Home » குடும்பத்தோடு சிக்கிய ‘குடு ரொஷான்’

குடும்பத்தோடு சிக்கிய ‘குடு ரொஷான்’

by Damith Pushpika
December 31, 2023 6:57 am 0 comment

போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் இலங்கைக்கு மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகம் மூலமே பாதாள உலக குழுக்கள் பண பலம் படைத்தவர்களாக மாறுகின்றன.

பெரும்பாலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாய், இந்தியா போன்ற நாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இத்தகைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவுக்கும் பெரும் தலைவலியாக மாறிவருவதால் இவர்களை வலை விரித்து தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக தற்சமயம் இடம்பெற்றுவருகின்றன.

இதுதவிர இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இவர்களது பணபலத்தினால் இந்நாடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். பிரான்ஸ் நாட்டில் இதுவரை 29 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ‘யுக்திய’ என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இடைக்கால பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று, ஓரிரு தினங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் பொலிஸார் 24 மணிநேர சோதனைகளை நடாத்தி வருகின்றனர்.

இதனால் சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிவதாக கூறப்படுகின்றது. இதுவரை 17,837 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் பட்டியலிட்டுள்ள சந்தேகநபர்களில் 4,665 பேரில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மொனராகலை – அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவலவ சரணாலயத்திற்கு உட்பட்ட வெஹெரகொல்ல பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த கஞ்சா தோட்டமொன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதனால் யுக்திய சுற்றிவளைப்புகளுக்கு அஞ்சி பலம்பொருந்திய பாதாள உலக குற்றவாளிகள் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். சாதாரண மக்கள் சுற்றுலா மற்றும் ஓய்வெடுப்பதற்காக செல்லும் இடங்களான கதிர்காமம், எல்ல, நுவரெலியா, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களில் பாதாள உலகின் பிரபல்ய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சந்தேகம் வராத வகையில் குடும்பங்களுடன் இப்பகுதிகளில் தங்கியிருப்பதாக தெரியவருகின்றது. அந்தவகையில் குடும்பத்துடன் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணம் சென்று தங்கியிருந்த பலம் பொருந்திய பாதாள உலகக் குற்றவாளி ஒருவரை வரக்காபொல பொலிஸார் யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் கடந்த 26ஆம் திகதி கைது செய்தனர்.

இவர் வேறு யாருமல்ல கொழும்பு மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான பாதாள உலக குற்றவாளியான ‘ குடு ரொஷான்’. தெமட்டகொட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் காரர்களின் உதவியுடனே குடு ரொஷான் செயற்பட்டு வருகின்றார். 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி மட்டக்குளியில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரியான சுட்டி உக்குன் உட்பட ஐவரை சுட்டுக் கொன்றதன் மூலம் குடு ரொஷான் மிகப்பெரிய பாதாள உலக நபராக மாறினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போதைப்பொருள் வர்த்தகத்தில் தனக்கு போட்டியாகவிருந்த இருவரை மாதம்பிட்டி மயானத்தில் வெட்டிக் கொலை செய்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட போதும் பணபலம், அரசியல் செல்வாக்கு காரணமாக அதிலிருந்து குடு ரொஷான் தப்பித்து சுதந்திரமாக நடமாடினார். பொலிஸ் கெடுபிடிகளிலிருந்து சூட்சுமமான முறையில் தப்பிக்கும் வித்தை தெரிந்தமையால் நாட்டிலிருந்து தப்பிச் செல்லாது இங்கிருந்தே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். மட்டக்குளியை மையமாக கொண்டு தனது போதைப்பொருள் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பினார்.

இந்நிலையிலேயே ‘யுக்திய’ சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் பாணியில் கடந்த 20ஆம் திகதி நுவரெலியாவுக்கு செல்கின்றார். அங்கு ரூ. 30000 க்கு நட்சத்திர ஹோட்டலொன்றில் அறையை பெற்றுக் கொண்டு சில நாட்கள் தங்கியிருந்த குடு ரொஷான், கடந்த 26ஆம் திகதி மீண்டும் கொழும்பு நோக்கி பயணமானார். இந்நிலையில், இதுதொடர்பில் கேகாலை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் வரக்காபொல பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன்படி துரிதமாக செயற்பட்ட வரக்காபொல பொலிஸார் கொழும்பு-, கண்டி பிரதான வீதியின் அகுருவெல்ல என்ற இடத்தில் வீதித் தடையை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமான வாகனங்களை சோதனையிட்டனர். இதன்போதே அகுருவெல்ல சந்தியை குடு ரொஷான் பயணித்த கார் கடந்ததும் பொலிஸார் வாகன தடுப்பை பயன்படுத்தி வழக்கமான முறையில் காரை நிறுத்தினர். பொலிஸாரின் உத்தரவுக்கு இணங்க காரை நிறுத்தியபோதே ​​காரின் பின்னால் வந்த உடனடியாக வேனும் நிறுத்தப்பட்டது. காரில் இருப்பவர்களின் உறவினர்கள் தான் வேனிலும் இருக்கின்றனர் என்பது இதன்போது தெரியவந்தது.

பொலிஸாருக்கு ஆரம்பத்தில் கிடைத்த தகவல்களில் இக் குழுவில் பாதாள உலக குற்றவாளி குடு ரொஷன் இருந்ததாக கூறப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான குழுவினர் இருப்பதாகவும் அவர்களிடம் போதைப்பொருள் இருப்பதாகவுமே தகவல் வழங்கப்பட்டது. அதன்படி, காரில் இருந்தவர்களை சோதனையிட்டபோது, ​​அதில் வந்தவர்களில் ஒருவரிடம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகம் வலுக்கவே, வானில் இருந்தவர்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் சோதனையிட்டனர். அவர்களில் ஒருவரிடம் போதைப்பொருள் இருந்தது. அவர்கள் இருவரிடமும் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளின் அளவு 01 கிராம் 875 மில்லிகிராம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி 10 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 08 சிறுவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும் கைதுசெய்யப்பட்டவர்களில் பாதாள உலக நபரான குடு ரொஷான் இருந்ததை வரக்காபொல பொலிஸ் அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவர்கள் மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்தமையால், பெயர்ப் பட்டியலை தயாரித்து அவர்களை அடையாளம் காண்பதற்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்துக்கு வரக்காபொல பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

மட்டக்குளிய பொலிஸாரின் தகவல்களின் படியே குடு ரொஷான் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிய வருகிறது. மேலதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் நீதிமன்றத்தின் அனுமதியுடனும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போதே நுவரெலியா சுற்றுலாப் பயணம் பற்றிய தகவல்கள் கசிய தொடங்கின.

குடு ரொஷான் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஜா-எல மற்றும் மட்டக்குளியிலுள்ள அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் வீடுகள், சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சொத்துக்களை தடை செய்வதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை ஏற்கனவே சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

வசந்தா அருள்ரட்டணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division