இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர், கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்துக்கு ஜனவரி 12ஆம் திகதி விஜயம் செய்திருந்தனர். இலங்கைக்கான தமது விஜயத்தின் போது பங்கேற்கவிருந்த தொடர் விஜயங்களின் அங்கமாக இந்த பயணம் அமைந்திருந்தது.
திக்ஹேன பாடசாலையின் மாணவர்களின் பாரம்பரிய நாட்டிய நிகழ்வுடன் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Arches of Awe’ கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் II மற்றும் எடின்பரோ டியுக் அவர்களை வரவேற்கும் முகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 21 தோரணங்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பலநூற்றாண்டு காலம் பழமையான இந்த தோரணங்களை ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் அவதானிக்க முடியும். பாரம்பரிய சமய விழுமியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த தோரணங்கள், அதிர்ஷ்டம், வெற்றி ஆகியவற்றைக் குறிப்பதுடன், விருந்தினர்களை வரவேற்கும் வகையிலும் அமைந்திருந்தன.
ஐக்கிய இராஜ்ஜியம் – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 75 வருடங்கள் பூர்த்தியை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் பணியாற்றியிருந்த இலங்கையின் முன்னணி கலைச் சங்கங்களுடனான சந்திப்பொன்றும் இதனைத் தொடர்ந்து நடைபெற்றது.