இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சவர்க்காரம், எண்ணெய், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட சம்பவத்தை தமிழ்நாட்டுக் கரையோர பொலிஸார் முறியடித்தனர்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (29) இலங்கைக்கு பொருட்கள் சிலவற்றை கடத்தவுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரையோர பொலிஸார், புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்டனர். அதிலிருந்து சவர்க்கார வகைகள், எண்ணெய், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவை இந்திய ரூபா பெறுமதியில் 16 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா எனும் (இலங்கை மதிப்பில் 64 இலட்சத்து 78 ஆயிரத்து 416 ரூபா) மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
இவை அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த வாகனத்தில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்துகொண்டதுடன், இவை வள்ளங்களில் ஏற்றப்பட்டு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்ததாகவும் இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.