Home » கொலை செய்யத் தூண்டுமா பள்ளிப் பருவக் காதல்?

கொலை செய்யத் தூண்டுமா பள்ளிப் பருவக் காதல்?

நெடுஞ்சாலையில் கொல்லப்பட்ட துலங்கலியின் மரணத்தில் துலங்கிய மர்மம்

by Damith Pushpika
January 14, 2024 6:14 am 0 comment

பாடசாலை காதல் பலருக்கும் அழகான நினைவுகளைத் தரும். அழகாக மனதில் எங்கோ ஒரு மூலையில் அது குடியிருக்கும். பள்ளியில் காதலித்து அந்த வாழ்க்கைதான் வேண்டுமென்று உறுதியாய் இருந்து திருமணம் செய்வோர் மிகச் சொற்ப அளவினரே.

’96’, ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படும், பள்ளிக்காதலின் சுவராஸ்யமான உணர்வுபூர்வமான காட்சிகள் பலருக்கும் கடந்த காலத்தை ஞாபகப்படுத்தும். ஆனால் அதே பள்ளிக்காதல் ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான ஒன்றாக மாறியிருப்பது இன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவர் பெயர் துலங்கலி அனுருத்திகா. வயது 45. 11 வயது பெண்பிள்ளையின் தாய். சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரியாக கடமையாற்றும் இவர், தினமும் தனது கணவருடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ ஊடாக சென்றுவருவது வழமை. எனினும் வழமைபோல் அன்று (9) கணவருடன் வேலைக்கு சென்றாலும் மாலையில் அதிக மழையுடனான காலநிலை காணப்பட்டமையால் நேரத்தோடு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்ஸில் செல்ல தீர்மானித்தார் துலங்கலி. அதுவே அவரின் இறுதிபயணமாக இருக்கும் என்பதை அன்று அவர் அறிந்திருக்கவில்லை.

அன்று ஜனவரி மாதம் 9 ஆம் திகதி. மாலை 5 மணியிருக்கும். நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்ஸில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவாயில் அருகில் வந்திறங்கிய துலங்கலி, தனது கையடக்க தொலைபேசியை பார்த்தவாறு வீதியை கடந்து, தொலைபேசி செயலியில் பதிவுசெய்த முச்சக்கர வண்டி சாரதி வரும் வரை காத்திருக்கின்றார். இதற்கிடையில் கறுப்பு நிற காரொன்று அவரைக் கடந்து வேகமாகச் சென்றது. துலங்கலி முச்சக்கரவண்டி வரும் வரை காத்திருந்தார். பலமுறை முச்சக்கரவண்டி சாரதிக்கு அழைப்பை ஏற்படுத்தி விரைவாக வருமாறு அறிவுறுத்தினார். எனினும் முச்சக்கரவண்டி வர தாமதித்தது. அவரை கடந்து சென்ற அந்த கறுப்பு நிற காரிலிருந்து இறங்கி வந்த நபரொருவர் பலரும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே கூரிய ஆயுதத்தால் சராமரியாக துலங்கலியை தாக்கினார். அவர் தனது கைப்பையை வயிற்றில் வைத்து மறைத்துக் கொண்டு வலி தாங்கமுடியாமல் நிலத்தில் வீழ்ந்தார். எனினும் அதன் பின்னர் கூட அந்த படுபாதகன் விடுவதாய் இல்லை. கூரிய ஆயுதத்தால் பல இடங்களில் தாக்கினார். பலரும் பார்த்து கொண்டிருக்கையிலேயே இக்கொடூர சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவாயிலில் அரங்கேறியது. துலங்கலி இரத்தவெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார். அந்நபர் கத்தியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு காரில் ஏறி ஹோமாகம நோக்கி தப்பியோடினார். இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களில் பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே சம்பவ இடத்துக்கு கஹதுடுவ பொலிஸார் வந்தடைந்தனர்.

துலங்கலியை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அவர் வழியிலேயே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் கணவருக்கு தகவல் வழங்கப்பட்டு துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே துலங்கலியின் பாடசாலைக் காதல் பற்றிய பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. துலங்கலியின் பாடசாலை காதலனுடைய இரு தொலைபேசி இலக்கங்களை கணவர் பொலிஸாருக்கு வழங்கினார். எனினும் அதில் ஒன்று நிறுவனமொன்றின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கம். அந்த நிறுவனத்தின் பெயரை இணையத்தில் கண்டறிந்த பொலிஸார் அதனூடாக நிறுவன உரிமையாளரின் அடையாள அட்டையை கண்டுபிடித்தனர். அது கொழும்பிலுள்ள வெளிநாட்டு வீசா வழங்கும் நிறுவனம் என்பது இதன்போது தெரியவந்தது. அதுமட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள பாரிய போதைப்பொருள் வியாபாரியின் மூத்த சகோதரரான 47 வயதுடைய பிரசாத் எனும் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இதன்போது தெரியவந்தது.

சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கஹதுடுவ பொலிஸார், சந்தேகநபரின் புகைப்படத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அடையாளப் பிரிவிற்கு வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சந்தேகநபரான பிரசாத் மலேசியா எயார்லைன்ஸ் விமானமான MH-178 இல் மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

இதன்போதே முக அடையாளம் காணும் கமரா அமைப்பு மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரிடம் கடவுச் சீட்டைக் கேட்ட போது. தனது மனைவியுடன் வெளிநாடு செல்வதற்காக வந்ததாகவும் கடவுச்சீட்டு மனைவியிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தொடர்ச்சியான விசாரணைகளின் போது, சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளுக்கு தனது கடவுச்சீட்டை வழங்கினார். இதனையடுத்தே சந்தேகநபர் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேநபரிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

பிரசாத், -துலங்கலி இருவரும் பாடசாலைக் காலத்திலேயே ஒருவரையொருவர் காதலித்தவர்கள் என்றும் 1996ஆம் ஆண்டளவில் பிலியந்தல பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்றனர் என்பதும் தெரியவந்தது. இவர்களுடைய காதலை ஆசிரியர்கள், சக நண்பர்கள் என பலரும் அக்காலத்தில் அறிந்திருந்தனர். எனினும் இரு வீட்டாருக்கும் தெரியவர கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் பாடசாலைக் காதலுக்கு இடைநடுவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருவரும் வேறுவேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

பிரசாத் உயர்தர பரீட்சை எழுதிய கையோடு வேறொரு பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

நாட்கள் உருண்டோடியது. பிரசாத்துக்கு நான்கு பிள்ளைகள். துலங்கலி வைத்தியரொருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள்.

பிரசாத் பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தொழில்புரிந்தார். டுபாய், சிங்கப்பூர் , மாலைதீவு என 10க்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்புரிந்தார். இந்நிலையிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட் நெருக்கடியான காலப்பகுதியில் பிரசாத் நாடு திரும்பினார்.

இதனிடையே ஒரு நாள் துலங்கலியை சந்திக்கும் வாய்ப்பு பிரசாத்துக்கு கிடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குமிடையில் விட்டுப்போன பாடசாலை காதல் துளிர்விட ஆரம்பித்தது.

பிரசாத் துலங்கலியை சந்திப்பதற்காக அடிக்கடி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவாயிலுக்கு வருவது வழமை. நிறுவன போக்குவரத்து சேவை பஸ்சில் வரும் துலங்கலியை பிரசாத் அழைத்துச்செல்வான். நாளடைவில் இதை அறிந்த பிரசாத்தின் மனைவி அவரை விட்டு பிரிந்தார்.

எனினும் பிரசாத் துலங்கலியை விட்டு விலகவில்லை. அவள் மீது உரிமையுடன் நடந்துகொண்டான். அது துலங்கலிக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. எப்போதும் துலங்கலி மீது சந்தேகப்பட்டு சண்டைபோட்டான்.

இதனால் சுதாகரித்துக்கொண்ட துலங்கலி, எல்லாவற்றையும் நிறுத்திகொள்வோம் என பிரசாத்திடம் வேண்டினார். எனினும் பிரசாத் தொடர்ந்து அவளை தொந்தரவு செய்தான். அடிபட்ட நாகம் போல அவளை கொலை செய்யும் அளவுக்கு துணிந்தான். இதுதொர்பில் பிரசாத் வழங்கிய வாக்குமூலத்தில்,

துலங்கியுடனான உறவு காரணமாகவே என் மனைவி என்னை விட்டு பிரிந்தார். அது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஒரு நாள் துலா திடீரென்று இது எல்லாவற்றையும் நிறுத்துவோம் என்றாள்.

அதற்கான காரணத்தை தேடியபோது அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவளால் தான் எல்லாவற்றையும் நான் இழந்தேன். என் மனைவி, குழந்தைகள் என்னை விட்டுப் பிரிந்தார்கள். எனவே தான் எனக்கு கிடைக்காத பொருள் வேறு யாரும் சொந்தமாகக் கூடாது, என்றெண்ணி அவளை கொலைசெய்தேன் என அவன் தெரிவித்தான்.

வசந்தா அருள்ரட்ணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division