எளிமையான தோற்றம் அத்தோற்றத்துள் ஆன்றவிந்த அறிவின் துலக்கம்; அனுபவ முதிர்ச்சியால் கனிந்த கம்பீரம் அரவணைத்திடு பண்புநிறை கருணை; வழிகாட்டிடவல்ல மதிநுட்பமென நிகரில்லா ஆளுமையாய் சங்கரத்தை, வட்டுக்கோட்டைப் பகுதிகளில் தன் முத்திரையை வலுவாய்ப் பதித்தவர் ‘பெரியதம்பி ரீச்சர்’ என அனைவராலும் அறியப்பட்ட செல்வி சரஸ்வதி பெரியதம்பி. அன்னார் தனது எண்பத்தாறாவது வயதில் கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலமானார். ஆசிரியரான ‘பெரியதம்பி ரீச்சர்’ கல்வி, சமய, சமூகப் பணிகளில் இளமைக்காலம் முதலே தன்னை ஈடுபடுத்தி இறுதிவரை அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். அமரர் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்’, கர்மயோகியாய் வாழ்ந்தவர் என்பது மிகையானதல்ல. சங்கரத்தை, வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இவரைத் தெரியாதவர்கள் இல்லை என்னுமளவிற்கு சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவராலும் அறியப்பட்டவராக விளங்கியவர். அன்னாரது இழப்பு, குறித்த கிராமங்களுக்குப் பேரிழப்பாகும்.
இன்று வட்டு. மத்திய கல்லூரியாக விளங்கும் வட்டுக்கோட்டை திருஞான சம்பந்த வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த செல்வி சரஸ்வதி பெரியதம்பி, ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்துகொண்டு திருகோணமலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். பின்னர் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பி, வட்டுக்கோட்டை திருஞான சம்பந்த வித்தியாசாலையில் மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்று முதல் 1997ஆம் ஆண்டில் ஓய்வு பெறும்வரை நிறைந்த பணிகளைப் பாடசாலைக்குத் தந்து பாடசாலையின் எழுச்சியில் பங்குதாரராக விளங்கினார்.
வட்டுக்கோட்டை திருஞான சம்பந்த வித்தியாசாலையைப் பொறுத்தவரையில் 1980 தொடக்கம் 2000களின் ஆரம்பம் வரையான காலப்பகுதி முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியாக விளங்கியது. அக்காலப் பகுதியில்தான் பாடசாலை துரிதமான வளர்ச்சியைக் கண்டது. அவ்வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களில் செல்வி.ச. பெரியதம்பியும் ஒருவர். பாடசாலை வரலாற்றில் தடம்பதித்த முக்கிய அதிபர்களான அமரர் சு. சிவவாகீசர், வி.சிவஞானபோதன் ஆகியோரின் காலங்களில் அவரகளுக்கு உறுதுணையாக உழைத்தவர் செல்வி பெரியதம்பி என்பது யாவரும் அறிந்ததே. பாடசாலையில் ஆசிரியராக, பகுதித் தலைவராக, ஆரம்பப் பிரிவின் பொறுப்பாசிரியராக, உப அதிபராக என பல நிலைகளிலும் பணியாற்றி உயர்ந்த பட்ச பங்களிப்பினை வழங்கியவர். ஞானசம்பந்தர் வீதியில் இயங்கிவந்த பாடசாலை இடப்பற்றாக்குறை காரணமாக, புதிய இடமொன்றைத் தேடியது. அவ்வேளையில், 1980களின் ஆரம்பப் பகுதியில் நவாலி வீதியில் அமைந்திருந்த ‘வெங்காயச் சங்க’த்திற்குச் சொந்தமான கட்டடத்தைப் பெற்று, பாடசாலையின் ஆரம்பப் பிரிவை அங்கு மாற்றுவதற்காக உழைத்த பாடசாலைச் சமூகத்தோடு தோளொடு தோள் கொடுத்து உழைத்தவர். பின்னர் நவாலி வீதியில் சங்கக் கட்டடத்துக்கு அருகிலிருந்த காணியை பாடசாலைக்குரியதாக்கி, புதிய கட்டடமமைத்து பாடசாலையின் இடைநிலைப் பிரிவை அங்கு மாற்றி, ஆரம்பப் பிரிவை ஞானசம்பந்தர் வீதிக்குக் கொண்டுசென்ற போதும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்தார்.
பாடசாலையின் பழைய மாணவியான அன்னார் பாடசாலைப் பழைய மாணவர் சங்கத்தின் மூத்த உறுப்பினராவார். பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகவும் முக்கிய உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றிய செல்வி பெரியதம்பி தனது ஓய்வுக்குப் பின்னரும் கௌரவ உறுப்பினராக நிறைந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். 2000களின் ஆரம்பத்தில் பாடசாலையைக் கல்லூரியாகத் தரமுயர்த்தி, க.பொ.த உயர்தரப் பிரிவினை ஆரம்பித்து, வட்டு. மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யும் முயற்சிகளின் போது, தான் ஓய்வு பெற்றபின்னரும் அர்ப்பணிப்போடு பங்காற்றியமை மறக்கவொண்ணாதது. 1986இல் பாடசாலை மணிவிழாக் கொண்டாடியபோது மணிவிழாச் சபையின் பொருளாளராகவும் 2001ஆம் ஆண்டு வட்டு. மத்திய கல்லூரியாக பவளவிழாவினைக் கொண்டாடிய போது பவள விழாச் சபையின் உப. தலைவராகவும் இருந்து பெரும்பணியாற்றியவர். பாடசாலையில் மணிவிழாக் கட்டடம், பவள விழாக் கட்டடம் உள்ளிட்ட பல கட்டடங்களின் பின்னால் அன்னாரின் வியர்வையும் இருப்பது மறுக்கமுடியாதது.
பாடசாலைக்கு வெளியிலும் தனது பெறுமதியான பணிகளை வழங்க அமரர் தவறவில்லை. கிராமங்களின் ஆலோசகர் போல தொழிற்பட்ட அம்மையார் தேவையான ஆலோசனைகளை வழங்கி இளைஞர்களையும் அல்லலுற்றோரையும் வழிப்படுத்தினார். வட்டுக்கோட்டையில் இந்து வாலிபர் சங்கம் சார்ந்தும், சங்கரத்தையில் முருகன் கோயில் சார்ந்தும் தனது சமூக, சமயப் பணிகளை முன்னெடுத்தார். முன்பள்ளி, அறநெறிப் பாடசாலைகள் முதலியவற்றுக்குத் தனது பங்களிப்பினை வழங்கினார். சங்கரத்தை ஆஞ்சநேயர் கோயில் பராமரிப்பில் அக்கறையோடு செயற்பட்டார். இவ்வாறு பலநிலைகளிலும் பணியாற்றிய அன்னாரின் மாணவர்கள் இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, பேராசிரியர்களாக, அதிபர்களாக, ஆசிரியர்களாக எனப் பலநிலைகளிலும் உயர்ந்துள்ளனர் என்பது ஆசிரியரின் பெரும்பணிக்கு மற்றொரு சான்றாகும். அன்னாரின் மறைவு பலருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
துணவியூர் கேசவன்