ன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது சின்னமுத்து நோய் (Meseal). அந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் அதிகரிப்பே இதற்கு அடிப்படையாக் காரணமாகும்.
சின்னமுத்து நோய் கட்டுப்படுத்தப்பட்ட நாடு என்ற சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள இலங்கை, பூட்டான், மாலைதீவு, வட கொரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளிலும் கூட இந்நோய் பதிவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 2019 இல் இச்சான்றிதழைப் பெற்ற இலங்கையில் 2023 மே மாதம் இந்நோய்க்குள்ளானவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டார். அவர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றிருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பிரதேசங்களிலும் இந்நோய்க்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற போதிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோய்க்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் (2023) மாத்திரம் 710 பேர் இந்நோயாளர்களாக இங்கு பதிவாகியுள்ளனர்.
அதனால் இந்நோய்க்குள்ளான ஒருவர் ஒரு இடத்தில் அடையாளம் காணப்பட்டால் அவர் வாழும் இடத்தைச் சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டப் பிரதேசத்தில் வசிப்பவர்களை இந்நோய் பரீட்சிப்புக்கு உட்படுத்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்தோடு இந்நோய்க்கான தடுப்பு மருந்தை நிராகரிப்பவர்களை அணுகி அவர்களது பிள்ளைகளுக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி கருத்தரங்கில் இவ்விடயங்களைத் தெரிவித்த தொற்று நோய்கள் தடுப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் மஞ்சுள காரியவசம், இந்நோயானது கொவிட் 19 தொற்று தோற்றம் பெற்ற பின்னர் தான் மீண்டும் தீவிரமாகப் பரவும் நிலையை அடைந்திருக்கிறது. ஏனெனில் கொவிட் 19 தொற்றின் அச்சுறுத்தலின் பின்புலத்தில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வதிலும் அதனைப் பெற்றுக்கொடுப்பதிலும் பலவீனங்கள் ஏற்பட்டன. அதனைப் பயன்படுத்தியே உலகின் பல நாடுகளிலும் 2008 காலப்பகுதிக்கு முன்பு போன்ற நிலையை சின்னமுத்து அடைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்றின் பரவுதல் அச்சுறுத்தலினால் 2021, 2022 வருடங்களில் சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றலில் பெரும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டது. அதனால் உலகில் 25 மில்லியன் பிள்ளைகள் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. 15 மில்லியன் பிள்ளைகள் இத்தடுப்பு மருந்தில் ஒரு ஊசியை மாத்திரம் தான் பெற்றுக்கொண்டனர். இதனைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள சின்னமுத்து நோய்க் காரணி மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதாவது கொவிட் 19 தொற்றை விட வேகமாகப் பரவக்கூடியது தான் சின்னமுத்து.
பொதுவாக இந்நோய்க்கு உள்ளானவர் மூச்செடுத்து வெளியே விடும் போதும் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படக்கூடிய சளித்துகள்கள் நேரடியாகவோ அல்லது காற்றில் கலப்பதன் மூலமோ பரவக்கூடியதே சின்னமுத்து. இந்நோய் எந்த வயது மட்டத்தினருக்கும் ஏற்படலாம். ஆனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் தான் இதன் தாக்கமும் பாதிப்பும் பரவுதலும் வேகமாக இருக்கும். ஒருவருக்கு இந்நோய் ஏற்பட்டால் அவரில் இருமல் முக்கிய அறிகுறியாக வெளிப்படும். அத்தோடு காய்ச்சல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல், வாயில் வெள்ளை நிறத்திலான தழும்புகள் போன்றவாறான அறிகுறிகளையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். அத்தோடு காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்கள் கடந்த பின்னர் உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், வயிற்றோட்டம், காதுகளில் தொற்று, மூச்செடுப்பதில் சிரமம் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும்.
இந்நோய்க்கான காய்ச்சல் தீவிரமடையுமாயின் காய்ச்சல் வலிப்பு ஏற்படலாம். அது பார்வை இழப்புக்கு வித்திடலாம். குறிப்பாக விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டால் அவர்கள் பார்வை இழப்புக்கு உள்ளாக முடியும். அதேநேரம் மூளையில் தொற்று ஏற்பட்டு மூளையில் வீக்கமும் ஏற்படலாம்.
இந்நோய்க்கு உள்ளானவர்களுக்கு கடும் வயிற்றோட்டமும் ஏற்படலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாறு வயிற்றோட்டம் ஏற்படுமாயின் உடல் வரட்சி ஏற்பட்டு மரணமும் நேரலாம். காதின் மத்திய பகுதியில் தொற்று ஏற்பட்டு காது கேளாத தன்மையும் ஏற்படலாம்.
இது சுவாசத் தொகுதியின் ஊடாகத் தொற்றும் நோயாக இருப்பதால் நிமோனியா ஏற்படக்கூடிய அச்சுறுத்தலும் உள்ளது. அதனால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு சிறு குழந்தைகள் உயிரிழக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையும் உருவாகலாம்.
அதேநேரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்நோய் ஏற்பட்டால் கர்ப்பப்பையில் பாதிப்புக்கள் ஏற்பட்டு நிறை குறைந்த குழந்தைகள் மாத்திரமல்லாமல் குறைமாதக் குழந்தைகளும் கூட பிறக்க வாய்ப்புள்ளது.
‘இவை அனைத்தையும் விடவும் மிகவும் மோசமான நெருக்கடி தான் இந்நோய் முழுமையாகக் குணமடைந்து 6 முதல் 8 வருடங்கள் கடந்த பின்னர் மீண்டும் பாதிப்புக்கள் ஏற்படுத்துவதாகும். குறிப்பாக மூளையின் சில செயற்பாடுகளில் இந்நோயின் தாக்கம், பாதிப்புக்களை ஏற்படுத்தி கோமா நிலைக்கு இட்டுச் செல்லலாம். அதுவும் மரணத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வெற்றிகர சிகிச்சை முறை எதுவும் இற்றை வரையும் உலகில் கண்டு பிடிக்கப்படவில்லை’ என்றும் குறிப்பிடுகிறார் டொக்டர் காரியவசம்.
1950, 60 களில் சின்னமுத்து மிக வேகமாகப் பரவக்கூடிய நோயாக இருந்தது. அந்த சூழலில் இந்நோய்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 1963இல் புழக்கத்திற்கு வந்தது. ஆன போதிலும் இலங்கை தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தில் 1984இல் தான் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை உள்வாங்கியது. அத்தடுப்பு மருந்து இந்நாட்டிலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.
முதலில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து என வழங்கப்பட்டு வந்த இத்தடுப்பு மருந்து, 2001 முதல், பிறந்து 3 வருடங்கள் நிறைவடைந்த குழந்தைகளுக்கு ருபெல்லா, சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து என இரண்டாம் தடவையாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2011 இல் எம்.எம்.ஆர் என்ற தடுப்பு மருந்து தேசிய மருந்தேற்றத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
அதன் பயனாக சின்னமுத்து நோயைக் கட்டுப்படுத்திய நாடு என்ற பெருமையை 2019இல் இலங்கை அடைந்து கொண்டது. அதன் பின்னர் இந்நோய் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகிலும் பெரிதும் கட்டுப்பாட்டு நிலையில் இருந்தது. கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்நாட்டில் திருப்திகரமான மட்டத்தினருக்கு சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
ஆனாலும் தென்னாசிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளிலும் 2008க்கு முன்பு போன்ற நிலையை சின்னமுத்து அடைய கொவிட் 19 தொற்று பாரிய பங்களிப்பு நல்கியுள்ளது. அதனால் இந்தியா, நேபாளம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் கூட தற்போது இந்நோய் அதிகம் பதிவாகிறது. அதற்கு இப்பிராந்திய நாடுகளைச் சேர்ந்த 9 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் 2020/ -2021 ஆண்டுகளில் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளாமை முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் பிராந்திய நாடுகள் மாத்திரமல்லாமல் இலங்கையும் கூட இந்நோயை மீண்டும் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டுவருவதில் கூடிய வனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் முதலாம் கட்டமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கல்முனை, யாழ்ப்பாணம் ஆகிய 09 மாவட்டங்களையும் சேர்ந்த 6 முதல் 9 மாதங்களுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சின்னமுத்து நோய்க்கான மேலதிக தடுப்பு மருந்து (supplementary measles immunization activity -SIA) நேற்று 06 ஆம் திகதி வழங்கப்பட்டது. ஏனைய வயது குழந்தைகளுக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட உள்ளது. யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் இத்திட்டத்தின் இலக்கு இந்நோயை மீண்டும் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதாகும்.
ஆகவே சின்னமுத்து நோயைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கான தடுப்பு மருந்தை ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிய கால வேளையில் பெற்றுக்கொடுப்பது இன்றியமையாததாகும்.
மர்லின் மரிக்கார்