ஒரு நாட்டை ஆட்சிசெய்யும் அரசாங்கத்தின் வருமானத்தில் பெரும் பங்காற்றும் விடயமாக வரி அறவீடு காணப்படுகிறது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவீனங்களுக்கான நிதியும் வரி வருமானம் போன்ற மார்க்கங்களிலிருந்து கிடைக்கப்பெறுவதே உலக வழக்கமாக இருக்கிறது.
இருந்தபோதும், இலங்கையில் கடந்த காலத்தில் வரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு வழி ஏற்படுத்தின என்பதை எவரும் மறக்க முடியாது.
வரி அறவீட்டைப் பொறுத்தவரையில் அது நேர்முகவரி மற்றும் மறைமுகவரி என இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. நேரடிவரி என்பது ஈட்டப்படும் வருமானம் தொடர்பில் நபர் ஒருவருக்கு அல்லது சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். மறைமுகவரி என்பது பரிவர்த்தனையின் போது விதிக்கப்படும் வரியாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் நேர்முகவரியின் வீதம் அதிமாகவும், மறைமுவரியின் வீதம் குறைவாகவும் காணப்படுகின்றன. இருந்தபோதும் இலங்கையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகிறது.
வரி அறவீடு தொடர்பில் இலங்கைக்கு நிலையான கொள்கை இல்லாமையால் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் தமது ஆட்சிக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அல்லது ஆட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக வரிகளில் ஏற்ற இறக்கங்களைச் செய்தனர். குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வரி விலக்களிப்புகளை வழங்கினர்.
குறிப்பாக தேர்தல்களில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாடு பற்றியோ அல்லது நாட்டின் வருமானம் தொடர்பிலோ சிந்திக்காது தாங்கள் நினைத்தவாறு வரிகளில் ஏற்ற இறக்கங்களைச் செய்தனர். இதற்கு சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் குறிப்பிட முடியும்.
தாம் ஆட்சிக்கு வந்தால் வரி அறவீடுகள் இலகுபடுத்தப்படும் என்று வழங்கியிருந்த உறுதிமொழியைக் காப்பாற்றும் நோக்கில் சேர் பெறுமதி வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த வரிக் குறைப்பானது வியாபாரிகள் உள்ளிட்ட ஒரு சில தரப்பினருக்கு நன்மையை ஏற்படுத்தியிருந்தாலும் அரசாங்கத்தின் வரி வருமானம் வெகுவாகக் குறைந்து நாடு பொருளாதார ரீதியில் பாதிப்பு அடையும் நிலைக்கு வழிகோலியிருந்தது.
இவ்வாறான பின்னணியில், நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும் பொருட்டு வரி அறவீடுகளை அதிகரிக்கும் நிலைமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தள்ளப்பட்டது. நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நிபந்தனையாக வந்தது.
இதனை நிபந்தனை எனக் கூறுவதற்குப் பதிலாக நாட்டை மீட்சிபெறச் செய்வதற்கு எடுக்கக் கூடிய களயதார்த்தமான நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை மற்றும் துறைசார் நிபுணர்களின் முன்மொழிவுகளுக்கு அமைய 8 வீதமாக இருந்த சேர் பெறுமதி வரி 8 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் சேர் பெறுமதி வரியை 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிப்பதற்கு சட்ட ரீதியாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சேர் பெறுமதி வரி அல்லது வற் வரி என்பது ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் நிலையான வரியாகும். இது சில சந்தர்ப்பங்களில் விற்பனை வரியைப் போன்று காணப்படும். விற்பனை வரியுடன், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முழுத்தொகையும் விற்பனையின் போது நுகர்வோரால் செலுத்தப்படுகிறது.
2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் நிலையான சேர்பெறுமதி வரி வீதம் 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரித்தது. பொருட்களின் இறக்குமதி, பொருட்களின் விநியோகம் (மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் உட்பட) மற்றும் இலங்கையில் சேவைகள் வழங்கல் ஆகியவற்றின் மீது சேர் பெறுமதி வரி செலுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில், மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை வருமானத்தை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அமைய சேர் பெறுமதி வரி 15 இல் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டாலும், பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு வரி வருமானம் என்பது இன்றியமையாததாகும். அது மாத்திரமன்றி, தற்போதைய பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிதி இந்த வரி வருமானத்தின் ஊடாகவே அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது. எனவே வரி வருமானத்தை அரசாங்கம் அதிகரிப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.
இருந்தபோதும், அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை பிழையாகப் பயன்படுத்தி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் அதேநேரம், இலாபம் சம்பாதிக்கும் வகையிலும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் சமூக ஊடகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் மக்களை தவறாக வழிநடத்தும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம். அது மாத்திரமன்றி, கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பன்படுத்தி மக்களை ஏமாற்றும் வர்த்தகர்கள் கும்பலொன்றும் காணப்படுகிறது.
வரி விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, “உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்” எனக் கூறினார்.
எதிர்காலத்தில் வரி சேகரிப்பு செயற்பாடுகளை விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடி வரி வீதம் 40 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரம், வரி அதிகரிப்பைக் காரணமாகப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் நியாயமற்ற விதத்தில் அதிகரித்துள்ளனர். இவ்வாறானவர்கள் நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நியாயமான முறையில் நடந்துகொள்வதும் அவசியமாகும்.
இது இவ்விதமிருக்க, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. முதலாவது மீளாய்வின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பி.ஹர்ஷன்