எதிர்கால கிரிக்கெட் வீரர்களை தீர்மானிக்கும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. இந்தத் தொடர் இலங்கையில் நடக்க வேண்டியது. சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாலேயே போட்டிகள் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.
இதனால் சொந்த மண்ணில் ஆடும் சந்தர்ப்பத்தை இழந்த இலங்கை இளையோர்கள் அந்த சாதக சூழலையும் இழந்துவிட்டார்கள். இதற்கு முன்னர் இரண்டு முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை நடத்தி இருக்கும் இலங்கை, அதில் ஒன்றில் இந்தத் தொடரின் உச்சபட்ச பெறுபேறாக இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
அதாவது 2000 ஆம் ஆண்டு இலங்கை இளையோர் உலகக் கிண்ணத்தை நடத்தியபோது மலின்த கஜனாயக்க தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் அதில் இந்தியாவிடம் கிண்ணத்தை பறிகொடுத்தது. பின்னர் 2006 ஆம் ஆண்டு இந்த உலகக் கிண்ணத்தை கடைசியாக நடத்திய பின் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியை நடத்தும் வாய்ப்பையே இலங்கை பறிகொடுத்தது.
எப்படியோ இம்முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. முந்தைய தொடரில் தாம் பெற்ற நிலை அடிப்படையில் 11 அணிகள் நேரடித் தகுதி பெற்றன. இதில் இலங்கை உட்பட நடப்புச் சம்பியன் இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே மற்றும் போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா அடங்கும்.
எஞ்சிய ஐந்து அணிகளும், அதாவது நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்கா பிராந்திய தகுதிகாண் தொடரில் ஆடியே இம்முறை தொடருக்கு தகுதி பெற்றன. இந்த 16 அணிகளும் ஆரம்ப சுற்றில் நான்கு அணிகளைக் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன. இதில் ஏ குழுவில் இந்தியா, பங்களாதேஷ், அமெரிக்கா, அயர்லாந்து, பி குழுவில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, சி குழுவில் அவுஸ்திரேலியா, இலங்கை, சிம்பாப்வே, நமீபியா மற்றும் டி குழுவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் இடம்பெற்றுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் மற்றும் பெப்ரவரி 11 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டி உட்பட மொத்தமாக 41 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்திற்கு கொழும்பு றோயல் கல்லூரியின் சினெத் ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இடது கை துடுப்பாட்ட வீரரான சினெத், இலங்கை இளையோர் அணிக்கு தலைமை ஏற்று அனுபவம் பெற்றவர் என்பதால் அவரது தேர்வு எதிர்பார்க்கப்பட்டது.
15 பேர் கொண்ட இந்த குழாத்தில் தொடர்ந்து இலங்கை இளையோர் அணியில் ஆடும் பல வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் வெளிநாட்டில் பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து டுபாயில் கடைசியாக நடந்த 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத்தில் சோபிக்கத் தவறிய பல வீரர்கள் இந்தக் குழாத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இதன்படி அணித் தலைவர் சினத்துடன் உப தலைவர் மல்ஷ தருப்பத்தி, தினுர களுபஹன, விஹாஸ் தெளமிக்க, கருக்க சங்கேத், விஷ்வ லஹிரு, புலிந்து பெரேரா, ரவிஷான் பெரேரா, ருசந்த கமகே, ஷருஜன் ஷன்முகநாதன், ரவிஷான் நெத்சர மற்றும் விஷான் ஹலம்பகே ஆகியோர் அணியில் தமது இடத்தை தக்கவைத்திருக்கிறார்கள்.
19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்ற அணியில் இருந்து ஒரே மாற்றமாக சுபுன் வாதுகே சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது பாடசாலையான கண்டி, திரித்துவக் கல்லூரியின் சக வீரர் தினுக தென்னகோனின் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை இளையோர் அணி இன்று ஜனவரி 14 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிராகவும் ஜனவரி 17 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராகவும் பயிற்சிப் போட்டிகளில் ஆடும். ஜனவரி 21 ஆம் திகதி சிம்பாப்வேக்கு எதிரான போட்டியுடன் இளையோர் உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கும் இலங்கை அணி தொடர்ந்து ஜனவரி 23 நமீபியாவையும் ஜனவரி 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இரண்டு குழுக்களாக மொத்தம் 12 அணிகள் ஆடும் சுப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, நீடித்து திறமையை வெளிப்படுத்தும் அணிக்கே கிண்ணத்தை வெல்ல முடியும்.
இளையோர் உலகக் கிண்ணம் என்பது ஒவ்வொரு அணியினது எதிர்கால கிரிக்கெட்டாகும். இந்தக் கட்டத்தில் சோபிக்கும் அணிகளே பிரதான சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கும். இந்தியா அதிகபட்சமாக ஐந்து முறை சம்பியன் கிண்ணத்தை வென்றிருக்கிறது.
19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களான இயோன் மோர்கள் (13 போட்டிகளில் 606) மற்றும் பாபர் அஸாம் (12 போட்டிகளில் 585) போன்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் முன்னணி வீரர்களாக முன்னேறி இருக்கிறார்கள்.
என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் சோபித்த அனைத்து வீரர்களும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஆடியவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலான வீரர்கள் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் கட்டமைப்பில் இருந்து முன்னேறியவர்கள் அல்ல. என்றாலும் தேசிய அணியின் எதிர்காலத்தை அளவிடுவதற்கு இந்த 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் முக்கியமானதாக உள்ளது.