மேற்குலகத்தின் போர் இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. படிப்படியாக அத்தகைய உத்தியுடன் தொடங்கப்பட்ட ஹமாஸ், இஸ்ரேலிய போர் தற்போது யெமன் நாட்டுக்குள் நீட்சி பெற்றுள்ளது. தலிபான்கள் மீது தொடங்கிய போர், பாரிய அழிவினை மேற்காசியா முழுவதும் நகர்த்தி மேற்கு தனது பொருளாதார இருப்பினைப் பாதுகாத்ததுடன், ஆக்கிரமிப்புக்கான அனைத்து வலுவையும் கடந்த தசாப்தங்களில் அடைந்திருந்தது. இஸ்லாமியரை அழிப்பதன் மூலம் மேற்காசிய வளங்களை சுரண்டவும் அவர்களை அடிமைகளாக்கவும் மேற்கு முன்னெடுக்கும் உத்தியே இஸ்லாமிய நாடுகள் மீதான போராகும். அதனை ஹமாஸ், -இஸ்ரேலிய போர் மூலம் மீளவும் மேற்குலகம் தொடக்கியுள்ளது. இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்துள்ள இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் நடவடிக்கை நிகழும் போது அமெரிக்கா, -பிரிட்டன் இணைந்து யெமனில் அமைந்துள்ள ஹவுத்தி இலக்குகளை நோக்கி மேற்கொண்ட தாக்குதல் முக்கியமான பதிவாக உள்ளது. இத்தகைய சூழலில் மேற்கு இஸ்ரேலுடன் இணைந்து வகுத்துள்ள உத்திகளைத் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது. யெமனில் நிலைகொண்டுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க, -பிரித்தானியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கடலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களது நடவடிக்கை அதிகரித்துள்ளதுடன் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களும் கடத்தல்களும் தொடர்ச்சியாக நிகழ்வதாக மேற்கு நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துவருகின்ற நிலையிலேயே இத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிடும் போது எங்களுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் சுதந்திரத்தை கெடுக்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்காவோ, அமெரிக்க கூட்டுநாடுகளோ பொறுத்துக் கொள்ளமாட்டா என்பதை இத்தாக்குதல் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது, ஹவுத்தி கிளர்ச்சியாளரின் பொறுப்பற்ற தாக்குதலுக்கு எதிரான சர்வதேச சமூகத்தினது தாக்குதல் ஒற்றுமையானதும் உறுதியானதுமாக உள்ளது என்றார். செங்கடல்வழியே செல்லும் அமெரிக்கக் கப்பல்களே அதிகம் இலக்குவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க, -பிரித்தானியத் தாக்குதலுக்கு 20 க்கு மேற்பட்ட மேற்கு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது, வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு எதிரான முதல் அடி இதுவென்று குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதலை ஓப்ரேசன் பெறஸ்பெரட்டி கார்டியன் என பெயரிட்டுள்ளன. இது 2023 டிசம்பர் 18 நிறுவப்பட்டுள்ளது. இது ஹவுத்தி கிளர்சியாளர்களின் செங்கடல் தாக்குதலுக்கு எதிரான கூட்டுத் தாக்குதலுக்கான அமைப்பாகவும் செங்கடலில் நிகழும் அனைத்துத் தாக்குதலையும் முறியடிப்பதற்கானதாகவும் வரையறுக்கப்பட்டு அமெரிக்க இராணுவ பாதுகாப்பு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
யெமனின் தலைநகரான சானா, தாமர் மற்றும் ஹொடைடா பகுதிகளில் ஹவுத்திப் படைகளின் முகாங்கள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை ஹவுத்திப் படைகள் உறுதிப்படுத்தியதுடன் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இது ஒரு அமெரிக்க, -சியோனிஸ்ட், -பிரிட்டன் ஆக்கிரமிப்பு என தெரிவித்துள்ளன.
அதேநேரம் இத்தாக்குதலில் ஹவுத்தியின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கு நாடுகளின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. சானா விமானநிலையத்திற்கு அருகாமையிலுள்ள இராணுவத்தளம் டைஸ் விமான நிலையத்தின் பகுதியிலுள்ள விமானத்தளம் ஹொடைடாவில் அமைந்துள்ள கப்பல்தளம் மற்றும் ஹஜ்காவில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. யெமன் உள்நாட்டுப் போரில் கணிசமான பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஹவுத்திக் கிளர்சியாளர்கள் ஈரான், ரஷ்யா மற்றும் வடகொரியாவின் ஆதரவுடன் செயல்படுகின்றனர். செங்கடலானது ஏறக்குறைய ஐரோப்பிய, -ஆசிய வணிகக் கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதுவரை ஹவுத்திக் கிளர்ச்சிக் குழுக்களது தாக்குதலில் 27 கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதில் அனேகமானவை மேற்கு நாடுகளது கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தககைய தாக்குதலுக்கு ஆளில்லாத விமானங்கள் மட்டுமல்ல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் பலஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. ஹவுத்திக் கிளர்ச்சி அமைப்பு பலமான இராணுவத்தைக் கொண்டுள்ளது போன்றே அதன் தாக்குதல் அணுகுமுறைகள் வெளிப்படுகின்றன. இதேநேரம் அமெரிக்க-, பிரிட்டன் தாக்குதலுக்கு வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் மட்டும் தான் காரணமாகக் கொள்ள முடியுமா என்பது பிரதான சந்தேகமாகவுள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியம். முதலாவது, சர்வதேச அரசியல் என்பது பொருளாதாரத்திற்கானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் பொருளாதாரம் என்பது வர்த்தகத்தையும் சந்தையையுமே குறிப்பதாகும். அதற்கு பங்கம் ஏற்படுத்துவதை மேற்கு நாடுகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதிலும் மேற்காசிய நாடுகளுடனான வர்த்தகம் என்பது மிகப்பிரதானமானது. கொன்ஸ்சாந்துநேபில் கைப்பற்றப்பட்டதன் விளைவே உலகளாவிய கண்டுபிடிப்புக்கும் தீவிர போர்களுக்கும், இஸ்லாமிய நாடுகள் மீதான அழிப்பு நடவடிக்ைககளுக்கும் வழிவகுத்தது. சிலுவை போர்களை தனித்து ஆக்கிரமிப்பாக கருதுவதைக் கடந்து வளங்களுக்காகவும் சுரண்டலுக்காகவும் ஆனவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன் நீட்சியே தற்போதும் நிகழுகிறது. மேற்குலகத்தின் வர்த்தகம் என்பது கீழைத்தேசத்திலேயே தங்கியுள்ளது. கீழைத்தேசத்தை சுரண்டுவதன் மூலமே மேற்குலகம் தனது பொருளாதாரத்தையும் செழிப்பையும் பாதுகாத்து வருகிறது. அண்மையில் ரஷ்யா, -உக்ரைன் போர் அத்தகைய நீண்ட நிலைத்திருந்த மேற்குலகத்தின் இருப்புக்கு நெருக்கடியானது. அதனால் திணறிப்போன மேற்குலகம் இஸ்ரேல், -ஹமாஸ் போர் மூலம் அதனை சீர்செய்ய திட்டமிட்டது. அதற்கான வாய்ப்பினை ஒரு கிளர்ச்சிக்குழு தடைசெய்ய திட்டமிடுவதை மேற்குலகம் அனுமதிக்காது. அதற்காக எத்தகைய எல்லைக்கும் போகத் தயாராகவே உள்ளது. ஹமாஸ்-, ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி படைகள் மேற்குக்கு ஒரு பொருட்டாக அமையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹமாஸின் பலம் காஸாவில் மட்டுமே. ஹவுத்தியின் பலம் யெமனில். ஹிஸ்புல்லாவின் பலம் லெபனானில். என்பதை அந்த அமைப்புக்கள் புரிந்து கொள்வது முக்கியம். இன்றும் உலகளாவிய கடலில் அமெரிக்காவே முதலிடம் பெறுகின்றது. அதற்கு பின்னரே சீனாவும் ரஷ்யாவும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹவுத்தியின் அணுகுமுறை முழுநீளப் போருக்கு மேற்குலகத்தை அழைப்பதாகவே தெரிகிறது. இதில் ஹமாஸ் மட்டுமல்ல அனைத்து மேற்காசியாவும் மீண்டும் ௐர் அழிவுக்கு போகும் நிலை ஏற்படும். ஈரானின் இருப்பும் பாதுகாப்பும் அதன் எல்லைக்குள்ளேயே. அதனை ஈரான் பாதுகாத்துக் கொள்வதே பொருத்தமானதும் தந்திரோபாயமானதுமாகும்.
இரண்டாவது, இஸ்ரேல் மீதான ஹமாஸின் போர், அதிக நெருக்கடியை கொடுத்து வருகிறது. ஏறக்குறைய இஸ்ரேலிய, -ஹமாஸ் போரை மேற்கு நாடுகளே நிகழ்த்துகின்றன. ஹமாஸ் ஒழிந்ததென இஸ்ரேல் மட்டு மல்ல, மேற்குலகமும் கருதமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அதற்கு உதவும் அனைத்து சக்திகளையும் தேடி அழிக்க வேண்டிய தேவை மேற்குலகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதனையே அமெரிக்க, -பிரிட்டன் கூட்டு தொடங்கியுள்ளது. இதன் விளைவு உலகளாவிய போர் ஒன்றும் ஏற்படாது. மாறாக இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அந்த தேசங்களின் மக்களும் அழித்தொழிக்கப்படுவார்கள். மேற்காசிய வளங்கள் சுரண்டப்படும் அல்லது அழிக்கப்படும். மேற்காசியத் தலைவர்கள் மேற்குலகத்தின் அடிமைகளாவார்கள்.
மீளவும் இரு தசாப்தங்கள் அந்த நாடுகளை கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படும். அதன் பின்னர் இத்தகைய தாக்குதல்கள் நிகழும் அதில் மீளவும் கட்டியெழுப்பட்ட அனைத்தும் அழித்தொழிக்கப்படும். இதுவே மேற்காசிய வரலாறாகும். இதுவே மேற்கு-, இஸ்ரேல் கூட்டுத்திட்டமிடலாகும். இதற்கு மேற்காசியத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வழிவகுத்து செயல்படுகின்றனர். மேற்கின் இராஜதந்திரத்திற்கு முன்னே மேற்காசியத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அடிமைகளாகவே உள்ளனர். மேற்காசியாவின் தரைத்தோற்றம் மேற்குலகத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான நிலம் என்பதை சரிவர எந்த மேற்காசிய அரசியல் திட்டமிடலும் இருக்கவில்லை. மூன்றாவது, 11.01.2024 சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு எதிராக தென்னாபிரிக்கா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. விசாரணை தொடங்கப்படும் சந்தர்ப்பத்தில் மேற்குலகம் ஹவுத்திக் கிளர்ச்சிக் படைகளின் தாக்குதலுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் இஸ்ரேலுக்கு எதிராக ஏற்பட்டுள்ள நிலையை கையாளும் தேவைப்பாடும் நோக்கமும் உள்ளது போல் தெரிகிறது. காரணம் இஸ்ரேல்-, ஹமாஸ் தாக்குதல் பரவலடையும் போது அதன் இஸ்ரேல் மீதான இனவழிப்புக்கான நியாயப்பாட்டுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என மேற்கு கருத வாய்ப்புள்ளது. இதனை ஒரு சர்வதேச பிரச்சினையாக முன்னெடுக்க முயலும் போக்கை இத் தாக்குதலுக்கூடாக விருத்தி செய்ய முடியும். அத்தகைய போக்கிலேயே தாக்குதலும் அதற்கான உத்திகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
எனவே ஹவுத்தி கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதலை பல நோக்கங்களை கொண்டு மேற்குலகம் கொண்டு தொடக்கியுள்ளதாகவே தெரிகிறது. மேற்குலகத்திற்கு எதிரான அணியினது அணுகுமுறைகள் தற்போதுவரை பலவீனமாகவே தெரிகின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா என்பன மேற்குலகம் மீதான போரை அனுசரிப்பது போன்றே தெரிகிறது. காரணம் மேற்கு எதிர்நோக்கியுள்ள போர் அதன் பொருளாதாரத்தை சிதைப்பதுடன் கவனம் முழுவதும் மேற்காசியாவில் குவிக்கப்பட்ட போது தமது இருப்பையும் பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியுமென கருதுகின்றன. அது மட்டுமன்றி போர்கள் எப்போதும் எல்லாத்தரப்புக்கும் அழிவை ஏற்படுத்தக் கூடியது. அதன்விதியிலேயே கீழைத்தேச சக்திகளது நகர்வுகள் அமைந்துள்ளன. ஹமாஸ், -இஸ்ரேல் போர் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இலாபகரமானது என்ற அடிப்படையில் நகர்கிறது. ஆனால் மேற்குலகம் இத்தகைய போரை கூட்டாக எதிர்கொள்கிறதே அன்றி அமெரிக்காவோ பிரிட்டனோ தனித்து எதிர்கொள்ளவில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், தனித்து ஒரு போரை அமெரிக்கா நிகழ்த்தவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமாயின் தாக்குதல்களை தனித்து மேற்கொண்டிருக்கலாம். ஆனால் போர்கள் எதனையும் தனித்து மேற்கொள்ளவில்லை என்பது முக்கியமான போர்- அரசியலாகும்.