ஜனவரி மாதம் முதல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவு செய்து இலக்கமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென அந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.எம்.நபீர் தெரிவித்தார்.
அந்த வகையில் நபர் ஒருவருக்கு வருமான வரி செலுத்தக்கூடிய வகையில் வருமானம் இருக்குமானால் மாத்திரம் அவர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ள அவர், எவ்வாறெனினும் 18 வயதுக்கு மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி இலக்கமொன்றை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக இந்த இலக்கமும் கட்டாயமானதாகுமென குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தின்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவு செய்து இலக்கமொன்றை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
எவரும் அது தொடர்பில் தவறான அர்த்தத்தை கொள்ள வேண்டாம். பதிவு இலக்கத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வரிக் கோவைைய ஆரம்பித்தல் என்பது இரண்டும் இரண்டு விடயமாகும். அது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை. அந்த வகையில் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தின் இலக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வரி வருமானம் செலுத்தக்கூடிய வகையில் வருமானம் உள்ளோர் மட்டுமே வரியை செலுத்த வேண்டும். அப்போது அவர்களுக்காக வரிக் கோவை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.