இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 2500 நிறுவனங்களிடையே எட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் மாத்திரமே உள்ளன என பேராசிரியர் ஸ்ரீமல் அபேரத்ன தெரிவித்தார்.
இதில் பெரியதொரு பிரச்சினை இருப்பதாகக் கூறிய அவர், இந்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தெளிவான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் எழுதப்பட்ட “2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வு கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை மாலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜகத் குமார, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், லேக்ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சிசிர பரணதந்திரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நூலில் உள்ளடக்கம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து அதன் முதற்பிரதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு விடை காணாமல் நாடு நத்தை வேகத்தில் பயணிக்குமாயின் மீண்டும் எழுந்து வர பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இலங்கையில் பிரதான வர்த்தகர்கள் 40 பேர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர். அவர்களில் எவரும் ஏற்றுமதியாளர்கள் இல்லை. உற்பத்தி நிறுவனங்களும் இல்லை. நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள்தான் அந்த பிரதான வர்த்தகர்களிடையே வந்திருந்தார்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.
பொருளாதாரத் துறையுடன் தொடர்புடைய 50க்கும் அதிக நூல்களை எழுதியுள்ள அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஆய்வுகளுடனான “2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீமல் அபேரத்ன மேலும் கூறியதாவது,
பொருளாதாரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம். மற்றது கொள்கை அடிப்படையிலான பொருளாதாரம். தற்போது இவை இரண்டையும் ஊக்குவித்து, பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாக் கொண்டு தற்போதைய பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்த கலாநிதி பந்துல குணவர்தன அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவு செலவுத் திட்டம் மற்றும் அந்நியச் செலாவணி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. வருமானத்தை விடவும் செலவு அதிகரித்ததால் கடன் பெறப்பட்டது. அதனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதிகமானவை வெளிநாட்டுக் கடன்களாகும். அவை டொலர்களில் பெறப்பட்ட கடன்களாகும். கடந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அவை ரூபாவினால் பெறப்பட்ட வருமானமாகும். டொலர்களின் மூலமே கடன்களைச் செலுத்த வேண்டும்.
எம்மால் டொலரை அச்சிட முடியாது. ரூபாய்களை அச்சிட எம்மால் முடிந்தாலும் அது டொலர்களுக்கும் தாக்கத்தைச் செலுத்தும். வரவு செலவுத் திட்டமும், அந்நிய செலாவணியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. அதற்கான பதிலைத் தேடாமல் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர முடியாது. தற்போது நாட்டுக்குள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைக்கின்றதுதானே என சிலர் கேட்கின்றனர்.
அந்நிய செலாவணி அதிகரிப்பு செழுமையின் அடையாளம் என்றாலும், அது நமது வறுமையின் பிரச்சினை. நம் நாட்டு மக்கள் அறிவுக்கு ஏற்ற சம்பளம் பெற முடியாததால், வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இது நமது வறுமை துயரம் தொடர்பான பிரச்சினையாகும். வியட்நாம் 25 ஆண்டுகளில் 5 பில்லியன் டொலர்களிலிருந்து 250 பில்லியன் டொலர்கள் வரை ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளது. அந்த காலப்பகுதியினுள் எம்மால் 12.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துக் கொள்ளவே முடிந்தது. ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சேமித்தால், ஒரு பில்லியன் டொலர்களை சேமிக்க இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகும்.
பேராசிரியர் பிரியங்க துனுசிங்க
இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகிறேன். 30 வருடங்களுக்கு முன்னர் கல்வித் துறையில் நான் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தைக் கற்பித்த ஆசிரியர். பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள புத்தகங்களை வாசிக்காவிட்டாலும் மறு பிறவியில் புத்தகங்களை உண்ணும் பூச்சியாக மாறியாவது அந்தப் புத்தகங்களை உண்ண வேண்டி ஏற்படும் எனக் கூறினார். அப்படியொரு பிறவியைப் பெறுமளவுக்கு அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி அல்ல என நான் நினைக்கிறேன்.
என்னையும் சேர்த்து ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாகக் கற்பித்த ஆசிரியர் அவர். ஜனசவிய மற்றும் முத்திரை அட்டைகளைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்தவர் அவர்,. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பொருளாதார பாடத்தைக் கற்பித்தார். அவ்வாறு கற்பித்த கௌரவம் அவருக்கு கிடைக்கவே வேண்டும். அன்று முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் ஆற்றிய உரைகளும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்காக ஆற்றப்பட்ட உரையும் இன்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன,
ஒரு மனிதனின் உள்ளத்திலிருக்கும் விடயங்களை இரண்டு முறைகளில் சமூகத்திற்கு வெளிப்படுத்த முடியும். அதில் ஒன்று பேசுவதின் மூலமாகும். அடுத்தது, பேனாவினைப் பயன்படுத்தி புத்தகம் ஒன்றை எழுதியாகும். நான் இந்த இரண்டையும் ஒரே தடவையில் செய்வதற்கு முயற்சித்தேன். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது 2022ஆம் ஆண்டிலாகும். அடுத்ததாக 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியிலாகும். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த போது, அது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அதைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு ஐம்பது நிமிடங்கள் கிடைத்தது. கதை மிகவும் பயனுள்ளதாக இருக்க, எனது வாதத்தை நிரூபிக்க பல புத்தகங்கள் மற்றும் பிற அறிவார்ந்த ஆதாரங்களில் இருந்து உண்மைகளை முன்வைக்க வேண்டும். உதாரணமாக, இந்நாட்டின் நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவிற்கு அமைய பாராளுமன்றத்துக்கு உள்ளது. அதிலிருக்கும் பிரிவு தொடர்பான உறுதியான புரிதலை வார்த்தைகளால் கூறக்கிடைக்காத காரணத்தால் அந்த பிரிவினை நான் முன்வைத்தேன். நான் இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர், 1989இல் முதன்முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபோது, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கன்னி உரையை ஆற்றியபோதும் இந்த நெருக்கடியை நான் கண்டிருக்கிறேன். என்று அந்தக் உரையில் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எனவே அந்தக் உரையை நான் முன்வைத்தேன்.
2048/50 ஆம் ஆண்டாகும் போது இலங்கை மக்கள் கடனைச் செலுத்தும் முறையினை இங்கிருக்கும் பலரால் வேறு உலகத்திலிருந்து பார்க்க முடியும். இது தற்காலிக நெருக்கடி அல்ல. மிகப் பெரியதொரு நெருக்கடி. எமக்கு 4843 பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட கடனின் கீழ் 665 மில்லியன் டொலரை வழங்குவதற்கும், வரவு செலவுத் திட்ட நிதிக்காக 850 மில்லியன் டொலரை வழங்கவும் உறுதியளித்துள்ளது. 800 மில்லியன் டொலரை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி 450 மில்லியன் டொலரை வழங்க இணங்கியுள்ளது. கடன் சலுகை கிடைக்கும் என நினைக்கிறேன். இவை கிடைக்காவிட்டால் எமக்கு மீண்டும் எரிபொருள் இல்லை. எரிவாயு இல்லை. உணவு மற்றும் பானங்கள் இல்லை. 2028ஆம் ஆண்டாகும் போது அந்நிய வள இடைவெளி 3911 பில்லியன்களாகும். இதில் 329 ஐ சர்வதேச நாணய நிதியம் வழங்கும். அதற்குப் பிறகு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் 600 மில்லியன் டொலரை வழங்கும். உலக வங்கி 300 மில்லியன் டொலரையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் டொலரையும் வழங்கும். 2027ல் சர்வதேச சந்தைக்கு சென்று 1.5 பில்லியன் இறையாண்மை பத்திரத்தை வெளியிட முடியும். அதுவரைக்கும் சர்வதேச சந்தைக்கு செல்ல முடியாது. 2027இல் தான் போக முடியும். இந்நூலில் அவை தொடர்பில் எழுதப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசாங்கங்களும் இந்த மூன்று விதிமுறைகளையும் ஒரே மாதிரியாக முன்னெடுத்திருந்தால், நாடு ஒருபோதும் வங்குரோத்து அடைந்திருக்காது.
பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
இந்த நூலின் பெயர் “2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” என்பதாகும். எமது இலங்கையின் நிதி அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டதா, அவற்றைப் பயன்படுத்துவதற்கு என்ன தடைகள் இருந்தன, நாம் எங்கு தவறு விட்டோம் போன்ற விடயங்களை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. தரவுகளை அடிப்படையாக வைத்தே நாம் ஒரு விடயத்தை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துகிறோம். அவர் அதற்காகப் பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார். தரவுகளுடன் ஒரு விடயத்தை முன்வைத்தால்தான் அதிக பெறுமதி இருக்கும். பொதுமக்களுக்கோ, வேறு எந்த ஒருவராலோ இது தொடர்பில் வாதங்களை முன்வைக்க முடியும். ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் வாதங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன. இவ்வாறான பணியினைச் செய்வதற்கு எல்லோரும் முன்வருவதில்லை. இந்த புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. நமது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரிய செய்தி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முக்கியமான உரையின் அவசியத்தை அவர் இந்நூலின் மூலம் எழுப்புகிறார். ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். இது மிகவும் சுவாரஸ்யமானது.
எம். எஸ். முஸப்பிர்