நவம்பர் 18, 1978ஆம் ஆண்டு கயானாவில் நடந்த சம்பவம் இது. கயானாவின் கானக பகுதியில் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தனர். சாதாரணமானவர்கள் அல்ல. படித்தவர்கள்; பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்கள் முன்பாக ஒரு மேடை. மேடையில் தோன்றுகிறார் ஜிம்ஜோன்ஸ். ஒரு மதபோதகர். தம்மை நோக்கி தீய சக்திகள் நெருங்கி வருவதாகவும், வேறு வழி இல்லாததால் அனைவரும் ஒரே சமயத்தில் உயிரைப் பறித்துக்கொண்டு மறு உலகில் நிம்மதியாக வாழ முடியும் என்றும் அவர் சொல்கிறார். கூட்டமும் அதை மௌனமாக அங்கீகரிக்கிறது.
அங்கு ஒரு பெரிய பாத்திரத்தில் விஷம் கலந்த பழரசம் வைக்கப்படுகிறது. முதலில் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு பழரசத்தை புகட்டுகின்றனர். பின்னர் அவர்களும் அருந்துகின்றனர். குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு பழரசம் ஊசி வழியாக வாய்க்குள் பீய்ச்சியடிக்கப்படுகிறது. தப்பிச் செல்ல முனைவோர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இச் சம்பவத்தில் 918 பேர் மரணமடைகின்றனர். இறுதியாக ஜிம் ஜோன்ஸ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கிறார். இறந்தவர்களில் 300 பேர் 17 வயதுக்குக் குறைந்தவர்கள்.
இச் சம்பவம் நிகழ்ந்து சில தினங்கள் கழிந்த பின்னரேயே வெளியுலகத்துக்கு இக்கொடிய சம்பவம் தெரிய வந்தது. பத்திரிகையாளர்களை சுமந்த ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்தபோது பிணவாடை மூக்கைத் துளைத்ததாக பின்னர் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜிம் ஜோன்ஸ் என்ற தீவிரவாத மத போதகர், அடுத்த உலகில் அமைதி காணலாம் என்றதும் நூற்றுக்கணக்கானோர் தாமே முன்வந்து இறந்துபோன இச் சம்பவம், மதத் தீவிரவாதமும் மூட நம்பிக்கைகளும் மெத்தப் படித்தவர்களையும் பணிய வைக்கும் என்பதை வெளிப்படுத்தியது.
இரண்டாயிரமாம் ஆண்டின் பிறப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று பலர் நம்பியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
1993ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் வெகோ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்திருந்த டேவிட் கொரேஷி தன்னை இறைவனின் இறுதி தீர்க்கதரிசி என அழைத்துக் கொண்டார். ஆயிரக்கணக்கானோர் அவரை நம்பினர். அவர் ஒரு கோட்டையை அமைத்து குடும்பங்களை குடியேற்றினார்.
அங்கு அவர் சொல்வதுதான் சட்டம். கிறிஸ்து எப்போது வேண்டுமானாலும் திரும்பி வருவார் என்பதால் அந்நாளுக்கு தயாராக, தம்மை புனிதப்படுத்திக் கொண்டு காத்திருக்க வேண்டும் என்பது அவர் போதனையின் சாராம்சம். நிறைய ஆயுதங்களை கொரேஷ் குவித்து வைத்துள்ளார் என்ற தகவல் தெரியவரவே, பொலிசார் முற்றுகையிட்டனர். 51 நாள் முற்றுகையின் பின்னர் அக்கோட்டை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மொத்தம் 86 பேர் மரணமடைந்தனர். தன்னைத்தானே சுட்டு டேவிட் கொரேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
மதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் ஆடிய ஆட்டத்தால் எத்தனை அப்பாவிகள் உயிரிழந்தனர் என்பதை இவ்விரு சம்பவங்களும் சொல்கின்றன. உலகின் எந்தவொரு மதமும் தற்கொலையை ஊக்கப்படுத்துவதில்லை. கடவுளை தற்கொலை மூலம் மறு உலகில் சந்திக்கலாம் மறுவருகையின்போது மக்கள் தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மத நூல்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனினும், இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் நல்லவர்களும், பாவ மன்னிப்பு பெற்றவர்களும் சுவர்க்கம் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மறு வாழ்க்கையைப் பயன்படுத்தியே மதத்தீவிரவாதிகள் இஷ்டத்துக்கு கதைவிட்டு தமது பக்தர்களைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். இதே சமயம் இந்து மதத்திலும் பௌத்தத்திலும் சுவர்க்க வாழ்க்கை பற்றி பெரிதாக எதுவும் இல்லை. பதிலாக, மறுபிறப்புகள் மூலம் ஆத்ம மேம்பாடு அடைந்து பரம்பொருளில் கலக்கலாம்; நிர்வாணமடையலாம் என்றே கூறப்பட்டுள்ளது. அங்கும் மூட நம்பிக்கைகளும், தவறான புரிதல்களும் மற்றும் தீவிரவாத சிந்தனைகளும் சிலரிடம் காணப்பட்டாலும் நாம் மேலே பார்த்த கோர மதம் சார்ந்த படுகொலைகள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
இலங்கையில் மதரீதியான ஏமாற்றுவோர் தகிடுதத்தங்கள் மற்றும் நரபலி சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் பெரிய அளவில் மத ரீதியான தற்கொலைகள் நிகழ்வதில்லை.
முதல் தடவையாக இவ்வகையில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலாக 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை சொல்லலாம். சஹ்ரான் என்பவர் மத வெறியால் இஸ்லாத்தைத் தவறாக புரிந்து கொண்டவர். ஆனால் தனது தவறான புரிதலை சரியானது என்று ஏனையோரை அவரால் நம்ப வைக்க முடிந்தது. ஜிம் ஜோன்ஸ், டேவிட் கொரேஷ் போன்றோரிடம் பொதுவாகக் காணப்பட்ட ஒரு அம்சம். அவர்களின் பேச்சுத்திறன் மற்றும் நம்பச் செய்யும் திறன். ஹிட்லர், முசோலினி ஆகியோரின் ஆக்ரோஷமான சொற்பொழிவுகளைக் கேட்போர் மறுபேச்சின்றி அவர்களை பின்பற்றத் தொடங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
சஹ்ரானை பின்பற்றி அவர் சொற்படி உடலில் வெடிகுண்டுகளைத் தாங்கிச் சென்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்ல. உயர்கல்வி கற்று, தொழிலதிபர்களாகவும், நல்ல வருவாய் பெறுபவர்களாகவும் விளங்கியவர்கள். தாம் செய்வது புண்ணிய காரியம் எனவும் மறு உலகில் கவனிப்புக்கு ஆளாவோம் என்றும் மனமாற நம்பியவர்கள்.
இதை இலங்கையில் நிகழ்ந்த முதல் மதரீதியான தற்கொலைத் தாக்குதல் என்றால் இத்தகைய இரண்டாவது தற்கொலை சம்பவங்கள் கடந்தவாரம் அரங்கேறின. இச் சம்பவங்கள் எவ்வளவு பாரதூரமானவை என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை மிகச் சரியாக உணர முடியவில்லை.
மஹரகமை கஹான்தொட்டை (மாலபே)யைச் சேர்ந்த 46 வயதான ருவன்பிரசன்ன குணவர்தன வாட்டசாட்டமான தோற்றம் கொண்ட ஒரு செல்வந்தர். பொலன்னறுவை பகுதியை சேர்ந்தவர். மனைவி மூன்று குழந்தைகள். வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் தன் சொத்துக்களை விற்று கொழும்பு வந்தவர். மாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வாடகைக்கு வீடமர்த்தி குடியேறியவர். இவரை மத போதகராகவே மக்களுக்கு வெளியுலகுக்கு தெரியும். கொழும்பு, காலி, குருணாகல் பகுதிகளில் மத போதனைகளை இவர் செய்து வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரது ஆன்மீக சொற்பொழிவுகள் சிலவற்றைக் காண முடிகிறது. அவரது பேசும்முறை வீராவேசமாகவோ ஆகர்ஷிக்கும் வகையிலோ அமைந்திருப்பதாக கருத முடியவில்லை.
இவர் தனது உரைகளில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் எண்ணங்களை விதைத்து வந்திருக்கிறார். தன் போதனைகளுக்கு இடையிடையே, இந்நாடு சீரழிந்து விட்டது. நாம் படுகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். விமோசனமொன்று தென்படுவதாகவும் தோன்றவில்லை.
எனவே வளமான வாழ்வை எங்கு எப்படி பெற்றுக் கொள்வது? அதற்கான ஒரே வழி தற்கொலை மட்டுமே. நம் உயிரை நாம் தியாகம் செய்து மறு உலகில் அமைதியாக வாழலாம்; அடுத்த பிறவியில் பணக்காரர்களாக, வசதியான வாழ்க்கையைத் தொடரலாம். தற்போது இக்கஷ்ட ஜீவனத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என்ற சாராம்சம் கொண்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லி வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28ஆம் திகதி கொட்டாவ மஹாகும்புர பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் குணரத்ன நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் மிக தீவிரமான நஞ்சை அருந்தியே உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிசார் கருதுகின்றனர். நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் ஒன்றாக இத்தற்கொலை அமையவிருந்த தருணத்தில் மாலபேயில் வசித்துவந்த ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. மூன்று தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட போதகர் குணரத்னவின் மனைவியும் குழந்தைகளுமே தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பது தெரியவந்தது, வறுமை, குடும்பத் தகராறு அல்லது கணவரின் மறைவால் ஏற்பட்ட சோகம் காரணமாக இத் தற்கொலைகள் நடைபெற்றிருக்கலாம் என ஆரம்பத்தில் பொலிசார் நினைத்தனர். ஆனால் குணரத்ன உபயோகித்த அந்த நஞ்சே இவர்களின் தற்கொலைக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒரே குடும்பத்தில் ஐவர் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரி நஞ்சருந்தி தற்கொலை செய்திருப்பதன் பின்னணியை பொலிசார் துலக்கிக் கொண்டிருந்தபோது கடந்த 3ஆம் திகதி மஹரகமை பழைய வீதியில் உள்ள ஒரு வாடகை விடுதியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து மரணமடைந்த சம்பவம் தெரியவந்தது. இவர் 34 வயதுடைய அம்பலாங்கொடை வத்துகெதரவை வசிப்பிடமாகக் கொண்டவர். மூன்றாம் திகதி அறை எடுத்துத் தங்கியவர் அன்றுமாலை புறப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இரவு ஏழு மணியாகியும் வெளிக் கிளம்பியதற்கான எந்த அடையாளமும் இல்லாததால் விடுதி பணியாளர்கள் அறைக்கு சென்று பார்த்திருக்கிறார்கள். இறந்த உடலைக் கண்டு பொலிசாருக்கு அறிவிக்க, அவர்கள் வந்து விசாரணை செய்தனர். இரண்டு கைபேசிகள், தண்ணீர் போத்தல் மற்றும் நஞ்சு வைக்கப்பட்டிருந்த பை என்பன கைப்பற்றப்பட்டன.
இச் சம்பவத்தையடுத்து யக்கல ராசல் வத்தையில் இருந்து மற்றொரு தற்கொலை சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பெண்மணியின் வயது 21 பல்கலைக்கழக மாணவி. நஞ்சருந்தி உடலை மாய்த்துக் கொண்டிருக்கிறார். தற்கொலை செய்யும் அளவுக்கு இவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்கள் இவரது குடும்பத்தினர்.
இந்த இளைஞனும் யுவதியும் போதகர் குணரத்னவைத் தமது ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் என்பதோடு இவர்கள் நண்பர்களும் கூட. தமது குரு குணரத்னவின் இறுதிக் கிரியைகளில் இவ்விருவரும் கலந்து கொண்டிருப்பதோடு கூடியிருந்தவர்களிடம் குணரத்னவை தாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
தற்போது பொலிசாரின் அச்சமெல்லாம், இவ்விரண்டு சீடர்களைப் பின்பற்றி குணரத்னவை குருவாகக் கருதும் ஏனைய மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என்பதுதான்! குணரத்னவை குருவாகக் கொண்டிருக்கக் கூடியவர்கள், அவரது பிரசங்க கூட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் குறித்து விழிப்பாக இருக்கும்படி பொலிசார் அக்குடும்பங்களை கேட்டுள்ளனர்.
இம் மரணங்கள் ஒரே மாதிரியாக நடைபெற்றிருப்பதால், ஒரு சமயத்தில் இரசாயன பகுப்பாய்வாளராக பணியாற்றியிருக்கக் கூடிய குணரத்னவே தமக்கான நச்சுத் திராவகத்தை அல்லது பொடியை தாமே தயாரித்திருக்க வேண்டும் என்றும் அவரிடமிருந்தே நச்சு ஏனையோருக்கு பகிரப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நஞ்சு இன்னும் எத்தனைபேரிடம் உள்ளது என்பதும் தெரியவில்லை. இதை இவர்கள் பயன்படுத்துவார்களா இல்லையா என்பதும் தெரியாது என்பதும் கவலை அளிக்கும் ஒரு சூழல்.
எனவே, மதங்களில் தற்கொலைக்கும், தற்கொலை மூலம் சிறப்பான ஒரு வாழ்க்கையை அடைய முடியும் என்ற சிந்தனைக்கும் எந்த இடமும் கிடையாது என்பதை மதகுருமார் ஊடகங்கள் வழியாக ஓங்கி ஒலிக்க வேண்டியது அவசியம். குணரத்னவின் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டதால் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் தவறான எண்ணங்களும் தற்கொலை உணர்வும் களைந்தெறியப்பட வேண்டுமானால் ஊடகங்கள் வாயிலாக மாற்று எண்ணங்கள் வெளிப்படுத்தப்படுவது அவசியம். தற்கொலை உணர்ச்சி கொண்டவர்கள் அல்லது அத்தகைய உணர்வு இருக்கக் கூடியவர்களாகக் கருதப்படுபவர்கள் 1926 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசலாம். இது அங்கொட தேசிய மனநல நிலையத்துக்கான விரைவு தொலைபேசி இலக்கமாகும். ஏனெனில் கையில் விஷத்துடன் திரிபவர்களை காப்பாற்ற வேண்டும்.
மதங்கள் கருணையை முதன்மையாகக் கொண்டவை.
எனவே குணரட்னவின் பேத்தல் போதனைகள் வலிமையுடன் மறுத்துரைக்கப்பட வேண்டும். இதுதான் மதம். இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு வருபவர்களை நம்ப வேண்டாம் என்பது வலிமையாக சொல்லப்பட வேண்டும்.
சமயத்துக்கு தமிழில் மதம் என்ற பெயர் சூட்டப்பட்டது. பெரும்பாலும், காரண அடிப்படையில், அனுபவ ரீதியாக சூட்டப்பட்ட பெயராக இருக்கலாம். கார்ல்ஸ்மாக்சும் அபின் போன்றது என்றுதான் குறிப்பிடுகிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மத நம்பிக்கைக்கும் பொருந்தும்.
மதம் அடிப்படையில் அன்பை, சகோதரத்துவத்தை, சகவாழ்வை, சகிப்புத் தன்மையை மற்றும் உதவும் தன்மையைக் கொண்டது. நம் கல்வி மேம்பாடு அடையவும் சுகாதாரம் சகலருக்குமாக விஸ்தரிக்கப்படவும் மதம் ஆற்றியிருக்கும் பணி மகத்தானது. ஆனால் மத போதனைகளையும் வழிமுறைகளையும் தமது வசதிக்காக திரிவுபடுத்தப்படும் போதும், குணரத்ன, ஜிம் ஜோன்ஸ் போன்ற மனோவியாதிக்காரர்களிடம் மதம் சிக்கும்போது அவர்கள் அதனை ஆயுதங்களாக்குகின்றனர்.
அருள் சத்தியநாதன்