போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய ‘2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு’ என்ற புத்தகம் கடந்த புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், புலமை பெற்ற பலரால் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.
அந்த உரைகளைக் கேட்கும் போதும், அமைச்சர் பந்துல குணவர்தனவின் படைப்புகளை வாசிக்கும் போதும், நாம் அவதானமாக செயற்படாவிட்டால் இந்த நாடு பெரும் பாதாளத்தில் வீழ்ந்துவிடுவதற்கான ஆபத்து உள்ளதென்பதை உணர முடிகிறது. அந்த நூல் மற்றும் அங்கு அறிஞர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து முக்கியமான விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
இலங்கை அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. 3 பில்லியன் டொலர் கடனை மூன்று தவணைகளில் பெற்றுக் கொள்வதற்கே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது நீண்டகாலக் கடனாகும். எந்தவொரு நாடும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வராத சந்தர்ப்பத்திலேயே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.
அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலங்கை நீண்ட காலமாக பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களின் வட்டி மற்றும் தவணைகளைச் செலுத்திக் கொள்ள முடியாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக இழக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டில் தொழில்புரிபவர்களிடமிருந்து ஐந்து சதம் பெறுமதியான டொலரும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாமல் கறுப்புப்பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டதால், எமக்குக் கடன் வழங்கிய ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் எமக்கு எதிராக வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வாறான அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த போது, அதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த நேரத்தில் எங்களுக்கு இருந்த ஒரேவழி சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மட்டுமேயாகும். அந்த உண்மை ஒருதரப்பினருக்குப் புரியவுமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அந்த நிதியத்திடமிருந்து முதல் கடன் தவணையைப் பெற்றவுடன், இந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து, நாடு படிப்படியாக வங்குரோத்து நிலையிலிருந்து மீளத் தொடங்கியது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அதன் மூலம் முழு நாட்டிற்கும் கிடைத்த பொருளாதார நன்மைகளை அனுபவித்தவாறு, இந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் வீரத்தைக் காண்பிப்பதற்காக பல்வேறு கதைகளைக் கூறத் தொடங்கின. அவர்கள் முதலில் கூறியது ‘கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றுவோம்’ என்பதாகும்.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். இவ்வாறான முட்டாள்தனமான கதைகளை அரசியல் களத்தில் எம்மால் அடிக்கடி கேட்ட முடியும். உதாரணமாக நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் போது முன்வைத்த முக்கிய வாக்குறுதியாக இருந்தது ‘துறைமுகநகரை மீளப் பொறுப்பேற்போம்’ என்பதாகும்.
துறைமுகநகர் என்பது சீன ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் நேரடியாகவே கைச்சாத்திட்ட ஒரு ஒப்பந்தமாகும். அவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை ரத்துச் செய்தால், அவ்வாறு ரத்துச் செய்த தரப்பினருக்கு ஏற்படப் போகும் ஆபத்து இலேசானதல்ல. சீனா என்பது ஆசியப் பொருளாதார வலயத்தில் பலம் வாய்ந்த நாடாகும். துறைமுக நகர ஒப்பந்தத்தை ரத்து செய்ய நல்லாட்சி அரசாங்கத்தால் ஒருபோதும் முடியவில்லை. மாறாக, சில சிறிய திருத்தங்களை மட்டுமே செய்ய முடிந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அத்தகைய விளையாட்டை விளையாட முடியாது. எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே நடந்து கொள்ள வேண்டும். தம்மால் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாவிட்டால் “செலுத்த வழியில்லை மச்சான் என்று பிரச்சினையை முடித்துக் கொள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தால் முடியும்” என சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் கூறியிருந்தார்.
அப்படியானால் “சரி மச்சான், பின்னர் பணம் இருக்கும் போது மீளத்தாருங்கள்” என்று வெளிநாட்டுக் கடன் கொடுத்தவர் கூறுவார் என நினைக்கிறீர்களா?
சர்வதேச நாணய நிதியம் என்பது எருமை மாடு அல்ல. அவர்கள் எமக்கு கடன் வழங்கும் போது முன்வைக்கும் நிபந்தனைகளை இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நாம் கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறில்லாமல் அந்த நிபந்தனைகளை மீறி ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப் போனால் உலகில் எந்த ஒரு நாடும் எமக்கு ஒரு சதத்திற்கும் உதவி செய்யப் போவதில்லை.
மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தனது புத்தகத்தில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி பந்துல குணவர்தன தனது புத்தகத்தின் மூலம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டால் இந்நாடு இரண்டு வாரங்களுக்குக் கூட நிலைத்திருக்காது.