வடக்கு ரயில் பாதையின் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணி 3,000 கோடி ரூபா செலவில் எதிர்வரும் ஜனவரி 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான ரயில் பாதையே இரண்டாவது கட்டமாக புனரமைக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் புனரமைப்புப் பணி காரணமாக கொழும்பிலிருந்து அநுராதபுரம் செல்லும் ரயில் சேவைகளை நிறுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து மஹவ மற்றும் அதற்கப்பால் அநுராதபுரம் அல்லது யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளின் வசதிக்காக 05 மாதங்களுக்கு 20 அதிவேக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் ரயில் பயணிகள் சுமார் 05 மாதங்களுக்கு சிரமப்பட நேரிடலாமெனவும் அவர் தெரிவித்தார். அதன்படி கொழும்பிலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கும் மஹவவிலிருந்து அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.