அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை அணியில் இப்போதிருக்கும் மிக அனுபவம் மிக்க வீரர். ஆனால் சிம்பாப்வேயுக்கு எதிரான டி20 தொடரில் ஆடியபோது, “முதல் போட்டியில் ஆடுவது போல் உணர்கிறேன்” என்கிறார்.
36 வயதாகும் மத்தியூஸ் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் பெற்றது இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர். சங்கக்கார, மஹேல ஜயவர்தனவின் யுகம் முடிந்த பின் இலங்கை கிரிக்கெட்டை தூக்கி நிறுத்துவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் இவர்.
என்றாலும் மத்தியூஸின் கிரிக்கெட் வாழ்வு, அத்தனை உறுதியாக இருக்கவில்லை. அணித் தலைவராக அவர் சோபிக்கத் தவறியதோடு, வீரராகவும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தினார். கடைசியில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வீரராக மாறிவிட்டார். இத்தனைக்கும் மத்தியூஸ் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவர் என்பது ஊர் அறிந்தது.
கடைசியில் இலங்கை கிரிக்கெட் தோல்விமேல் தோல்விகளைக் கண்டு சீர்திருத்தம் ஒன்றை எதிர்பார்த்திருந்தபோது தான் மீண்டும் மத்தியூஸ் பக்கம் பார்வை திரும்பியது. அதற்கு உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக் குழு ஒன்று வரும் வரை அவர் பார்த்திருக்க வேண்டி இருந்தது.
முன்னாள் தேர்வுக் குழுவினர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டதால் தான் ஓரங்கட்டப்பட்டதாக சாடுகிறார் மத்தியூஸ். “தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் முடிவுகளை எடுத்தால், இது போன்ற விடயங்கள் நடைபெறும். நாம் சம்பியன்ஸ் கிண்ணத்திற்குக் கூட தகுதி பெறவில்லை” என்கிறார்.
இலங்கை டி20 அணிக்கு மத்தியூஸ் அழைக்கப்பட்டது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின்னராகும். அவர் சிம்பாப்வேயுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 46 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்ட நாயகன் விருதையும் வென்ற பின்னரே பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான முன்னாள் தேர்வுக் குழுவை வம்புக்கு இழுத்தார்.
பிரமோத்யவின் தேர்வுக் குழு ஒருநாள் போட்டிகளிலும் மத்தியூஸுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டின் உச்சமான கடந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் கூட பாதியில் மாற்று வீரராகத் தான் அழைக்கப்பட்டார். டி20 உலகக் கிண்ணத்தில் அவர் திரும்பிக் கூட பார்க்கப்படவில்லை.
என்றாலும் மத்தியூஸ் ஓரங்கட்டப்படுவதற்கு காலம் நேரம் பொருத்தமாக அமைந்ததே அடிப்படை காரணமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு மத்தியூஸ் அணித் தலைமை பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை பார்த்தால் அவர் காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
2016 இல் காலில் ஏற்பட்ட பல காயங்களால் அவர் சிம்பாப்வேயில் இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. அப்போது உபாதையால் நாடு திரும்பியதால் அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இலங்கை வந்த பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலும் அவரால் விளையாட முடியாமல்போனது. பின்னர் பங்களாதேஷில் நடந்த முக்கோணத் தொடரிலும் காயம் அவருக்கு குறுக்காக வந்தது. என்றாலும் இலங்கை அந்தத் தொடரை வென்றது.
அப்போதே தேர்வுக் குழுவினர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அணியை கட்டியெழுப்பும் திட்டத்தை கொண்டுவந்தனர். இந்தக் காலப்பிரிவில் 30 வயது தாண்டியவர் கூட வயதானவர் என்று கணிக்கப்பட்டது அணிக்கு இழப்புகளை தந்தது. திசர பெரேரா போன்ற வீரர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்கள். ஆனால் மத்தியூஸ் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். என்றாலும் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அப்பால் பார்ப்பதற்கு முன்னாள் தேர்வுக் குழு முயற்சிக்கவில்லை.
“கடந்த இரண்டு லங்கா பிரீமியர் லீக் பருவங்களிலும் நான் நன்றாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட்டபோதும், துரதிருஷ்டவசமாக டி20 உலகக் கிண்ணத்திற்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்பதோடு அதற்கான காரணமும் எனக்கு தரப்படவில்லை” என்கிறார் மத்தியூஸ்.
கடந்த மூன்று (2021, 2022, 2023) லங்கா பிரீமியர் லீக் தொடர்களையும் பார்த்தால் மத்தியூஸின் துடுப்பாட்ட வேகம் கிட்டத்தட்ட 130 ஐ எட்டி இருந்ததோடு அவரது துடுப்பாட்ட சராசரியும் 35 ஓட்டங்கள் வரை இருந்தது. பல போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரராகவும் இருந்து வந்தார். கழகமட்ட ஒருநாள் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக சோபித்தார்.
என்றாலும் அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இலங்கை அணிக்கு அழைக்கப்படவில்லை. இத்தனைக்கும் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. என்றாலும் மத்தியூஸ் பொருட்படுத்தப்படவில்லை என்பதே அவரது கோபத்திற்குக் காரணம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்தியூஸ் இலங்கை அணிக்காக ஆடிய ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 9 மாத்திரம் தான்.
என்றாலும் புதிய தேர்வுக் குழுவின் வருகை மற்றும் தனக்கு நெருக்கமானவரான வனிந்து ஹசரங்க டி20 அணித் தலைவராக நியமிக்கப்பட்டது மத்தியூஸின் வருகையை உறுதி செய்திருக்கிறது.
மத்தியூஸ் இப்போது டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் இன்னும் ஐந்து மாதங்களில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறப்போகிறது. அதற்கு மத்தியூஸின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள புதிய தேர்வுக் குழு எதிர்பார்ப்பது தெரிகிறது.
“என்னுடன் பேசிய புதிய தேர்வாளர்கள் தெளிவாக உள்ளனர். எதிர்காலம் பற்றிய எனது திட்டம் என்ன என்பதை கேட்டறிந்த அவர்கள், அவர்களின் திட்டங்கள் பற்றியும் கூறினார்கள். எம்மிடையே சிறந்த உரையாடல் ஒன்று இடம்பெற்றது. சில ஓவர்களை என்னால் வீச முடியுமாக இருந்தால், டி20 உலகக் கிண்ணத்திற்கான அவர்களின் திட்டத்தில் நான் இருப்பதாகக் கூறினார்கள். அணிக்கு எந்த வகையில் உதவ முடியுமாக இருந்தாலும் நான் அதனைச் செய்வேன் என்று கூறினேன்” என்றார் மத்தியூஸ்.
மத்தியூஸின் கிரிக்கெட் வாழ்வு ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதற்கு காயம் ஒரு முக்கிய காரணம் என்பதோடு அவர் பந்துவீச்சை நிறுத்திக் கொண்டதும் மற்றொரு முக்கிய காரணி. ஒரு சகலதுறை வீரராகவே அவர் இலங்கை அணியில் இடம்பிடித்தார்.
ஆரம்ப காலத்தில் அவரது பந்துவீச்சு மிக நேர்த்தியாக இருந்தது. இலங்கைக்கு மிகச் சிறந்த ஒருநாள் அணி ஒன்று இருந்த 2007 மற்றும் 2014 காலப்பகுதியில் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மத்தியூஸ் இடம்பெற்றிருந்தார். டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் அவர் அடிக்கடி பந்து வீசினார். என்றாலும் தொடர்ச்சியான உபாதைகளால் பந்துவீச்சில் இருந்து விலகிய அவர் பிரத்தியேக துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்தார்.
என்றாலும் அண்மைக் காலத்தில் அவர் மீண்டும் பந்துவீச ஆரம்பித்திருக்கிறார். “எல்.பி.எல். தொடரில் நான் பந்துவீசுவதோடு (கழகமட்ட) ஒரு நாள் போட்டிகளிலும் நான் அண்மைக் காலமாக பந்து வீசி வருகிறேன். என்னால் சில ஓவர்களை வீச முடியுமாக இருந்தால் அணியை சமநிலைப்படுத்த முடியுமாக இருக்கும் என்பதோடு அணித் தலைவரால் மேலதிக பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவது பற்றி தீர்மானிக்க முடியுமாக இருக்கும்” என்றார்.
எப்படியோ அடுத்த டி20 உலகக் கிண்ணத்தில் மத்தியூஸை வைத்து திட்டம் வகுப்பது தெரிகிறது. அவரது திறமையுடன் அனுபவமும் அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேற்கிந்திய தீவுகளின் மந்தமான, தாழ்வாக பந்து எழும் ஆடுகளங்கள் மத்தியூஸின் பந்துவீச்சுக்கு உதவியாக இருக்கும். அதேபோன்று மத்தியூஸின் வருகை இலங்கை மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் இருக்கும் குறையை நீக்குவதற்கு இப்போதைக்கு கச்சிதமான தேர்வாக இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்