இலங்கை முழுவதும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. அத்துடன் விவசாயிகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தங்களுடைய விவசாய உற்பத்திகள் விலை அதிகரித்திருந்த போதிலும் அதற்கான இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைமையை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக அதிக அளவிலான விவசாய மருந்துப் பொருட்களை பாவிக்க வேண்டிய ஒரு கட்டாயமான நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உற்பத்திச் செலவினமானது பாரிய அளவில் அதிகரித்துள்ளது. விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற கிருமிநாசினிகள் இரசாயன உரவகைகள் என்பவற்றின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன.
அது மட்டுமல்லாமல் விவசாயம் புரிகின்றவர்களின் அன்றாட சம்பளமும், (ஆண் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா முதல் 3500 ரூபாவரை) அதிகரித்துள்ளது. அதே போல பெண் தொழிலாளர்களின் சம்பளமும் 1500 ரூபா முதல் 2000 ரூபாவரை அதிகரித்துள்ளது. இவ்வாறான ஒரு நிலைமையில் தங்களுடைய விவசாயத்தை தொடர முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக விவசாய பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உரம் தேவையான அளவு பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன்வைக்கின்றார்கள். இந்த நிலைமை காரமணாக சிறு வியாபாரிகள் அதாவது அன்றாடம் கொழும்பு மெனிங் சந்தை உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்களிலும் நாள்தோறும் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
ஏனெனில் வழமையாக தாங்கள் கொள்வனவு செய்வதைவிட தற்பொழுது ஏற்பட்டுள்ள விலை அதிரிப்பின் காரணமாக கொள்வனவு அளவை அவர்கள் குறைத்துள்ளனர். ஏற்கனவே தங்களுடைய வியாபாரத்துக்கு அதிகமான பணம் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அதிகளவில் முதலிடு செய்ய முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி குறைவடைந்தமையால் கொழும்பு உட்பட ஏனைய நகரங்களுக்கு அனுப்பப்படும் மரக்கறிகளின் அளவும் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக லொறி உரிமையாரளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஏனெனில் கொழும்பு மற்றும் பிற நகரங்களை நோக்கி செல்கின்ற ெலாறிகள் குறைவடைந்துள்ளன.
இவ்வாறானதொரு நிலையில் கொழும்பு, தம்புள்ளை, வெலிசர உட்பட மொத்த விற்பனை நிலைங்களில் சுமை தூக்குகின்ற தொழிலாளர்களின் வருமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள பொருட்களின் விலை காரணமாகவும் தங்களுடைய வருமானத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாகவும் தங்களுடைய குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். செலவு அதிகரித்த போதிலும் வருமானம் அதிகரிக்கவில்லை என்ற விடயத்தையே இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
சாதாரணமாக 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளின் விலைகள் தற்பொழுது 2000 முதல் 2200 ரூபா வரை அதிரித்துள்ளன.வழமையாக ஒரு கிலோவை கொள்வனவு செய்தவர்கள் தற்பொழது 250 கிராம் கொள்வனவு செய்வதற்கே தயக்கம் காட்டுகின்றார்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் விவசாயிகளின் பாதிப்பை தடுத்து நிறுத்தவும் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கின்றார்கள்.
வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு நுவரெலியா மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளது. கரட் 800 முதல் 900 வரையும், கோவா 500 முதல் 600 வரையும், லீக்ஸ் 400 முதல் 500 வரையும், பீட் 450 முதல் 525 வரையும், என வரலாறு காணாத அளவில் விலைகள் அதிகரித்துள்ளன. தற்போதைய காலநிலை தொடருமானால் விலைகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
நுவரெலியா தினகரன் நிருபர்