உலகளாவிய அரசியல் போக்கானது மேற்காசியாவை மையங்கொண்டுள்ளது. ஹமாஸ், -இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து அத்தகைய நிலை வலுவானதாக மாறிவருகிறது. ஆரம்பத்தில் காஸாவை ஆக்கிரமித்த போர் தற்போது மேற்குக் கரைக்கு மட்டுமல்ல அராபியக் கடலையும் சுயஸ்கால்வாயையும் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் மேற்கும் அத்தகைய போரை மேற்காசியாவில் நிகழ்த்தவே திட்டமிடுகின்றன. ஏறக்குறைய மீண்டும் இஸ்லாமியருக்கு எதிரான ஒரு போருக்கான தயார்ப்படுத்தலை மேற்கு ஆரம்பித்துள்ளது. அதற்கான வாய்ப்பினை இஸ்லாமிய நாடுகள் தாமதப்படுத்தினாலும் அதனை நோக்கி நகர்த்த மேற்கு எடுக்கும் அனைத்து நகர்வுக்கும் பலியாகும் நிலையை நோக்கி இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. இக்கட்டுரையும் ஈரானில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின்னாலுள்ள அரசியலின் உள்நோக்கத்தை தேடுவதாக அமையவுள்ளது.
03.01.2024 இல் முன்னாள் ஈரானிய இராணுவத் தளபதி ஹசிம் சுலைமானி நினைவு கோரலை முன்னெடுக்க இருந்த அமைவிடத்தில் இரு குண்டுகள் வெடித்துள்ளன. ஏறக்குறைய 95 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் தெற்கு நகரமான ஹர்மானில் நிகழ்ந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதொன்றாகவே தெரிகிறது. இத்தாக்குதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாதச் செயல் என ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மற்றும் சுப்பிறீம் தலைவர் அலி ஹமாமேனி குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி இதற்கான விலையை யூதர்கள் கொடுக்க வேண்டிவரும் எனவும் அவர்கள் வருந்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு துருக்கி மட்டுமன்றி அராபிய நாடுகளும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அதனைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ள போதும் அதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. ஏற்கனவே சுலைமானி மீதான ஆளில்லாத விமானத் தாக்குதலையும் ஈரானிய அணுவிஞ்ஞானி Mohsen Fakhrizadeh மீதான சற்ரலைற் ஏவுகணைத் தாக்குதலும் அமெரிக்க, -இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலாகவே தெரிகிறது. எனவே இத்தாக்குலுக்கும் பின்னால் அத்தகைய தரப்பு இருக்கும் என்பதற்கு அதிக ஆதாரங்கள் காணப்படுகின்றன. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
ஓன்று, சுலைமானியின் நினைவுகோரும் சந்தர்ப்பத்தை இஸ்ரேல், -அமெரிக்கத் தரப்பு அதிகம் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகமுண்டு. காரணம் சுலைமானி மற்றும் மோசின் இருவரையும் இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு 14 வருடங்களாக முயன்றதாகவும் அதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாகவும் மொசாட்டின் பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கதாகும். சுலைமானி வலுவான யூத எதிர்ப்புவாதி மட்டுமல்ல சிறப்பான தலைவராகவும் அடுத்த நிலையில் சுப்பிறீம் தலைவராக வருவதற்குமான செல்வாக்கு மிக்கவராகவும் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரானிய மக்கள் வலுவான தலைவராக சுலைமானியைக் கருதியிருந்தனர் என்பது கவனத்திற்குரியதாகும். இன்றும் சுலைமானியால் கட்டமைக்கப்பட்ட இராணுவமும் இராணுவ ஆயுததளபாடங்களும் ஈரானின் பாதுகாப்புக்கு அடிப்படையானவையாக உள்ளன. இன்றும் ஈரானிய மக்கள் சுலைமானி மீதான நேசிப்புடனேயே காணப்படுகின்றார்கள் என்பது நினைவு கோரும் நிகழ்வின் தயார்ப்படுத்தலை அவதானிக்கும் போதே கண்டுகொள்ள முடிந்தது. இதுவே இஸ்ரேலிய-அமெரிக்க தாக்குதல் எனக் கருதுவதற்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
இரண்டு, ஹமாஸ்- இஸ்ரேலியப் போரில் ஹமாஸின் எழுச்சிக்கு அடிப்படையில் ஈரான் இருப்பதாகவே இஸ்ரேல்,- அமெரிக்கா மட்டுமன்றி மேற்குலகமே கருதுகின்றது. ஈரான் நேரடியாக போரில் ஈடுபடாது மறைமுகமாக ஹமாஸ் தரப்புக்கான ஆயுதங்களையும் புலனாய்வு நகர்வுகளையும் மேற்கொள்வதாக மேற்கு நாடுகள் கருதுகின்றன. அதனால் ஹமாஸ் இருப்பு நிலையானதாக அமைந்திருப்பதோடு இஸ்ரேலியத் தரப்பினால் குறிப்பிட்ட காலத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாதுள்ளது. அதனால் இஸ்ரேல் ஈரான் மீது அதிக ஆத்திரம் கொண்டுள்ளது. அத்தகைய ஹமாஸின் வளர்ச்சியையும் எழுச்சியையும் தடுக்க வேண்டுமாயின் ஈரானைக் கட்டுப்படுத்த வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. அதனையே அமெரிக்காவும் செயல்படுத்த முயலுகிறது. ஏறக்குறைய இஸ்ரேலின் போரை அமெரிக்க உட்பட மேற்குலகமே மேற்கொண்டுவருகிறது. ஆதனால் இத்தகைய தாக்குதல் மூலம் ஈரானை போரில் இழுத்துவிடவும் அதற்கான உணர்ச்சியை தூண்டிவிடவும் இஸ்ரேல்- அமெரிக்கத் தரப்பு முனைகிறது. அது மட்டுமன்றி இத்தாக்குதல் மூலம் இஸ்ரேலியர் கொல்லப்பட்டது போல் ஈரானியர்கள் கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. கொல்லப்படும் யூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஈரானிய ஆயுதங்களே காரணம் என இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் பலதடவை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் ஈரானியர் கொல்லப்படுவதன் மூலமே அதற்கு தீர்வு காணமுடியுமென இஸ்ரேலிய தரப்பு கருதுகின்றது.
மூன்று, ஈரானிய ஆதரவு பெற்ற ஹமுத்திக் கிளர்சியாளர்களது நடவடிக்கை ஒட்டுமொத்த மேற்காசியாவில் மேற்குலகத்தின் நகர்வுகளை பாதித்து வருகிறது. கடந்த மூன்று மாதத்திற்குள்ளேயே இருபதுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ஹமுத்திக் கிளர்ச்சிக் குழு அராபிய மற்றும் சுயஸ்கால்வாய்க் கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் மீது நிகழ்த்தியுள்ளது. அதிலும் மேற்கு நாடுகளது வணிகக் கப்பல்களே அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஒருசில சந்தர்ப்பத்தில் இந்தியக் கப்பல்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் இந்திய வெளியுறவு அமைச்சரது ரஷ்ய விஜயத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் உண்டு. ஏறக்குறைய கடல் பிரதேசத்தின் மீதான மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை ஹமுத்தி கிளர்ச்சிக் குழு கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளதாகவே தெரிகிறது. அதற்கான அடிப்படையை ஈரான் வழங்குவதாகவே மேற்கு நாடுகள் கருதுகின்றன. அதில் ஈரான், சிரியா மட்டுமல்ல ரஷ்யா, வடகொரியா மற்றும் சீனாவின் பங்கும் உண்டு என்பதை சர்வதேச அரசியலுக்குள்ளால் கண்டு கொள்ள முடியும். இந்தியக் கப்பல்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளமையிலிருந்து அதனை அறிந்து கொள்ள முடியும். எனவே தனித்து ஈரான் மட்டுமல்ல. மேற்குக்கு எதிரான அனைத்து வலுவான நாடுகளும் ஏதோ ஒரு அடிப்படையில் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் ஆயுத தளபாடங்கள் வழங்குவதுடன் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு அதிக பங்களிப்பும் செய்துவருகின்றன. இதில் ரஷ்யாவின் பங்கு தனித்துவமானதென கண்டு கொள்ள முடியும் மேற்கு நாடுகள் உக்ரைன் போரை கையாண்டது போன்றே இஸ்ரேல், -ஹமாஸ் போரை ரஷ்யா கையாள முனைகிறது. ஏறக்குறைய கிளர்ச்சி அமைப்புக்கள் பயன்படுத்தும் ஆயுததளபாடங்கள் ரஷ்ய தயாரிப்புகள் என்பது தெரிந்த விடயமாகும். அதனால் ஈரான் மட்டுமல்ல ரஷ்யாவும் அத்தகைய அணுகுமுறையை பின்பற்றிவருவதென்பதே சர்வதேச அரசியலாகும்.
நான்கு, ஈரானின் அணுவாயுதக் கனவை எப்படியாவது தடுக்க முனையும் இஸ்ரேல் போரின் காரணமாக அத்தகைய நிகழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறது. அதனால் எச்சரிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதில் கவனம் கொண்டு இயங்குகிறது. அதனை நோக்கி ஈரான் செயல்பட ரஷ்யா பங்காற்றும் என்பதுவும் இஸ்ரேல் தெரிந்து வைத்துள்ள விடயம். ஆதனால் ரஷ்யாவுடன் மோதுவதைக் காட்டிலும் ஈரானை எச்சரிக்கை செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியுமெனவும் இஸ்ரேல் கருதுகிறது. அதனால் தொடர்ச்சியாக அழிவுகளையும் நெருக்கடியையும் கொடுப்பதன் வாயிலாக அணுவாயுதத்திற்கான நகர்வுகளை தடுக்க முடியுமென்ற நோக்குடனேயே தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் ஈரான் தற்போது அணுவாயுதத்தை தயார் செய்வதில் அதிக முனைப்புடன் செயல்படுவதாக தகவல்கள் உண்டு. அதற்கான மறைமுக ஆதரவை சீனா மற்றும் ரஷ்யா வழங்குவதாக தெரியவருகிறது.
ஈரான் மீதான தாக்குதல் அடையாளப்படுத்தப்பட்ட வகையில் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு முயற்சியாக அமைவதுடன் இஸ்ரேலிய புலனாய்வின் வலுவானது ஹமாஸ் உடனான போரில் நெருக்கடியை சந்தித்தாலும் பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்புக்கு பங்காற்றியபடியே உள்ளது. அது மட்டுமன்றி மேற்காசியாவில் அதிக நிலத்தின் வலுவைக் கொண்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். அதுவே அதன் புவிசார் அரசியல் இருப்பாக உள்ளது. அதனால் ஈரானை, ஈராக் போன்று இஸ்ரேல் -அமெரிக்க கூட்டினால் இலகுவில் கையாள முடியாதுள்ளது. அமெரிக்கா 1979 முதல் அத்தகைய நெருக்கடியை கொண்டுள்ளது. அதற்கு இன்னோர் வலுவான விடயம் அதன் மதக்கட்டமைப்பும் அதனூடான அரசியல் வலுவும் பிரதான இயங்குதிறன் கொண்டதாக அமைந்துள்ளது. அதனால் அதன் மீதான தாக்குதல்கள் சாத்தியமாகுமே அன்றி ஏனைய மேற்காசிய நாடுகளைப் போன்று கையாளுவது கடினமானதாகும். அது எப்போதும் ஈரானின் நிலப்பரப்பிலுள்ள அரசியலாகும். அத்தகைய அரசியலை சரிவரக் கையாள்வதில் அதன் அரசியல் தலைமைகள் செயல்படுகின்றன. அதுவே ஈரானின் பலமாகும். இதனை எதிர் கொள்வதிலேயே மேற்கு நாடுகள் அதிக நெருக்கடியை எதிர் கொள்கின்றன. தற்போது கூட ஈரான் நேரடியாக போரில் ஈடுபடாது. ஆனால் போரை நகர்த்துகின்றது. அதுவும் கிளர்ச்சி அமைப்புக்களை கையாளுவதன் வாயிலாக ஒரு நாட்டுக்கு எதிரான போரை நகர்த்துவதில் வெற்றி கண்டுவருகின்றன. இது அதன் அரசியல் தலைமைகளின் நகர்வாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது முழுமையான வெற்றியை ஈரானுக்கு வழங்காது விடுத்தாலும் போரை நகர்துவதில் முனைப்பான செயல்பாடாகவே உள்ளது. இது சர்வதேச உறவுக்கான களமாகும். இதன் வளர்ச்சியே சர்வதேச அரசியலாகவுள்ளது.
எனவே நாடுகளை கையாளுவதும் அணிசேர்வதுவும் பிரித்து மோத வைப்பதும் அழிவுகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்துவதும் சர்வதேச அரசியல் என்பதை மறுக்க முடியாது. அதனிடம் நீதியோ நியாயமோ எதிர்பார்க்க முடியாது என்று ஹரேல் லக்ஸ்சி குறிப்பிட்டதே பொருத்தமானது. அது ஒன்றும் புனிதமானதல்ல. சர்வதேச அரசியல் என்பது மோதலுக்கானதும் போர்களுக்கானதும் வன்முறைக்கானதும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதனிடம் உரிமையும் சுதந்திரமும் தராண்மைவாதமும் உண்டு என்பது ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் வன்முறைமுகத்தையும் பிரதிபலிக்கிறது. அதனையே தற்போது மேற்காசியக் களத்தில் கண்டு கொள்ள முடிகிறது. அதில் ஈரான், -இஸ்ரேல் முக்கிய போரிடும் சக்திகளாகவும் அவற்றுக்கான அணிகள் ஏனைய பெரு வல்லரசுகளாகவும் காணப்படுகின்றன.