கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியானது மக்கள் வரிசை, வீதியில் இறங்கிப் போராட்டம், ‘அரகலய’ எனக் குழப்பம் நிறைந்த ஆண்டாக அமைந்தாலும், 2023ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் அமைதியான ஆண்டாகவே அமைந்திருந்தது.
இன்றுடன் எம்மைக் கடந்து செல்கின்ற 2023 ஆம் ஆண்டு ஓரளவு அமைதியான ஆண்டாக முடிவடைந்திருக்கின்றது. ஆனால் நாளை பிறக்கப் போகின்ற 2024ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரையில் பரபரப்புமிக்க, குறிப்பாக அரசியல் ரீதியில் பரபரப்புமிக்க ஆண்டாக அமைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
புதிய வருடமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என்பன நடத்தப்படக் கூடிய ஆண்டாக இருப்பதால், நாட்டின் அரசியல் கட்சிகள் இரு தேர்தல்களிலும் மக்களை தம்பக்கம் ஈர்த்தெடுத்து, மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒத்திவைத்தமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடுகளும் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்பார்த்து ஒருவருக்கொருவர் கூட்டணி ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளன.
ஒரு சில கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான இணக்கப் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதும், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் தனித்துப் போட்டியிட விரும்புவதாகத் தெரியவருகிறது.
நாடு எதிர்கொண்டிருந்த நிலைமைகளிலிருந்து மீண்டுவந்து ஓரளவுக்கேனும் தலைதூக்கும் நிலைமைக்கு நாட்டைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இருந்தபோதும் வரிகளை அதிகரிப்பதற்கும். பணவீக்கத்தை அதிகரிப்பதற்கும் இடமளித்திருப்பதாக விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன. இருந்தபோதும், நாடு பொருளாதார ரீதியில் மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடிந்தது.
அவருடைய இந்த முயற்சிகளின் காரணமாக 2022ஆம் ஆண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்த காட்சிகள் இப்போது தொலைதூர நினைவாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் முயற்சியின் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மாத்திரமன்றி ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்தியா ஆகியவற்றிலிருந்தும் நிதி ஒத்துழைப்புக்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் அதேநேரத்தில், அரசியல் ரீதியாக மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த தனது கட்சியை மீளெழுச்சி பெறச் செய்யும் விடயத்திலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருப்பதையும் காண முடிகிறது.
பல தசாப்தங்களுக்கு மேலாக முதல் இரண்டு இடத்தில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி 2020 ஆம் ஆண்டு இரண்டு சதவீதத்திற்குக் குறைந்தது. இந்தக் கட்சி தற்பொழுது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை மாத்திரம் கொண்ட கட்சியாகக் காணப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவான அமைச்சர்கள் ஹரின் பெர்னாந்து மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் மீண்டும் தமது தாய்க் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தேர்தலொன்றை எதிர்கொள்வதற்கான வியூகத்தை அக்கட்சி வளர்க்கத் தொடங்கியுள்ளது.
ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து தமது கட்சியை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலான கூட்டங்களை ஆரம்பிக்கவிருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஆனால் மற்றைய அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மீளமைப்புப் பணிகள் மந்தகதியிலேயே காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்தவும், மேலும் தாமதமின்றி தேசிய ரீதியாக நடத்தப்படக் கூடிய தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறும் தனது கட்சியின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இருந்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அதிகார ரீதியிலான பதவிகள் இல்லாத நிலையில் மக்கள் மத்தியில் செல்ல முடியுமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையின் தேர்தல் அரசியலை எடுத்து நோக்குகையில், அதிகாரத்தில் இருக்கும் கட்சியில் நபர்களாலேயே தேர்தலில் சிறப்பாக செயற்பட முடியும் என்ற தோற்றப்பாடு காணப்படுகிறது. கடந்த காலத் தேர்தல்கள் இதற்கு சான்று பகர்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பிரதமர் பதவியையும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவினால் ஜனாதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுன அமைச்சரவையுடன் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருவதால், அந்தக் கட்சியின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு பொதுவேட்பாளராகத் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்களையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஏற்கனவே ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதற்கு சாதகமாகப் பதிலளிப்பார்கள் என்றே நம்பப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களைப் பொறுத்தவரை இவ்வாறான தெரிவொன்றுக்குச் செல்லக் கூடியவர்கள் உள்ளனர் என்பது பகிரங்கமான விடயமாகும். இறுதியில் அவர்கள் ஜனாதிபதியுடன் இணைவார்களா என்பது, ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்புகளை அவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
இது ஒருபுறமிருக்க, தற்பொழுது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரியதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மீது ஏற்பட்டுள்ள மக்கள் ஆதரவு பிரதான எதிர்க்கட்சியாகத் தம்மை நிலைநிறுத்துவதில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாகவே அமையும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தன்னை தேசியத் தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள இயலாத நிலையில் உள்ளாரென்பதையும் மறுப்பதற்கில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் விடுக்கப்பட்ட அறிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, அவரது கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வும் மிகவும் பலவீனமான மட்டத்திலேயே காணப்படுகிறது. அது மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்குள் பல்வேறு தலைவர்களும் உள்ளனர். குறிப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தன்னைத் தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் அவர் தனக்கான பிரசாரங்களை தனியாக முன்னெடுத்திருந்தார். அவர் மாத்திரமன்றி பாட்டலி சம்பிக ரணவக்க போன்றவர்களும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒரு சில விடயங்களில் முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இருந்தபோதும், பொதுத் தேர்தல் என வரும்போது அவர்கள் அனைவரும் இணைந்து கூட்டணி அமைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் தெரிவாகி தற்பொழுது எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் வியத்மக உறுப்பினர்கள் எனப் பலரும் எதிர்க்கட்சித் தலைவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இவர்களில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ போன்ற குழுவினர் இணைவார்களா என்பது உறுதியாகாத போதும் ஏனையவர்கள் இணைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான அரசியல் நகர்வுகளின் இறுதியில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணி அமைக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் தரப்பினர் மீதும் விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர்கள், எவருடனும் கூட்டணி அமைக்க முடியாதுள்ளனர்.
அவ்வாறு கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஐயப்பாடுகளும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாற்றமொன்றுக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற கணிப்பீடுகளை அவர்கள் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்தகால வரலாறுகள் அவர்கள் தொடர்பில் கசப்பான அனுபவங்களை வழங்கியிருப்பதால் மக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகப் பார்வை இன்னமும் அகலவில்லையென்றே கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவை களமிறக்கப் போவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பொதுத்தேர்தலில் எவ்வாறான முயற்சிகளை அவர்கள் முன்னெடுக்கப் போகின்றனர் என்பதும் தெளிவாக இல்லை.
இதுபோன்று, பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் நிறைந்த பரபரப்புச் சூழல் நிறைந்த ஆண்டாகவே பிறக்கவிருக்கும் 2024ஆம் ஆண்டு அமையப் போகின்றது என்பதே எதிர்பார்ப்பாகும்.
எவ்வாறான பரபரப்பு அரசியல் இருந்தாலும் பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் முன்முயற்சிகளே எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து முயற்சிகளும் தலைகீழாகச் சென்று நாடு மிகவும் மோசமாக நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.