Home » போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதில் நாடெங்கும் தொடரும் தீவிரமான வேட்டை!

போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதில் நாடெங்கும் தொடரும் தீவிரமான வேட்டை!

by Damith Pushpika
December 31, 2023 6:59 am 0 comment

2022ஆம் ஆண்டில் ‘அரகலய’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னர் நாடு எதிர்கொண்ட பாரியதொரு அச்சுறுத்தல் மிக்க சவாலாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

நாடு எதிர்கொண்ட பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட பாதாள உலகக் குழுக்களும், போதைப்பொருள் வர்த்தகக் கும்பல்களும் இலங்கையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கின.

இதன் விளைவாக போதைப்பொருள் பாவனை அதிகரித்திருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். குறிப்பாக பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர், யுவதிகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து விட்டது என்ற விமர்சனங்களும், இவற்றைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன.

போதைப்பொருள் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனப் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன.

மறுபக்கத்தில், பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்த அரசியல் தீர்மானங்களும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்னவுக்கு பதவி நீடிப்புக்கள் வழங்கப்பட்டு வந்ததுடன், புதியதொருவர் நியமிக்கப்படாமல் இருந்தார்.

இந்த நிர்வாக ரீதியான குழப்பங்களும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சாதகமாகிப் போயிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே பல்வேறு இழுபறிக்குப் பின்னர் பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டார். அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனத்தை வழங்கினார்.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற பாரியதொரு பொறுப்பு பதில் பொலிஸ்மா அதிபரின் தோள்களில் சுமத்தப்பட்டது. விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்த அவர், அதனை நடைமுறையிலும் செயற்படுத்தத் தொடங்கினார்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ‘யுக்திய’ என்ற நடவடிக்கையை அவர் ஆரம்பித்தார். போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோத செயற்பாடுகள் என பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நாடு முழுவதிலும் தேடுதல் நடத்தி அவர்களைக் கைது செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்களைப் பாதித்திருப்பது தொடர்பில் அக்கறை காண்பித்துள்ள பதில் பொலிஸ்மா அதிபர் அதற்கான தடுப்பு நடவடிக்கையையும் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 500 மீட்டர் சுற்றளவில் எவ்வாறான போதைப்பொருள் செயற்பாடும் இருக்கக் கூடாது எனப் பொலிஸாருக்கு அவர் அறிவித்துள்ளார். பாடசாலை விடுமுறையை முடித்துக்கொண்டு பாடசாலை செல்லும் மாணவர்களுக்குப் போதையற்ற சுற்றுச்சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய கட்டளையாகும்.

குழந்தைகளை இலக்காகக் கொண்ட போதைப்பொருட்கள் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பல்வேறு தெற்காசிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர ஆரம்பித்தன. இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சில உள்ளூர் அரசியல்வாதிகள் முக்கிய முகவர்கள் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

அந்த நாடுகளில் அந்தப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன, ஆனால் இலங்கை மற்றும் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யும் ‘தொழிற்சாலைகள்’ உள்ளன.

இவ்வாறான பின்னணியில் யுக்திய நடவடிக்கையின் ஊடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவதுடன், போதைப்பொருள் வியாபாரிகளுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2024 ஜூன் இறுதியில் நாட்டில் அனைத்து போதைப்பொருள் செயற்பாடுகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன என்ற செய்தியுடன் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்தியின் அழிவுக்குக் காரணமாக அமையக்கூடிய இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதும் அவசியமாகும். அது மாத்திரமன்றி மிகவும் சிறியளவு தொகை போதைப்பொருளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்களை விட பாரியளவில் போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தும் நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களின் கடத்தல் வலையமைப்புக்கள் முறியடிக்கப்படுவதே காலத்தின் தேவையாகும்.

இவ்வாறான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் சட்டத்திட்டங்கள் அமைக்கப்படுவதும் அவசியமாகும். போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அனைத்து விதமான ஆபத்துக்களையும் எதிர்கொள்வோர் சாதாரண மக்கள் ஆவர். எனவே அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டியது அவசியமாகும்.

போதைக்கு அடிமையானவர்களின் ‘புனர்வாழ்வு’ நேரத்தையும், பணத்தையும், வளங்களையும் விரயமாக்குவதாக பலர் கருதுகின்றனர், ஏனெனில் அவர்களில் 99 சதவீதம் பேர் மறுவாழ்வு மையங்களில் இருந்து திரும்பியவுடன் தங்கள் ‘பழக்கத்தை’ மீண்டும் தொடங்குகிறார்கள். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள், பெரும்பாலான கைதிகள் இன்னமும் சமூகத்திற்கு மீளவிடுவிக்கப்படுவதற்கு போதுமான தகுதியுடையவர்களாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

மறுவாழ்வு செயல்முறைக்குப் பிறகு அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை அதே குற்றத்திற்காக பிடிபட்டால் கடுமையான தண்டனைகளை விதிக்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைக்கு அடிமையான ஒவ்வொருவரின் நடத்தைக்கும் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய உறவினர் பொறுப்பேற்க வேண்டும்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division