இந்திய அமுலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரத்தில், பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ெராபர்ட் வதேரா ஹரியானா மற்றும் லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக அமுலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே அமுலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரத்தில் ெராபர்ட் வதேராவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இப்போது அமுலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
அமுலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை அறிக்கையில், “முழுமையாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு மிகவும் நெருக்கமான வெளிநாட்டு வாழ் இந்தியரான சி.சி.தம்பி என்பவருக்கும், ெராபர்ட் வதேராவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இருவருக்கும் இடையே தொழில்ரீதியிலான தொடர்பும் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் எச்.எல்.பஹ்வா என்பவர் ெராபர்ட் வதேரா மற்றும் தம்பிக்கு ஹரியானாவில் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். ெராபர்ட் வதேரா 40 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார். அந்த நிலத்திற்கான பணம் கணக்கில் வராத ரொக்கப் பணமாக் கொடுக்கப்பட்டது. இதற்குத் தேவையான முழுப் பணத்தையும் ெராபர்ட் வதேரா கொடுக்கவில்லை.
2006 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிரியங்கா காந்திக்கு பஹ்வா ஐந்து ஏக்கர் நிலம் விற்பனை செய்துள்ளார். ஆனால் கணவன், மனைவி இருவரும் வாங்கிய நிலத்தை 2010- ஆம் ஆண்டு மீண்டும் பஹ்வாவிற்கு திரும்ப விற்பனை செய்துள்ளனர். இருவருமே நிலம் வாங்குவதற்கு கணக்கில் வராத ரொக்கப் பணத்தையே கொடுத்துள்ளனர். சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக மீண்டும் இருவரும் நிலத்தை வாங்கியவரிடமே விற்பனை செய்து விட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
2020- ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தம்பியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 10 ஆண்டுகளாக ெராபர்ட் வதேராவை தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். ‘இருவரும் அடிக்கடி துபாய் மற்றும் டெல்லியில் சந்தித்துப் பேசியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தம்பிக்கும் ெராபர்ட் வதேராவுக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பான விபரங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கின்றன.
லண்டனில் 2009- ஆம் ஆண்டு சஞ்சய் பண்டாரி வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீடு ெராபர்ட் வதேராவின் நிதியில் புதுப்பிக்கப்பட்டது. அந்த வீட்டில் ெராபர்ட் வதேரா பல முறை தங்கி இருக்கிறார் என்றும் அமுலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் வீடு ெராபர்ட் வதேராவிற்செ் சொந்தமானது என்றும், அதனை வாங்குவதற்கு தம்பி உதவி செய்திருக்கிறார் என்றும் அமுலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை ெராபர்ட் வதேராவின் பெயரை மட்டுமே விசாரணைக்கு இழுத்து வந்த அமுலாக்கப் பிரிவு, முதன்றையாக பிரியங்கா காந்தியின் பெயரையும் சேர்த்து இருப்பது, காந்தி குடும்பத்தை அமுலாக்கப் பிரிவு நெருங்கி இருப்பதாகவே தெரிகிறது.
ெராபர்ட் வதேரா இதற்கு முன்பும் பல்வேறு வழக்குகளில் அமுலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் பிரியங்காவின் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இது ஒருபுறமிருக்க, அமுலாக்கத்துறை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தி மீதான குற்றப் பத்திரிகை தேசிய அரசியல் புயலைக் கிளப்பி இருக்கிறது. அமுலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரியங்கா காந்தி இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இது பற்றி பேசி உள்ளார்கள். இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தத் தலைவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் வந்துள்ளன” என்றார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் படோலே பேசுகையில் “பா.ஜ.க எதிர்வரும் தேர்தலில் காங்கிரசுக்கு அஞ்சுகிறது. அன்று பிரிட்டிஷ் அரசு காந்தியைக் கண்டு பயந்தது. இன்று மத்திய அரசு காந்தி குடும்பத்திடம் பயப்படுகிறது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா பேசுகையில், “இவ்விவகாரத்தில் இருந்துதான் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை கட்சி தொடங்கவுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சதி செய்கிறார்கள். தேர்தலுக்கு முன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இது தொடக்கம் மட்டுமே. இதை அவர்கள் முதன்முறையாகச் செய்வதில்லை. தேர்தல் நெருங்கும்போதுதான் இதுபோன்ற சதிகளை செய்கிறார்கள். அவர்கள் அதை செய்யட்டும். நாம் அதற்கெல்லாம் அஞ்சவில்லை” என்று கூறினார்.