இந்து மதத்திற்கு உரித்தான பல பண்டிகைகளும், விழாக்களும், சிறப்புத் தினங்களும் வருடந்தோறும் வந்து போகின்றன. இவற்றுள் ஒன்றாக அமைந்திருப்பது தைப்பொங்கல் திருநாளாகும். இது தைமாதப் பிறப்புடன் இணைந்ததாக முக்கியத்துவம் பெறுவது சிறப்புக்குரியது.
நவக்கிரக நாயகர்களுள் முதன்மை பெறுபவர் சூரிய பகவான். கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் சிறப்புக்குரியவர். உலகம் முழுவதும் உயிர்ப்புடன் இயங்குவதற்கு துணைநிற்கும் இயற்கை சக்திகள் அனைத்துக்கும் மூலசக்தியாக விளங்குபவரும் இவரே. சூரிய பகவானின் இயக்கம் செம்மையாக அமையப் பெற்றால்தான், உலகில் மனிதகுலம் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும் செயற்படக்கூடியதாக இருக்கும்.
சூரிய வழிபாடு உலகின் பல நாடுகளிலும் நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டுவரும் பாரம்பரிய சிறப்பைக் கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய சூரிய வழிபாட்டுடன் இணைந்ததாகவே இந்து மக்களின் விழாக்களான தைமாதப் பிறப்பும் சித்திரை மாதப் பிறப்பும் அமைந்திருக்கின்றன. இவ்விரு சிறப்பு நாளிலும் சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைக்கும் கருமங்கள் மேற்கொண்டு வருகின்றபோதிலும், பெருமளவு இந்து மக்கள் தைமாதப் பிறப்பு தினத்தன்றே பொங்கல் விழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இராசி மண்டலத்தில் சூரிய பகவானின் ஒவ்வொரு இராசிப் பிரவேசமும் ஒவ்வொரு தமிழ் மாதங்களினதும் உதயமாக அமைகின்றது. முதலாவதான ‘மேட’ இராசிக்குள் பிரவேசம் செய்யும்போது சித்திரை மாதம் பிறக்கிறது. அதுபோலவே, பத்தாவதான ‘மகர’ இராசிக்குள் சூரிய பகவான் பிரவேசம் செய்யும்போது தைமாதம் பிறக்கிறது.
தைமாதப் பிறப்பு மற்றொரு வகையிலும் சிறப்புப் பெறுகிறது. அதாவது பூவுலக மக்களுக்குரிய ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒருநாளாக அமைந்துள்ளது. அந்தவகையில் தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறுமாத காலம் பகற்பொழுதாகும். இது உத்தராயணம் எனப்படுகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறுமாத காலம் இரவுப் பொழுதாகும். இது தட்சணாயணம் எனப்படுகிறது. தேவர்களுக்குரிய பகற்பொழுதின் ஆரம்பமே தைமாதப் பிறப்பாகும். எனவேதான் இந்தநாள் பூவுலக மக்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
உழவர் பெருமக்கள் தங்கள் வயல்நிலங்களில் விதைத்து அறுவடை செய்த நெல்லிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட புத்தரிசியைப் பயன்படுத்தி சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து தைமாதப் பிறப்புத் திருநாளைக் கொண்டாடுவதே தைப்பொங்கல் வரலாற்றின் ஆரம்பமாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே ‘உழவர் திருநாள்’ என்ற பெயரிலும் தைப்பொங்கல் அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இது இந்து மக்களது பண்டிகைகளுள் ஒன்றாக மாறியதால், உழவர் பெருமக்களுடன் இணைந்து அனைத்து இந்து மக்களும் தைமாதப் பிறப்பு நாளில் சூரிய பகவானுக்கு பொங்கிப் படைத்து வழிபாடு செய்வது வழக்கமாகிவிட்டது.
தைமாதப் பிறப்பன்று தங்கள் வீட்டின் முற்றத்திலேயே பொங்கல் செய்வதை நீண்டகால பாரம்பரிய வழக்கமாக இந்து மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். முற்றத்தில் நீள் சதுரமான பெரிய அளவிலான நிலப்பகுதியை தேர்ந்தெடுத்து, அதனை பசுவின் சாணத்தால் மெழுகி கோலமிட்டு, அந்த இடத்தைச் சுற்றிவர மாவிலை, தோரணங்களால் அலங்கரித்து, தலைவாழை இலையில் பூரண கும்பம் வைத்து, குத்துவிளக்கேற்றி, இஞ்சி இலை, மஞ்சள் இலை, மாவிலை என்பன கட்டிய புதுப் பானையில் பொங்கல் செய்வது தொன்மைமிகு மரபாகும்.
இவ்வாறு இந்து மக்கள் முற்றத்தில் பொங்கி முடித்தபின்னர் அதே இடத்திலேயே தலைவாழை இலையில் பொங்கல் படைத்து சூரிய பகவானை வழிபாடு செய்யும் நிகழ்வானது தெய்வ வழிபாட்டுக்குச் சமமான உன்னத செயற்பாடாக அமைந்துள்ளது. இந்தவகையில் பொங்கல் சாதமானது சூரிய பகவானுக்குரிய நைவேத்தியப் பொருளாக சிறப்புப் பெறுவதுடன், அவரது அருளால் பெற்றதை அவருக்கே நன்றியுடன் நிவேதனம் செய்யப்படுவதையும் இது எடுத்துக் காட்டுகிறது.
இலங்கையில் தைப்பொங்கல் பண்டிகை ஒரு சமய விழா என்பதற்கும் மேலாக உழவர் திருநாள் என்பதுடன், தமிழர் திருநாளாகவும், தமிழ் மக்களின் கலாசாரப் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவது சிறப்புக்குரியது. தைப்பொங்கல் கருமத்தின்போது பால் பொங்கிப் பெருகுவது அல்லது பொங்கி வழிவதுபோல ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வாழ்வில் இன்பம் பொங்க வேண்டும், ஆரோக்கியம் பொங்க வேண்டும், செல்வம் பொங்க வேண்டும் என்ற பல்வேறு சிறப்பான எதிர்பார்ப்புகளுடன் தைப்பொங்கல் விழாவை கொண்டாடுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதனையே “தை பிறந்தால் வழி பிறக்கும்” என நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இந்து மக்கள் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள், புதுமனைப் பிரவேசம், புதிய கல்வி நிறுவனங்கள், புதுவிற்பனை நிலையம், பயிர்ச்செய்கை போன்ற பல்வேறுபட்ட சுபகருமங்களை தைமாதத்திலேயே மேற்கொள்வார்கள். தை மாதத்தில் ஆரம்பிக்கும் கருமங்கள் வெற்றியையும், சிறப்பையும் கொடுக்கும் என்பதில் இந்து மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை காலமும் எமது நாட்டில் நிலவிவந்த துன்ப துயரங்கள் நீங்கி, எதிர்காலத்தில் அனைவரினதும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவேண்டும் என நாளை (15.01.2024) உதயமாகும் தைத்திருநாளிலே இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!
- அ. கனகசூரியர்