மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,
“2023ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளோம். தற்போதுள்ள மின்சார சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவையை வழங்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான விடயங்கள் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மின் உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திகையை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் 70% மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து மின் உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி 2024ஆம் ஆண்டில் சுமார் 600 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.