நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டிலும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படும் தேசிய தைப்பொங்கல் விழா இன்று 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை ஹற்றன் டன்பார் மைதானத்தில் நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசியுடனும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் பங்களிப்புடனும் இவ்விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியின் ஓரங்கமாக இந்த விழாவை நடத்துவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்த விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா. உப தலைவர் மருதபாண்டி இராமேஸ்வரன் எம்.பி. உட்பட இ.தொ.கா.வின் பிரமுகர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.