சிம்பாப்வே சகலதுறை வீரர் லுக் ஜொங்வேயுக்கு அஞ்சலோ மத்தியூஸ்தான் விருப்பமான வீரர். சிறு வயதில் அவரது வோல்பேப்பரை வைத்திருந்தார். தனது பேஸ்புக்கில் மத்தியூஸின் படத்தைத் தான் நீண்ட காலமாக ‘ப்ரோபைல்’ படமாக வைத்திருந்தார்.
மத்தியூஸை முன்மாதிரியாக வைத்து கிரிக்கெட் ஆடிய ஜொங்வே, மத்தியூஸ் வீசிய தீர்க்கமான கடைசி ஓவரில் சிக்ஸர், பெளண்டரி, சிக்ஸர் என விளாசி சிம்பாப்வே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் இது நிகழ்ந்தது.
சிம்பாப்வே கடைசி ஓவருக்கு 20 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது பந்துவீச வந்த மத்தியூஸை விளாசித் தள்ளிய ஜொங்வே சிம்பாப்வே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
“இலங்கைக்கு எதிராக அதுவும் சிறு வயதில் எனது முன்மாதிரியாக இருந்த ஒருவரான அஞ்சலோவுக்கு முன் இதனைச் செய்தது சிறந்ததாகும். அது சிறப்பு மிக்கதாகும். நான் சிறுவனாக இருந்தபோது அவரை எனது வோல்பேப்பராக பயன்படுத்தி இருக்கிறேன். அவர் அப்போது கிரே–நிகோல்ஸ் துடுப்பை பயன்படுத்திக் கொண்டிருத்தார். நான் சிறுவனாக இருந்தேன். அப்போது பேஸ்புக்கில் அவர்தான் எனது ப்ரோபைல் படமாக இருந்தது.
எனக்கு இது அதிக உணவுபூர்வமானதாக உள்ளது. இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்” என்று அந்தப் போட்டிக்குப் பின்னர் ஜொங்வே கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான அந்த இரண்டாவது டி20 போட்டியில் மத்திய பின் வரிசையில் வந்த ஜொங்வே 12 பந்துகளில் 2 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.