முற்றத்திற்கு ஒரு மரம் அவசியம் –
அது முருங்கை மரம் தரும்
முத்தான இலைகளின் கல்சியம்!!
பொன்போன்று மேனியை என்றுமே
புதுமை மாறாது பாதுகாக்கும்
பொன்னாங் கண்ணிக் கீரை!!
அருமருந்தாக அகத்தினில் நிற்பது அகத்திக்கீரை-
ஆறாத புண்ணையும் தேற வைக்கும்
வலுவான கீரை!!
வேரோடு அறுத்து பிசைந்து உண்பதால்
சாறோடு உடலில் சேர்ந்து
மூளை வளர்ச்சியை தருவது வல்லாரை கீரை!!
குறும்பான பாடலோடு விரும்பாத வைத்தியராய்
கசப்பான சீனி நோய்க்கு எதிர்ப்பான
ஆயுதம் குறிஞ்சாக்கீரை!!
மாம்பாஞ்சான் என்றதொரு மகத்துவ கீரை
தேன் மருந்து போல….
இதற்கு ஒடுவடக்கி என்றதோர் பெயருமுண்டு..!!
வாதம் பித்தம் – வாட்டும் தாகம் போக்கி
உணவில் வாசனை சேர்த்து
போஷனை தருவது கொத்தமல்லிக் கீரை!!
கலப்பு சத்துக்களின் கலசமாய் மிளிர்வது
சூழலில் கிடைப்பது அரிதாய்
தெரிவது தவசிக் கீரை!!
நோய் எதிர்ப்பை தாங்கி நிற்கும்
வெந்தயக்கீரை…
வாயுக் கோளாறையும் சரி செய்யும் பந்தயக் கீரை!!
முட்களின் அரசியாய் ஒரு கீரை
குப்பையில் முளைத்து
கொடியாய் படர்ந்து நிற்கும் தூதுவளைக் கீரை..!
சளி சிக்கலின் நிவாரணக்கீரை!!
புதுமணம் கமளும் புதினாக்கீரை…
புத்துயிர் கொடுத்து சமையலில் சுவை சேர்க்கும்..!!
எளிதில் கிடைத்திடும் முளைக்கீரை….
ஜீரணம் தந்திடும் அரும் கீரை!!!
எலும்புகளின் சக்தியை பலப்படுத்தி
தழும்புகளை மறைய செய்யும் பசளிக்கீரை!!
குழம்புகளில் கொஞ்சம் சேர்த்து
உடனுக்குடன் உண்டு வந்தால்
கொடிய நோயினை வென்று தரும்
கரிசலாங்கண்ணி கீரை!!
சூழலின் அருட்கொடையாம்
சுகமான வாழ்வின் மருத்துவம் பேசும்….
அகன்று விரிந்த வையகம் தந்த மானுட வாழ்வின்
ஆயுளை பாதுகாக்கும் ஒளடதமாய்
இலைகளின் பாக்கியம்!!