Home » சீனாவுடன் கைகோர்த்தவாறு இந்தியாவை சீண்டுகிறாரா மாலைதீவு ஜனாதிபதி முய்சு?

சீனாவுடன் கைகோர்த்தவாறு இந்தியாவை சீண்டுகிறாரா மாலைதீவு ஜனாதிபதி முய்சு?

by Damith Pushpika
January 21, 2024 6:43 am 0 comment

சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றிருந்த மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு கடந்த வாரம் நாடு திரும்பியிருந்தார். அப்போது அவர் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.

“எமது நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் அவர் எங்களை கொடுமைப்படுத்த உரிமம் பெற்றுள்ளார் என்று அர்த்தமல்ல” என்று கூறியிருந்தார்.

இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும் சமயத்தில் அவரிடம் இருந்து இப்படியொரு கருத்து வந்துள்ளது.

சமீபத்தில், முய்சுவின் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முய்சு முதன்முறையாக சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

சீனாவில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் கடலுக்குள் இருக்கும் சிறிய தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடு. 9 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் பிரத்தியேக பொருளாதார மண்டலம் உள்ளது. அந்த வகையில் அதிக பரப்பளவில் பொருளாதார மண்டலம் கொண்ட நாடுகளில் மாலைதீவும் ஒன்று. இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டுக்குச் சொந்தமானது அல்ல. இந்த இந்தியப் பெருங்கடல், அதைச் சுற்றிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது” என்றார்.

அவரது கருத்து இந்தியாவைப் பற்றியதாகத்தான் உள்ளதென்பது வெளிப்படையானது.

அவர் மற்றொரு சந்திப்பில் “நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாடு” என்று கூறியிருந்தார்.

சீனப் பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை முய்சு சந்தித்தார். அதன் பிறகு இரு நாடுகளும் சுமார் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

சீன உயர்மட்டத் தலைவர்களுடன் முய்சுவின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “இரு தரப்பும் ஒருவருக்கொருவர் நலன்களைப் பாதுகாக்க, ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஒப்புக்கொண்டன” என்று கூறப்பட்டது.

“மாலைதீவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தை சீனா உறுதியாக ஆதரிக்கிறது என்பதுடன் அதற்கு உரிய மரியாதையையும் அளிக்கிறது. மாலைதீவின் உள்நாட்டு விவகாரங்களில் எந்த நாடும் தலையிடுவதை இரு நாடுகளும் அனுமதிக்காது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், அது இந்தியாவைத்தான் குறிக்கும் என நம்பப்படுகிறது.

மாலைதீவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி முய்சு, மாலைதீவுக்கு 130 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க சீனா ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இந்த உதவியின் பெரும்பகுதி தலைநகரில் உள்ள வீதிகளின் புனரமைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்தப் பயணத்தின் போது, மாலைதீவு நாட்டுக்குச் சொந்தமான மாலைதீவு தேசிய விமான நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்கத் தொடங்குவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும், மாலைதீவில் உள்ள ஹுல்ஹுமாலேயில் ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இதற்காக சீனா 50 மில்லியன் அமெரிக்க ெடாலர்களை வழங்கும்.

இது தவிர விளிமலேயில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்கவும் சீனா மானியம் அளிக்கும்.

மாலேயில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இந்திரா காந்தி நினைவு மருத்துவமனை (IGMH), அந்நாட்டிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டது. பின்னர் 2018 இல், மீண்டும் இந்தியாவின் உதவியுடன், இந்த மருத்துவமனையில் நவீன சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகள் மோசமாக இருந்த இன்றைய வேளையில் முய்சுவின் சீனப் பயணம் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாலைதீவு தேர்தல் கண்காணிப்பு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் மாலைதீவின் முற்போக்குக் கட்சி (பி.பி.எம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) ஆகியவை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் இந்தியாவை எதிர்த்தன என்றும் கூறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தவறான தகவல்களை பரப்பவும் இந்தக் கட்சிகள் முயற்சித்தன.

இந்தத் தேர்தலில் வேட்பாளராக முய்சு போட்டியிட்டார். அப்போது சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தலைமையில் கட்சி இருந்தது. அப்துல்லா யாமீன் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

சமீபத்தில், மாலைதீவின் அமைச்சர் மரியம் ஷியூனா மற்றும் பிற தலைவர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசு, இதனால் உருவான பிரச்சினைகளை ஈடுசெய்யும் முயற்சியைத் தொடங்கியது. முதலில் அவர் அந்த அமைச்சரின் கருத்து தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஆட்சேபனைக்குரிய கருத்துத் தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் இடைநீக்கம் செய்தார்.

அந்த அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மக்கள் தங்கள் மாலைதீவு பயணங்களை ரத்து செய்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினர்.

பல பிரபலங்களும் இந்தச் சர்ச்சையில் நுழைந்து லட்சத்தீவு பற்றி எழுதினர். இந்தியாவில் பார்க்க லட்சத்தீவு போன்ற இடம் இருக்கும் போது, மாலைதீவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் எழுதினர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மாலே நகரில் மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. ஜனாதிபதியாவதற்கு முன்பு, முய்சு மாலே மேயராக இருந்தார். அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.

இந்த மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) வேட்பாளர் ஆதம் அசீம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

41 வாக்குப் பெட்டிகள் எண்ணப்பட்டதில், ஆதம் அசீம் 5,303 வாக்குகளையும், மக்கள் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் 3,301 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

எம்.டி.பி கட்சித் தலைமை இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கருதப்படும் முகமது இப்ராகிம் சோலியின் கைகளில் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அவரது கட்சி முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸிடம் தோற்றது.

இத்தனை காலம் முய்ஸு கட்சி வசம் இருந்த மாலைதீவு தலைநகர் மாலே மேயர் பதவி இப்போது எதிர்க்கட்சிகள் வசம் சென்றுள்ளது. அசிமின் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவு ஒரு விடயத்தை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அதாவது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற போது, இந்தியாவுக்கு ஆதரவான கட்சிதான் மாலைதீவின் ஆட்சியைக் கைப்பற்றுமென்பது நன்கு தெரிகின்றது.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division