன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எமது சின்னஞ்சிறார்கள் அறியக் கூடாத தகவல்களும் படங்களும் ஸ்மார்ட் தொலைபேசிகளில் தாராளமாகவே வந்துசேருகின்றன. அவர்களது பருவத்துக்கு ஒவ்வாத தீயவிடயங்களும் பாலியல் ரீதியான விடயங்களும் தாராளமாகவே ஸ்மார்ட் தொலைபேசிகளில் வந்துசேருகின்றன. சிறார்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கு இதுவே முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
தகவல் தொடர்பாடலில் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள பாரதூரமான எதிர்விளைவு இதுவாகும். இத்தகைய தறிகெட்ட வளர்ச்சிப் போக்கை எவ்வாறு தடுத்து நிறுத்துவதென்று பெற்றோர் மாத்திரமன்றி சமூக ஆர்வலர்கள் அனைவருமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சூழலில்தான் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு இச்சட்டம் வழியேற்படுத்துமென்று நம்பப்படுகின்றது.
இச்சட்டம் தொடர்பாக எதிரும்புதிருமான கருத்துகள் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் நம் சமூகத்தை சீரழிவில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் கட்டாயத்தை எமது அரசியல்வாதிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.