தமிழகத்தில் தஞ்சம் புகுந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச அங்கீகாரத்துடனான இலங்கை கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. கடந்த 19ஆம் திகதி சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முதற்கட்டமாக 200 பேருக்கு இவ்வாறு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கையில், பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின் போது, இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் இலங்கைக்கு திரும்புவதாயினும் வெளிச் செல்லும் பாஸ்கள் மாத்திரமே இதுவரை வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அரசு வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகளை வழங்கியதாக தெரிவித்தார்.
உலகில் வேறெங்கிலும் இதற்கு முன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் என்பதுடன், சர்வதேச அங்கிகாரம் பெற்ற இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதனூடாக உலகின் எப்பகுதிக்கும் செல்லும் தகுதியை இந்திய வாழ் இலங்கை அகதிகள் இப்போது முதல் பெற்றுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஈடிணையற்ற தமது ஒத்துழைப்புகளை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், வெளியுறவுத்துறை செயலக அதிகாரிகள், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரட்ண, சென்னைக்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துக்கொண்டார்.
இக்கோரிக்கையை நிறைவேற்ற பல வருடகாலமாக அவ்வப்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், அவை சாத்தியப்படாதிருந்ததால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் இந்த அகதிகளுக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதென்பது சுமார் ஒரு இலட்சம் அகதிகளுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
40 வருடங்களாக தாய்நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து நலன்புரித் திட்டங்களுக்குள் உள்வாங்கி அகதி முகாம் என்ற சொல்லை மாற்றி மறுவாழ்வு நிலையம் என உருவாக்கிய தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றியையும் பாராட்டையும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.