மூன்றாம் பிளாட்பாரத்திலிருந்து யாழ்தேவி எக்ஸ்பிரஸ் புகையிரம் காலை 6.00 மணிக்கு காங்கேசந்துறையை நோக்கிப் புறப்படும். இந்தப் புகையிரதம் ராகமை, பொல்கஹவலை, குருணாகல், மாஹோ சந்தி, கல்கமுவ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா….. ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்”
இந்த அறிவிப்பை முதன் முறையாகக் கேட்டது 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி திங்கட்கிழமையாகும். யாழ்தேவி தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலேயே இந்த அறிவிப்பை கேட்க முடிந்தது.
அதன் பின்னர் யாழ்தேவியின் பயணத்தில் படிப்படியாக வெயன்கொடை, தமுத்தேகம போன்ற இன்னும் புகையிரத நிலையங்கள் இணைந்து கொண்டதோடு, தற்போது யாழ்தேவியை விடவும் வேகமாகப் பயணிப்பதற்கு சேவைக்கு வந்த நகரங்களுக்கிடையேயான விரைவு புகையிரதங்களும் உள்ளன.
வடக்கு – தெற்கை இணைப்பதற்கு பல புகையிரத சேவைகள் தற்போது வந்துள்ள போதிலும், யாழ்தேவியின் அளவு வேறு எதுவும் பெயர் பதிக்கவில்லை.
யாழ்தேவிக்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது 1894 பெப்ரவரி 14ஆம் திகதியாகும். அந்த வழித்தடத்தில் பயணிகள் புகையிரதச் சேவைகள் 1905/1906 ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. அது இரவு தபால் புகையிரதச் சேவையாகும். சுமார் 12 மணிநேரம் சென்ற இரவு தபால் புகையிரதத்துக்கு மேலதிகமாக பகல் நேர புகையிரதச் சேவைக்கான தேவை ஏற்பட்டதால் யாழ்தேவி புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு யாழ்தேவிக்கு 1956ஆம் ஆண்டில் சுமார் 7 மணி நேரமும் 20 நிமிடங்களும் எடுத்தது. கொழும்புத் திட்டத்தின் கீழ் கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட எம் 2ஆம் தர புகையிரத என்ஜினின் மூலமாகவே அந்தப் புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அதன் வேகம் அதிகரித்தது 1975ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம் 4ஆம் தர புகையிரத என்ஜின் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னராகும்.
அதன்பிரகாரம் காலை 5.45 க்கு பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி காலை 9.35 க்கு அநுராதபுரத்தைச் சென்றடைந்து பகல் 1.00 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக யாழ்தேவியின் பயணம் 1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. வவுனியா வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட யாழ்தேவி 1989ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் கீழ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதிலும், அது 1990ஆம் ஆண்டிலிருந்து 24 வருடங்கள் தடைப்பட்டிருந்தது.
இந்தியன் இர்கான் நிறுவனத்தின் மூலம் அந்தப் புகையிரதப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஓமந்தைக்கு அடுத்ததாக காங்கேசந்துறை வரைக்குமான அனைத்து புகையிரத நிலையங்களும் இந்நாட்டின் பிரதான வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்டன.
அந்தப் பங்களிப்பு அவ்வாறிருந்தபோதிலும், மாஹோ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதைக்குத் தற்காலிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அதற்கான நிரந்தர தீர்வுகள் கிடைக்கவில்லை.
அந்நேரம் கொழும்பிலிருந்து காங்கேசந்துறை செல்ல யாழ்தேவி விரைவு புகையிரதத்திற்கு 8 மணி நேரமும், நகரங்களுக்கு இடையேயான விரைவு புகையிரதத்துக்கு 6 மணி நேரமும் எடுத்தது. நேர அட்டவணையில் அவ்வாறு இருந்தபோதிலும், புகையிரதப் வழித்தடத்தில் இருந்த பலவீனம் காரணமாக பயணத்திற்கு மேலதிகமாக இன்னும் 45 நிமிடங்களுக்கும் அதிக நேரம் எடுத்தது.
இது தொடர்பாக இந்திய உதவியின் கீழ் மாஹோ சந்திக்கும் ஓமந்தைக்கும் இடையிலான புகையிரதப் பாதையின் முழுமையான புனரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, அதனை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது படிப்படியாக பின்னோக்கிச் சென்று கொவிட் -19 தொற்றுநோய் காலத்தின் பின்னர், அது மேலும் மந்தமாகியது.
2014ஆம் ஆண்டு வடக்கு புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர், இந்திய கடன் திட்டத்திற்கு அமைய மாஹோ, ஓமந்தை புகையிரதப் பாதை நவீனமயமாக்கல் ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதற்கான கேள்வி மனு கோரப்பட்டது 2019ஆம் ஆண்டிலாகும். அதன்பிரகாரம், மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணியும் வடக்கு புகையிரதப் பாதையினை நிர்மாணித்த இந்திய அரச நிறுவனமான இர்கோனுக்கு வழங்கப்பட்டது.
எனினும் 2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரைக்கும் அது செயல்படுத்தப்படவில்லை.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலையீட்டின் மூலம், அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த கோபால் பாக்லே, இந்திய கடனுதவியின் கீழ் உடனடியாக அந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்தார்.
அதன்பிரகாரம், இந்தியன் இர்கோன் நிறுவனத்தின் தலைமையில் மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் நீளமான புகையிரதப் பாதை இரண்டு கட்டங்களாக முழுமையாக புனரமைக்கப்பட்டது.
மாஹோவிலிருந்து ஓமந்தை வரைக்குமான புகையிரதப் பாதையைப் (128 கிலோ மீற்றர்) புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைகள் மதவாச்சியில் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த முழுமையான வேலைத்திட்டம் 91.27 மில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படுகிறது.
இதனடிப்படையில் முதலாம் கட்டத்துக்கான பணிகள் கடந்த 2023 ஜனவரி 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரைக்குமான 61.6 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட புகையிரதப் பாதை முழுமையாக மூடப்பட்டு புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் கீழ் அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரைக்குமான பரசன்கஸ்வெவ, மதவாச்சி மற்றும் வவுனியா ஆகிய மூன்று புகையிரத நிலையங்கள் மற்றும் மிஹிந்தலை சந்தி, சாலியபுர, மெதகம, பூனேவ, இரட்டைப் பெரிய குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய உப புகையிரத நிலையங்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்படவுள்ளன.
ஆறு மாதங்களை அண்மித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்தப் பயணம் வெற்றியளித்ததோடு, அதன் பின்னர் கொழும்பிலிருந்து மீண்டும் வடக்குக்கான புகையிரதப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நவீனமயமாக்கப்பட்ட யாழ்தேவியின் பயண நேரத்தை ஏழரை மணித்தியாலங்களாக குறைக்க முடிந்தது.
அநுராதபுரத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடிந்தாலும் மாஹோவிலிருந்து அனுராதபுரம் வரைக்கும் புகையிரதத்தின் வேகம் மணிக்கு 5 கிலோ மீற்றரிலிருந்து 32 கிலோமீட்டர் எனும் மிக மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரைக்குமான புகையிரதப் பாதையை முழுமையாகப் புனரமைப்பு செய்ததன் மூலமும் முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது போனது. எனவே சில மாதங்களில் வடக்கு தெற்கு புகையிரத சேவையின் பின்னர் இரண்டாம் கட்டமான மாஹோவிலிலிருந்து அநுராதபுரம் வரையான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் கடந்த 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அப்பதை ஊடான புகையிரத பயணங்களும் நிறுத்தப்பட்டன.
கடந்த ஏழாம் திகதி கல்கமுவ புகையிரத நிலையத்தில் மாஹோ – அநுராதபுரம் புகையிரதப் பாதையின் புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல் செயலாளர் இரினா டாகூர்,
ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, புகையிரத பொது முகாமையாளர் எச். எம். கே. டப்ள்யூ. பண்டார, புகையிரத சிரேஷ்ட அதிகாரிகள், இந்திய இர்கோன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மாஹோ சந்தி புகையிரத நிலையத்திலிருந்து ரயில் பஸ் வண்டி ஒன்றின் மூலம் பயணித்து புகையிரதப் பாதையை அதிதிகள் பார்வையிட்டனர். இதன் போது பிரித்தானிய யுகத்திலிருந்து இன்றுவரைக்கும் பயன்படுத்தப்படும் 100 வருடங்களுக்கும் மேல் பழமையான டெப்லட் சமிக்ஞை முறை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு புகையிரத அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மாஹோ, – அனுராதபுரம் புகையிரதப் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் கல்கமுவ புகையிரத நிலையத்தில் அனைத்து முக்கியஸ்தர்களின் பங்களிப்புடனும் பாரம்பரிய நிகழ்வுகளுடனும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் மாஹோ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையான மொத்த புகையிரத வீதியும் முழுமையாக நவீன மயப்படுத்தப்படவுள்ளது.
இங்கு, 5 முக்கிய புகையிரதப் பாலங்களும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. புகையிரதப் பாதை தற்போதையதை விடவும் 500 மி.மீ (20 அங்குலம்) உயரத்தைக் கொண்டிருக்கும். எனவே, புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரதக் கடவைகளையும் அதற்கேற்ப நவீனப்படுத்த வேண்டும். அதற்காக புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத கடவைகள் தொடர்பான பணிகளை புகையிரதத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நவீனமயப்படுத்தலின் கீழ் அம்பன்பொல, கல்கமுவ, செனரத்கம, தமுத்தேகம, தலாவ மற்றும் சாவஸ்திபுர ஆகிய புகையிரத நிலையங்ளும், ரத்தெனிகம, அநுராதபுரம் புதிய நகரம் ஆகிய இரண்டு உப புகையிரத நிலையங்களும் முழுமையாக நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
புகையிரத வர்ண சமிக்ஞை கட்டமைப்பை முழுமையாக நவீனமயப் படுத்துவதற்காக இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 450 கோடி ருபா நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் 2024ஆம் ஆண்டு பொசன் பௌர்ணமி தினத்திலிருந்து அநுராதபுரம் வரை மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் நகரங்களுக்கு இடையேயான விரைவு புகையிரதத்தின் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்தாலும், யாழ்தேவி உள்ளிட்ட ஏனைய விரைவு புகையிரதங்களின் பயண நேரம் சுமார் 2 மணிநேரத்தாலும் குறையும். இது புகையிரத வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இயங்கும் மிகச்சிறந்த திறன் கொண்ட புகையிரதம் என்ற பெருமையை பதிவு செய்யும்.
அதனடிப்படையில் புகையிரதப் பாதையின் புனரமைப்பு நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் வடக்கு புகையிரதங்களின் பயண காலம் நகரங்களுக்கு இடையான விரைவு புகையிரதம் ஒன்றரை மணி மற்றும் யாழ்தேவி உள்ளிட்ட ஏனைய புகையிரதங்கள் 2 மணி நேரத்தினால் குறைவடையும்.
இந்த வருடத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக இருப்பது மாஹோ அநுராதபுரம் புகையிரதப் பாதையை முழுமையாகப் புனரமைப்புச் செய்யும் திட்டமாகும். இந்தப் புனரமைப்புடன் கல்கமுவ, தமுத்தேகம மற்றும் தலாவ புகையிரத நிலையங்களும் புதிய தோற்றத்தைப் பெறவுள்ளன.
தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணியினால் கொழும்பிலிருந்து மாஹோ வரை மாத்திரம் வடக்குப் புகையிரதம் பயணிப்பதால் அநுராதபுரத்திற்கு அல்லது யாழ்ப்பாணம் வரைக்கும் பயணிக்கும் பயணிகளுக்காக வீதி சீரமைக்கும் வரை 20 இ.போ.சபை பஸ்களை மாஹோவிலிருந்து அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் வரைக்கும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது அமைச்சரின் அறிவுரைகளுக்கு அமைவாகவாகும்.
அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையில் நான்கு புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் எச். எம். கே. டப்ளிவ். பண்டார தினகரனுக்குத் தெரிவித்தார். அதனடிப்படையில் அநுராதபுரத்திலிருந்து காலை 8.20 க்கும், பகல் 2.30 க்கும் காங்கேசன்துறை வரைக்கும், காங்கேசன்துறையிலிருந்து அநுராதபுரத்திற்கு காலை 6.00 மணி மற்றும் மாலை 2.40 மணிக்கும் புகையிரதச் சேவைகள் இடம்பெறும். அதேபோன்று பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் வரைக்கும் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின புகையிரதமும் மாஹோ சந்தி வரைக்கும் சேவையில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார். அதேபோன்று யாழ்தேவி புகையிரதமும் பழைய நேரத்திற்கே கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை வரைக்கும் சேவையில் ஈடுபடும் என்றும், அந்த புகையிரதம் மாஹோவிற்குச் சென்று அநுராதபுரத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கும் பஸ் வண்டிகளில் அல்லது அநுராதபுரத்திற்குச் சென்று யாழ்ப்பாணம் வரை புகையிரத்திலும் மீண்டும் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு புகையிரதப் பாதையின் அபிவிருத்தியுடன் மீண்டும் 50 வருடங்களுக்கு அந்தப் பாதையை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் பொது முகாமையாளர் தெரிவித்தார். இந்த பாதையை நவீனமயப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணம் மாத்திரமன்றி மன்னார் புகையிரதப் பயணிகளும் பெருமளவு நன்மையடைவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாரக விக்ரமசேகர தமிழில்: எம்.எஸ். முஸப்பிர்