கல்
பாதையோரத்தில்
ஒரு கல்
பார்ப்பாரின்றி கிடந்தது.
வருவோரும்
போவோரும்
அதை உரசிப் பார்ப்பதில்
உவகை கொண்டார்கள்.
சிலர்
அதன் முதுகிலமர்ந்து
இளைப்பாறினார்கள்
பலர்
அதன் முதுகில் தேய்த்து
செருப்பின் சேறு போக்கினார்கள்
இன்னும் சிலர்
அதை உதைத்தார்கள்
உருட்டினார்கள்
உமிழ்ந்து விட்டும் போனார்கள்
ஆனால்
அந்த கல் நெஞ்சம்
கலங்கவில்லை.
ஒரு நாள்
சிற்பி ஒருவன்
அந்த தெரு வழியே
உளியோடு வந்தான்
அவனின்
கலைக் கண்களுக்கு
அந்தக் கல்
காவியமாகப்பட்டது
_
தொட்டுப் பார்த்தான்
துடைத்துப் பார்த்தான்
தட்டிப் பார்த்தான்
தடவிப் பார்த்தான்
சிற்பியின்
கருணை கைகள் பட்டு
அந்த கல்லுக்குள்ளும்
ஈரம் கசிந்தது.
_
கல்லுக்குள் ஈரம் காணா
அந்த கலைஞன்
கல்லைக் கீறினான்
கிழித்தான்
வேண்டாத பகுதிகளை
வெட்டி ஒதுக்கினான்
கல்
அது
அன்பு காட்டி
அரவணைத்து
அடியோடு அழிக்கும்
ஒரு நயவஞ்சக துரோகியாய்
சிற்பியைப் பார்த்தது.
சில நொடிக்குள்
எல்லாம் முடிந்தது
தூசு தட்டி துடைத்து
தோளில் சுமந்து
தெருச் சந்தி மேட்டிலே
அந்தக் கல்லை
அமர வைத்து
அழகு பார்த்தான் சிற்பி.
என்ன ஆச்சரியம்
உதைத்தவர்களும்
உருட்டியவர்களும்
உமிழ்ந்தவர்களும்
கைகூப்பி வணங்கினார்கள்
செல்பி எடுத்து
செல் போனில் பரப்பினார்கள்
வெறும் கல்
கலையாகி
சிலையாகி
சிற்பமாகி
சிலிர்த்து நிற்கிறது.
உளியும்
வலியும் தந்த
சிற்பியைப் பார்க்கிறது.
வேண்டாதவைகளை
வெட்டி ஒதுக்கி
உன்னத உருக்கொடுத்த
அந்த கலைஞன்
கல்லுக்கு கடவுளாகிறான்
அந்த கல்லு சொல்கிறது
என்னைப் போல்
நீயும் ‘கல்’
அப்போது
நீ
கலையாவாய்
சிலையாவாய்
சிற்பமாவாய்
இன்னும் பல
வண்ணமாவாய்