பத்தரமுல்ல அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய விமானப்படை தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய முழுமையான உரை! (01.01.2024)
விமானப்படைக்கு இன்று புதிய தலைமையகம் கிடைத்துள்ளது. இது மூன்றாவது தலைமையகமாகும். இரண்டு தலைமையகங்கள் கொழும்பில் இருந்தன. தற்போது இங்கு அமைக்கப்பட்டுள்ள தலைமையகம் 73 வருட வரலாற்றில் இலங்கையின் பாதுகாப்பை இது மேலும் பலப்படுத்திப்படுத்தியுள்ளது. விமானப் படையினர், உள்நாட்டுப் போர், உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அளவற்ற அர்ப்பணிப்புகளைச் செய்திருந்தனர். வெளிநாடுகளிலும் அந்த சேவைகளை செய்துள்ளனர். அந்த வகையில் இராணுவம் தனக்கான பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமான பிரிவாகும்.
அதன்படியே இன்று நாம் விமானப்படையின் புதிய தலைமையகத்துக்கு வந்துள்ளோம். கடற் படையினரும் இங்கு வந்த பின்னர் எதிர்காலத்தில் நாட்டின் முன்பாகவிருக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுக்கலாம் எனச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் பார்க்கும் போது உள்ளக அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சிவில் சமூகத்தின் பாதுகாப்பே முதன்மையானது. அதேபோல் நாம் இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தில் இருக்கிறோம். அதனையும் நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோல் 2030 ஆம் ஆண்டளவில் எமது உள்ளக மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளோம்.
முப்படையினருக்கு புதிய தொழில்நுட்ப அறிவு அதேபோல் புதிய தொழில்நுட்பத்துக்கு அமைய விமானப்படையும் ஏனைய இரு படைகளையும் கட்டமைக்க வேண்டும். அதற்கான முதல் அடி வைக்கும் வகையிலேயே நாம் இவ்விடத்திற்கு வந்துள்ளோம். விமானப்படை தலைமையகம் அமைந்திருந்த பழைய கட்டடத்தை பொலிஸ் தலைமையகமாக மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளோம். பொலிஸ் தலைமையகம் அங்கு அமையும். தற்போதைய பொலிஸ் தலைமையகம், வெளிவிவகார அமைச்சு அவற்றை அண்டியுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை விடுவித்து சுற்றுலா வலயமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போதுள்ள வெளிவிவகார அமைச்சின் கட்டடத்தையும் ஜாவத்தை வீதிக்கு கொண்டுச் செல்ல எதிர்பார்க்கிறோம். முன்பிருந்த கட்டடத்தில் பொருளாதார பலன்களை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சி அவசியம்.
நாட்டின் பொருளாதாரத்துடனேயே இன்றைய போராட்டம்!
இன்று நாம் மற்றுமொரு போராட்டத்தை எதிர்கொள்கிறோம். அந்த போராட்டம் வெளிநாட்டு எதிரிகள் அல்லது உள்நாட்டு கலவரக்காரர்களுடனானது அல்ல. மாறாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போராட்டம் ஆகும். போராட்டங்களை விமானப்படையும் ஏனைய படையினரும் பார்த்துக்கொள்வர். நாட்டை பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளது. அது கடினமான பணியாகும். வற் வரி தொடர்பிலும் சில விடயங்களை கூற நினைக்கிறேன். இங்கு அரசியல் செய்வதா? இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்காக பணியாற்றுவதா? என நேரடியாக அமைச்சரவையுடன் ஆலோசிக்க நேர்ந்தது.
கிரேக்கம், லெபனான் ஆகியவற்றின் அனுபவங்கள்!
பொருளாதார வேலைத்திட்டத்தை இரு வருடங்கள் காலம்தாழ்த்தியதால் லெபனான் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டது. மொத்த தேசிய உற்பத்தியும் 50 சதவீதமாக குன்றியுள்ளது. அதிலிருந்து மீள்வது மிகக் கடுமையான முயற்சியாகும். நிலையான கொள்கை இன்மையினால் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 13 வருடங்கள் திண்டாடியது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க நேர்ந்தது. இருப்பினும் நாம் அந்த நிலைமைக்கு செல்லவில்லை. 10 சதவீதத்தினால் மாத்திரமே நமது நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்திருந்தது. நாம் நேரடியான தீர்மானங்களுடன் முன்னோக்கிச் சென்றோம்.
2023ஆம் ஆண்டின் இறுதியில் ஓரளவு வலுவான பொருளாதார நிலைமை உருவாகியுள்ளது. 2023இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் – 3 சதவீதமாக காணப்பட்டது. முதல் இரண்டு காலாண்டுகளிலேயே அந்த மந்த நிலைமை காணப்பட்டது. வருடத்தின் இறுதி பகுதியில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. அடுத்த வருடம் இதனை மிஞ்சிய வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்.
2024இல் 3 வீத பொருளாதார வளர்ச்சி வேகம்!
2026 – 2027இல் 5 வீதம்!!
+2 வீத பொருளாதார வளர்ச்சியே எனது எதிர்பார்ப்பாகும். நாம் சரியாக செயற்பட்டால் +3 வீதமாகவும் மாற்ற முடியும். 2026 ஆம் ஆண்டளவில் 15 சதவீதமாக மொத்த தேசிய உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். பின்னர் துரித வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். எமக்கு ஒத்துழைப்பு வழங்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. எதிர்காலத்தில் இந்தக் கடன்களை செலுத்தும் இயலுமை எம்மிடம் உள்ளதா என்பதே அவர்களின் கேள்வியாகவுள்ளது.
அதுவே எமது பிரதான பிரச்சினையாகும். நாம் கடந்த வருடத்தில் 3.1 ட்ரில்லியன்களை வருமானமாக ஈட்டினோம். அதற்காக நட்டமீட்டும் அனைத்து கூட்டுத்தாபனங்களையும் நிறுத்திவிட்டு விலைகளை அதிகரிக்க நேர்ந்தது. அதன் தாக்கமும் நமக்கே வந்தது.
வற் வரி திருத்தம் எதற்காக?
வரி சேகரிப்பினால் எமக்கு 3.1 ட்ரில்லியன் வருமானத்தை ஈட்ட முடிந்தது. அதனால் நாம் புதிய வருமான வழிமுறைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். அது எமது மொத்த தேசிய உற்பத்தியில் 12சதவீதம் ஆகும்.
2026ஆம் ஆண்டளவில் 15 சதவீதமாக மொத்த தேசிய உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். 2024ஆம் ஆண்டில் 4.2 ட்ரில்லியன்களை வருமானமாக ஈட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகவே வற் வரி மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது.
12 – முதல் 15 வரையில் நாம் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் 0.8 அளவிளான தன்னிறைவை எதிர்பார்க்கிறோம். இருப்பினும் 2025 வரையில் அதனை 2.3 ஆக தக்கவைக்க வேண்டியதும் அவசியம்.
படையினர் இலக்குகளை நாடிச் செல்வதை போல உபாயங்களுடன் சென்றால் நமக்கும் முன்னேற்றம் கிடைக்கும். அதற்காகவே பொருளாதாரத்தை பலப்படுத்துகிறோம். வரி அதிகரிப்பை எவரும் விரும்புவதில்லை. அது தொடர்பில் பல முறை சிந்தித்துள்ளேன். அதனால் எவ்வாறான பலன்கள் கிட்டும். இந்தத் தீர்மானங்களை மேற்கொள்ள தவறினால் 2022 பொருளாதார நிலைமையை நாம் மீண்டும் சந்திக்க நேரிடும். கடினமான தீர்மானங்கள் என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்று அறிவேன். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பட்சத்தில் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அதனால் நாட்டின் நலனுக்காக இந்த தீர்மானங்களை எடுத்தோம்.
பிரபலமாவதற்கு பொறுப்பை ஏற்கவில்லை!
பிரபலமாவதற்காக நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை கட்டியெழுப்பி, உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே எனது நோக்கமாகும். அதனால் கடினமாக இருந்தாலும் சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளேன். அதற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு நன்றி கூறுகிறேன்.
புதிய வருமான அதிகார சபையுடன் 7 – 9 பொருளாதார அபிவிருத்தி இலக்கு!
அதேபோல் வரி சேகரிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. செல்வந்த வரியொன்றும் விதிக்கப்படும். அது நாட்டில் பெருமளவானவர்களை பாதிக்க வாய்ப்பில்லை. அதற்காக புதிய வருமான அதிகார சபையொன்றை உருவாக்க சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அதனால் 2025 – 2026 ஆகும் போது பொருளாதாரம் சுமூக நிலைமைக்கு திரும்பும். வளர்ச்சியை 5சதவீதமாக மேம்படுத்த முடியும். அது போதுமானதல்ல. எமக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் நாட்டின் பிள்ளைகளுக்கு அது போதுமானது அல்ல. இருப்பினும் அது போதுமானதல்ல. எதிர்கால சந்ததிக்காக 8-9சதவீதம் வரையிலான இலக்கை அடைய வேண்டும். அந்த வளர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பிலேயே ஆராய்ந்து வருகிறோம்.
கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இனியாவது ஒன்றிணையுங்கள்!
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான கடினமான தீர்மானங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து மற்றைய அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து சிந்திப்போம். அந்த பயணத்தை துரிதப்படுத்த வேண்டும். விமானப் படைக்கு இருப்பதை போலவே நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. அனைவரும் ஒன்றுபடும் பட்சத்தில் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்குள் மிகத் துரிதமான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக ஒன்றுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். விமானப்படைக்கு வாழ்த்துக்கள்.