நாம் உட்கொள்ளும் உணவை மிகவும் சுலபமாக பொதி செய்து வெளியில் எடுத்துச் செல்வதற்காக எமது நாளாந்த பாவனையில் லன்ச் சீற்களை (Lunch Sheet) அதிகளவில் பயன்படுத்தி வருகின்றோம். வாழ்க்கை நடைமுறையில் எமது வேலைகளை இலகுவாக்க முனைகின்றோமே தவிர, லன்ச் சீற் பாவனையால் ஏற்படும் பாதகம் பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. உலகில் லன்ச் சீற் பாவனை இல்லாத போதும், எமது நாட்டில் இதன் பாவனை அதிகளவில் காணப்படுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதன் பாவனையை தடை செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், எமது நாட்டில் லன்ச் சீற் பாவனையால் ஏற்படும் தீமைகளை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டி, லன்ச் சீற் பாவனைக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகவே லன்ச் சீற் பாவனையை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 6 மாதகால அவகாசத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பரிந்துரைத்தது.
லன்ச் சீற் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிலுள்ள தலேட் எனப்படும் புற்றுநோய்க் காரணி மனித உயிருக்கு ஏற்படுத்தும் ஆபத்து தொடர்பாக அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டதை தொடர்ந்தே லன்ச் சீற் பாவனையை தடை செய்வதற்கு இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறாண அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.
இதற்கிடையில், பிளாஸ்டிக் பாவனை தொடர்பான மாநாடொன்று எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மைக்ரோபிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு, பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சமூக, பொருளாதார தாக்கம், பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம், பிளாஸ்டிக் பாவனைக்கு பதிலாக மாற்றுத் திட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
லன்ச் சீற் பாவனையால் ஏற்படும் தீமைகள், லன்ச் சீற் பாவனைக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு பொறியியல் திணைக்களத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பீட பேராசிரியரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் நிலைபேண் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருமான பந்துனி அத்தபத்து தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போது,
மைக்ரோபிளாஸ்டிக்கை கொண்டமைந்த லன்ச் சீற் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன், பாவனைக்கு மிகவும் இலகுவாகவும் உள்ளது. அத்துடன், தற்போது லன்ச் சீற் இலகுவில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் தமது நாளாந்த பாவனையில் லன்ச் சீற்றை அதிகளவில் பாவித்து வருகின்றனர்.
ஆயினும் உண்மையில் லன்ச் சீற் பாவனை மனித பாவனைக்கு இன்றியமையாதென்பதுடன், இது மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தாகும். லன்ச் சீற் பாவனை மனித வாழ்வில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாவிடினும், நாளடைவில் இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். லன்ச் சீற் பாவனையாலும் எமது தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது மெல்லக் கொல்லுமெனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேராசிரியர் மேலும் கருத்து வெளியிட்ட போது,
எமது நாட்டில் பொதுவாக, ஒரு மில்லியன் முதல் 1.5 மில்லியன்வரை பாவிக்கப்பட்ட லன்ச் சீற்கள் நாளாந்தம் வெட்டித் தாக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையிலேயே எமது நாட்டில் லன்ச் சீற் பாவனையை தடை செய்து, மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
லன்ச் சீற் பாவனையை தடை செய்யும் போது, எமது சமுதாயத்தினர் பழைய நடைமுறைகளை கடைப்பிடிக்க முற்படுவர். முன்னர் பயன்படுத்தியது போன்று வாழைஇலை, தாமரைஇலை, தேக்கம்இலை ஆகியவற்றை உணவை பொதி செய்வதற்கு பாவிக்க முற்படுவர். அத்துடன், பனை ஓலையினால் இழைக்கப்பட்ட பெட்டிகளையும் பாவிக்க முற்படுவர். மேலும், வாழைஇலையை ஒருமுறை மாத்திரமே பாவித்து வந்த நிலை போக, அதை மீண்டும் மீண்டும் கழுவிப் பாவிக்கும் முறையை சந்தையில் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. உணவை லன்ச் சீற்றில் பொதி செய்து கொண்டு செல்வதற்கு பதிலாக எவர்சில்வர், செரமிக் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பாவிக்க முடியும். மேலும், உணவை பொதி செய்வதற்காக பல புதிய மாற்றுத் திட்டங்களை மக்கள் கண்டுபிடித்து, அத்திட்டங்களை கையாள முற்படுவர்.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. லன்ச் சீற் பாவனையை தடை செய்து மாற்றுத் திட்டத்தை கையாள்வதற்கு மக்களை நாம் ஊக்கப்படுத்துவதுடன், மக்கள் தமக்கு தெரிந்த மாற்றுத் திட்டங்களை எம்மிடம் முன்வைக்கலாம்.
லன்ச் சீற் பாவனையின் தீமையை உணர்ந்து, லன்ச் சீற் பாவனையை ஒழிப்பதற்கு மக்கள் எம்மோடு இணைவார்களென்று நாம் எதிர்பார்ப்பதுடன், எமது நாட்டில் பசுமை அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்துக்கும் மக்கள் கைகோர்ப்பார்களென்றும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். எமது நாளாந்த வாழ்க்கையில் எமது தேக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத நடைமுறைகளைக் கடைப்பிடித்து, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கடைப்பிடிப்போமாக.
ஆர்.சுகந்தினி