வறண்ட நிலத்தை யெல்லாம்
வளமான சோலை யாக்க
வெருண்டுதான் தா முழைத்து
வெற்றிகள் கண்ட போது
பூரித்துதான் போன திங்கு
பாட்டாளிக் கூட்ட மொன்று
பாடுபட்டு தா முழைத்து
பயிர் நட்டி செழிப்பாக்கி
ஏர் பிடித்து வய லுழுது
ஏற்றம் பல கண்டபோதும்
ஏங்கித்தான் போன திங்கு
ஏமாளிக் கூட்ட மொன்று
இத்தரை மீதில் தனக்கு
எத்தனை இடர் வந்தும்
நித்தமும் இந் நிலத்தில்
நெல் விதைத்து பாடுபட்டும்
வெத்தியாய் போன திங்கு
விவசாயி கூட்ட மொன்று
மழை வெய்யில் மறந்து
மாடுபோல் மண் புரண்டு
மலை மலையாய் தானியம்
மன முவந்து கொட்டும்
விலை யுயர்ந்த சாதி
விவசாயி தா னென்பேன்
காடு வெட்டி களனியாக்கி
கரடு முறடை பாதையாக்கி
நாற்று நட்டு காத்திருந்து
நாடு செழிக்க பார்த்திருக்கும்
ஈடு இல்லா ஒரு சாதி
அது என்னுயிர் விவசாயி
உலகை உயர்த்தும் உழவா
ஒதுங்கி வாழ்வது சரியா
தாழ்ந்த இட முனக்கு
தவிக்கு தய்யா எனக்கு
தாழ்வே யில்லா விவசாயி
தரணியில் நீதான் உயர்சாதி