அரசாங்க உர நிறுவனங்களான லங்கா உர நிறுவனம் (Ceylon Fertilizer Company Ltd) மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் (Colombo Commercial Fertilizers LTD) ஆகிய இரண்டு உர நிறுவனங்களும் 2023ஆம் ஆண்டில் 480 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன. கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் 360 மில்லியன் ரூபாவையும், லங்கா உர நிறுவனம் 120 மில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியுள்ளன.
அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை (போனஸ்) வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஊக்குவிப்புத்தொகை வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (28) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. இதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இவ்விரு நிறுவனங்களிலும் பணிபுரியும் 420 ஊழியர்களுக்கும் இரண்டு மாத அடிப்படை சம்பளத்துக்கு சமமான ஊக்கத்தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது இவ்விரு உர நிறுவனங்களும் விவசாயத்துக்கான உர வகைகளை வழங்கி வருவதுடன், இந்த நிறுவனங்களின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விரு நிறுவனங்களின் தலைவரான கலாநிதி ஜகத் பெரேராவுக்கு பணிப்புரை விடுத்தார்.
சட்டங்களில் திருத்தம் தேவையென்றால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் உர விநியோக நடவடிக்கையிலிருந்து அரசு விலகும் என்பதால், இவ்விரு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தனியாருக்கு போட்டியாக உர விநியோகத்தை முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போது தனியார் நிறுவனங்கள் பூச்சிகொல்லி மற்றும் களைகொல்லிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து விவசாயிகளை சுரண்டுவதாகவும், எனவே இந்த வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை ஒழிக்க அரசாங்கத்தின் தலையீட்டில் போட்டியை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.