“விக்னேஸ்வரனை போன்று நாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்கை மாறுபவர்களல்ல. தொடர்ச்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவரை போல நாம் நேரத்துக்கு நேரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்கை மாறுபவர்கள் கிடையாது. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதிவரை செயற்படும்.
இதேவேளை தமிழ் தரப்புகளுக்கு தீர்வை வழங்குவதாக கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொடர்ச்சியாக மார்ச் மாதம் தீர்வு திட்டத்தை வழங்குவதாக கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் பல ஏமாற்றங்கள் இருந்தாலும் நாம் சந்திப்புகளில் கலந்துகொள்கின்றோம். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகின்றது.
தேர்தலை நடத்துவது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றது” எனத் தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்