Home » கிழக்கில் பெரு வெள்ளம் போக்குவரத்தும் துண்டிப்பு

கிழக்கில் பெரு வெள்ளம் போக்குவரத்தும் துண்டிப்பு

by Damith Pushpika
December 31, 2023 6:16 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை பெய்துவருகின்றது. பலத்த மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான கிராமிய வீதிகள் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் உள்ளூரில் போக்குவரத்துச் செய்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சிதருவதையும் அவதானிக்க முடிகின்றது.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 434பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 109 குடும்பங்களைச் சேர்ந்த 380பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க படுவான்கரைப் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக அமைந்துள்ள வெல்லாவெளி, மண்டூர் பிரதான வீதியில் இரு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் மிக வேகமாக பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக அவ்வீதியைக் கடப்பதற்கு போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் உழவு இயந்திரங்களுடாக பயணிகளை ஏற்றி இறக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மாவட்டதிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதுடன் பெரிய குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நவகிரி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக அதன் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவின் வேத்துச்சேனை கிராம மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் மேலும் கிரான் பிரதேச செயலக பிரிவின் புலிபாஞ்சகல் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் போக்குவரத்துக்காக உழவு இயந்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இதுவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. மாவட்டத்தில் ஆற்றினை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மழை வெள்ளம் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக மிக அவதானத்துடன் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதோடு பிரதான பெரிய குளங்களும் வான்பாய்கின்றன.

வெள்ளிக்கிழமை(29.12.2023) வரையில் நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 31அடி வரை உயர்ந்துள்ளதுடன், 8அங்குலம் அளவில் வான்பாய்ந்து வருகின்றது. இந்நிலையில் அக்குளத்தில் 2வான்கதவுகள் 5அடி 6அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளன. அப்பகுதியில் அன்றையதினம் 98மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமாகும், அக்குளத்தில் 2அங்குலம் வான்பாய்ந்து வருவதோடு, அப்பகுதியில் 60மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 32அடியாக உயர்ந்துள்ளதுடன், அப்பகுதியில் 68மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 17அடி 2அங்குலம், அக்குளத்தில் 18அங்குலம் அளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது. அத்தோடு அப்பகுதியில் 97.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 6அங்குலமாகும், அப்பகுதியில் அப்பகுதியில் 119.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், அக்குளத்தில் 2அங்குலமளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது. அப்பகுதியில் 32 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

சித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 7அடி 8அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 6அங்குலம். அக்குளத்தில் ஒரு அங்குலமளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது.

வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடியாகவும், புணானை அணைக்கட்டு 7அடி 6அங்குலமாகவும், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் நவகிரிக் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள தாழ்நிங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வியாழக்கிழமை (28.12.2023) அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் 75மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30தொடக்கம் 40கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலைமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முடப்பட்ட மட்டக்களப்பு _ பொலன்னறுவை பிரதான வீதி மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு

பராக்கிரம வாவியின் வான் கதவுகள் வெள்ளிக்கிழமை(29.12.2023) இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மன்னம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவையொன்று காலை 10.30 முதல் இடம்பெறும் என கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார். மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவித்துள்ளது.

மழைவெள்ளத்தால் மக்கள் இவ்வாறு பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்ற இந்நிலையில் மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை(29.12.2023) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8ரிச்டர் அளவில் 10கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன. இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கம் (ரிச்டர் அளவு 5.2 மற்றும் 5.0) 10 கிலோ மீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிச்டர் அளவு) 7.7 கிலோ மீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பு இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது.

தற்போது பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 10 பெரிய குளங்கள் உள்ளன. அதில் 9 குளங்கள் வான்பாய்கின்றன. இதனால் தாழ்நிலங்களும், வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கமைய ஏற்கனவே மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. அதுபோன்று சனிக்கிழமை பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும், மீனவர்களும், பெரிதும் நன்மையாடைவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினம் தெரிவிக்கின்றார். கிராமங்கள், வீடுகள், வீதிகள் என எல்லாவற்றிலும், வெள்ள நீர் தேங்கிக்கிடப்பதனால் அதனை வெளியேற்றும் நடவடிக்கைக்காக பெரியகல்வாறு ஆற்றுவாய் சனிக்கிழமை வெட்டப்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களும், மீனவர்களும், பெரிதும் நன்மையடைவார்கள் என்பதோடு இவ்வாறு முகத்துவாரம் வெட்டப்படுவதற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வருடாந்தம் கார்த்திகை, மார்கழி, மற்றும் தை மாதங்களில் பெருவெள்ளப் பெருக்கையும், ஏனைய மாதங்களில் வரட்சியையும் எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் இரண்டு மாதங்களில் பொழியும் கனமழை நீரை, சிறிய மற்றும் பெரிய குளங்களில் தேக்கி வைப்பதை விடுத்து வீணாக கடலைச் சென்றடைகின்றது. “ஒரு துளி நீரும் வீணே கடலைச் சென்றடையவிடமாட்டேன்” என பராக்கிரம பாகு தெரிவித்த வாக்கைக் காப்பாற்ற இன்னும் இம்மாவட்டத்தில் யாரும் முன் வரவில்லை என்பதுவே பெரும் துரதிர்ஷ்டமாகும். கிராமிய மட்டத்தில் சிறு சிறு குளங்கள் தூர்வாரல் செய்யப்படல் வேண்டும். பெரிய குளங்கள் இன்னும் விஸ்தரிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் “நீரின்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க இம்மாவட்டம் மாத்திரமின்றி முழு நாடும் தன்னிறைவுப் பொருளாதாரத்தில் முன்நோக்கி நகரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

வ.சக்திவேல்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division