Home » சகல அபிவிருத்தி திட்டங்களும் பெப்ரவரி முதல் மீள ஆரம்பம்

சகல அபிவிருத்தி திட்டங்களும் பெப்ரவரி முதல் மீள ஆரம்பம்

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

by Damith Pushpika
January 21, 2024 6:10 am 0 comment

இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னர், அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபாவும் கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன,

“இந்த சவாலான ஆண்டில் வருமானம் மற்றும் செலவுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும். அதில் 1,265 பில்லியன் ரூபா அதாவது 72% அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. மேலும், சமுர்த்தி உட்பட வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 506 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வரி வருமானம் இந்த இரண்டு செயல்பாடுகளுக்கு செலவிடவே போதுமானதாக உள்ளது. மேலும் நாம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டியை செலுத்த 1,065 பில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டும். மேலும், 715 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காக கடன் பெற்று செலவிடப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் 5 வருடங்களை தவிர முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பு எதுவும் இருக்கவில்லை.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 1,550 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. சுங்கத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகள் மூலம் 922 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மோட்டார் வாகன திணைக்களம் 20 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. 219 பில்லியன் ரூபா வரி அல்லாத வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 16 பில்லியன் ரூபா நன்கொடைகளாக பெறப்பட்டுள்ளன. பல்வேறு வைப்புத்தொகைகள் மூலம் 303 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும், மக்களிடமிருந்தும் மற்றும் ஏனைய அனைத்து வகையிலும் 3,201 பில்லியன் ரூபாவை 2023ஆம் ஆண்டில் திறைசேரி பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டை விட அதீத முன்னேற்றம் என்பதைக் கூற வேண்டும். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் 1,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதை விட வேகமாக செலவுகள் அதிகரித்துள்ளன.

அரச ஊழியர் சம்பளம், நலன்புரி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட விடயங்களுக்காக 2,160 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2,263 பில்லியன் ரூபா வட்டி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் அரசாங்கம் நாளாந்த செலவுகளுக்காக 4,394 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. அந்த ஆண்டில் அரச வருமானம் 3,201 பில்லியன் ரூபா. எனவே, 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு போதுமான வருமானம் பெறப்படவில்லை.

ஆனால் 2023ஆம் ஆண்டில் 7,727 பில்லியன் ரூபா திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் 8,898 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. திறைசேரியிலிருந்து 13,292 பில்லியன் ரூபா வெளியே சென்றுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு கிடைத்த நிதியின் அளவு 3,201 பில்லியன் ரூபா மாத்திரமே ஆகும்.

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் 10,091 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. இந்தக் கடன்கள் உள்நாட்டில் திறைசேரி பத்திரங்கள் மற்றும் திறைசேரி பிணைமுறிகள் மூலம் பெறப்பட்டுள்ளன.

இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்து கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

இந்த ஆண்டு வீதிகளை அபிவிருத்தி செய்ய உலக வங்கி கடன் உதவியின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளோம். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வீதிகளை புனர்நிர்மாணம் செய்ய சவூதி அரேபியாவின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இந்த சிரமங்களுக்கிடையில் கூட மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க நாம் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division