சட்டம் ஒழுங்கை சீர்செய்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது. இளைய தலைமுறையினரை சவால்மிக்க உலகுக்கு தயார்படுத்துவற்கு இந்த சட்ட ஒழுங்கும் சமூக ஒழுக்கமும் அவசியம். ஆட்கடத்தல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஒப்பந்தக் கொலை என்பவற்றுக்கு சட்டச்சீர்குலைவுகளே காரணம். இதைக் குலைப்பதற்குப் பின்னாலுள்ள சக்திகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது உலகையே உலுக்கியுள்ளது.
போதைவஸ்து மாபியாக்களின் பிடியில் சட்டம் சிக்கிவிட்டதா? இவ்வாறு எண்ணுமளவிலேயே நிலைமைகள் உள்ளன. நாளாந்தம் கைப்பற்றப்படும் கஞ்சா, அபின், சீஷ் மற்றும் கடலில் கைவிடப்பட்ட நிலையில் மிதக்கும் ஏஷ், கொகெய்ன் போன்ற போதைவஸ்துக்களின் விநியோகஸ்தர்கள் யார்? இவற்றின் வியாபாரத்தளமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறதா?
அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஒத்துழைப்பு இந்த வியாபாரத்தில் இருக்கிறதா? இந்தக் கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது அரசாங்கம். பிரான்ஸ் மற்றும் டுபாயிலிருந்து இந்த வியாபாரமும் போதைக்கடத்தலும் இயக்கப்படுகிறது. பாதாளக் கோஷ்டியினரின் முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் புலனாய்வு அதிகாரிகளைக் கூட கொல்லுமளவுக்கு, போதை மாபியாக்களின் பலம் நாட்டின் பல துறைகளுக்குள்ளும் புகுந்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தி, புலனாய்வு அதிகாரிகளை பின்வாங்கச் செய்யும் யுக்திகளை இந்த போதை மாபியாக்கள் பயன்படுத்துகின்றன. இதனால்தான், போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். ஏன், அரசாங்கத்துக்கும் இந்த சந்தேகம் உள்ளது. இவ்வாறு சந்தேகத்திலுள்ள அரசாங்கம்தான், விசேட இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மாகந்துர மதுஷ், அங்கொட லொக்கா, பொடிலெஸ்ஸி மற்றும் கொஸ்கம சுஜி என்றெல்லாம் புனைப்பெயரில் பிரபல்யமாகியுள்ள இவர்களின் பூர்வீகத்தை புரிந்த பின்னர்தான், அரசாங்கம் இந்த “யுக்திய” இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கையில், இதுவரை கைதானவர்கள், கைப்பற்றப்பட்டவைகள், பெறப்பட்டுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தை கதி கலக்கியுள்ளது. போதைக் குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறையிலுள்ளவர்களையும் தொடர்ந்து தூண்டுமளவுக்கு இவர்களின் தொடர்பாடல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
பாதாளக் கோஷ்டிகளின் பிரதான பொருளீட்டலாக இந்தப் போதை வியாபாரமுள்ளது. கோடிக்கணக்கில் குவியும் இந்தச் செல்வங்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிளவுகளால்தான், பல குழுக்கள் ஏற்பட்டு உள்ளக மோதல்கள் உண்டாகியுள்ளன. இரகசிய தகவல்கள் கசிந்துவிடுவதை பாதுகாக்க முந்திக்கொள்ளும் இந்தக் குழுக்கள்தான், தனித்தனி நபர்களை கொன்றுவந்துள்ளன. சில கொலைகளை கண்டுகொள்ளாதிருக்க, உயர் அதிகாரிகளுக்கு கையூட்டுக்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, டுபாய் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வலையமைப்புள்ள இந்தப் போதைக் கோஷ்டிகளைக் கையாள்வதிலுள்ள கடினங்களை கச்சிதமாகக் கையாளவே “யுக்திய” விசேட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பாகியுள்ளன. இளையோரின் எதிர்காலத்தை போதைக் கும்பலின் பிடியிலிருந்து விடுதலையாக்கும் அரசின் இத்திட்டம் பாகுபாடின்றி பாராட்டப்பட வேண்டும். பாராளுமன்றமே ஒன்றுகூடி தீர்மானித்த இவ்விடயம் வெற்றி பெற்று, சட்டம் ஒழுங்குள்ள சமூகம் உருவாக ஒவ்வொருவரது ஒத்துழைப்புகளும் அவசியம்.
சுஐப்.எம்.காசிம்-