மேற்குலக வாழ்க்கைக்காக ஏங்குகின்ற மக்கள் பலர் நம்மத்தியில் உள்ளனர். மேற்குலக நாடுகளில் ஏதாவதொன்றுக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிட வேண்டுமென்பது பலரது கனவாகும். அக்கனவு நிறைவேற வேண்டுமென்பதற்காக எத்தகைய ‘விலை’ கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர்.
அந்த ‘மேற்குலகக் கனவு’ தற்போது நம்மக்கள் மத்தியில் மிகவேகமாகப் பரவி விட்டது. முன்னொரு காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்தான் மேற்குலகம் நோக்கிப் புலம்பெயர்வதில் அதிக நாட்டம் காட்டினர். அதற்குக் காரணமும் இருந்தது. யுத்தம் உச்சகட்டத்தில் நிலவிய அன்றைய வேளையில் அம்மக்களுக்கு வேறு தெரிவு இருந்ததில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்வது மாத்திரமே நோக்கமாக இருந்தது.
இன்று யுத்தமுமில்லை, அச்சமுமில்லை. ஆனாலும் புலம்பெயர வேண்டுமென்ற அதீத ஆசை பலரை இப்போது ஆட்டிப் படைக்கின்றது. இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை அதற்கான காரணமாக பலரும் கூறுகின்றனர். மேற்குநாடுகளுக்குச் சென்றால் பொருளாதார நெருக்கடியின்றி வாழலாமென்பது அவர்களது எண்ணமாக இருக்கின்றது.
மக்கள் பலரது இன்றைய கனவு கனடா தேசம் ஆகும். கனடாவில் மாத்திரம் பொருளாதார நெருக்கடி இல்லையென்பது அவர்களது நம்பிக்கையாகும். அங்கு தொழில்வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றதென்று நம்மக்கள் நம்புகின்றார்கள். இல்லாது போனால் அந்நாடு உதவித்தொகையை அள்ளித் தருமென்று அவர்கள் நினைக்கின்றார்கள்.
இந்த இரண்டுமே அசட்டுத்தனமான நம்பிக்கைகளாகும். கனடா மாத்திரமன்றி, மேற்குலக நாடுகள் எதிலுமே இன்று நிலைமை முன்னரைப் போன்று இல்லை. அங்குள்ள அத்தனை நாடுகளுமே புலம்பெயர் மக்களால் நிரம்பி வழிகின்றன. வகைதொகையின்றி வந்துசேருகின்ற மக்களை அந்நாடுகள் எத்தனை காலத்துக்குத்தான் தாங்கிக் கொள்வது?
இலங்கை மாத்திரமன்றி, உலகில் ஏராளமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து மேற்குநாடுகளுக்குப் போய்ச் சேருகின்றார்கள். புலம்பெயர்ந்து வருவோரைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அந்நாடுகள் திணறுகின்றன, புதிதுபுதிதாக கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தொடங்கி விட்டன. கனடா போன்ற நாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தோர் கூறுகின்ற ‘சோகக்கதைகள்’ இங்கு வந்து சேருகின்றன.
இலங்கையில் அருமையான அரசாங்கத் தொழிலை விட்டுவிட்டு வீணாக வந்து சேர்ந்து விட்டோமே என்று பலரும் வெளிப்படையாகவே சமூகவலைத்தளங்களில் பேசத் தொடங்கி விட்டனர். அங்கு தொழில்வாய்ப்புப் பெறுவது மிகக்கடினம். அவ்வாறு சிறுதொழில்வாய்ப்புக் கிடைத்தாலும் இரவுபகலாக உழைத்தால்தான் வாழ முடியுமென்பது பின்னர்தான் பலருக்குப் புரிகின்றது.
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி பாரதூரமாக இருந்ததென்பதும், அந்நெருக்கடி தற்போது படிப்படியாக நீங்கி வருவதென்பதும் தெரிந்த விடயம். ‘மேற்குலகக் கனவு’ என்பது தூரத்துப் பச்சை என்பது விஷயமறிந்தவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.