சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்படும் வடக்கு ரயில்பாதையின் மாகோ தொடக்கம் அநுராதபுரம் வரையான பகுதியின் புனரமைப்புப் பணிகள் 2024 ஜனவரி 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்தார். நேற்று முன்தினம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்காரணமாக கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை பயணிக்கும் புகையிரத சேவையினை நிறுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொழும்பில் இருந்து மாகோ வரைக்கும் புகையிரதம் செல்லும் என்றும் அதற்கப்பால் அநுராதபுரம் அல்லது யாழ்ப்பாணம் வரைக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஐந்து மாதங்களுக்கு 20 இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். சுமார் 5 மாதங்களுக்கு புகையிரத பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனடிப்படையில் கொழும்பிலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணம் வரையிலும், மாகோவிலிருந்து அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் வரையிலும் விசேட பஸ் சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் கூறியதாவது,
“எமது நாட்டின் வராலாற்றில் நீண்ட கால சேவையினை வழங்கிய வடக்கு ரயில் பாதையின் மாகோ தொடக்கம் ஓமந்தை வரையான பகுதி பல நூறு ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படவில்லை. எனவே, 2014ஆம் ஆண்டு இலங்கையின் ரயில் பாதைக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி அங்கீகரிக்கப்பட்ட போதிலும், வடக்கு ரயில் பாதையை புனரமைப்புச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகை சுமார் 3,000 கோடி ரூபாவாகும்.
2014ஆம் ஆண்டில் இந்தக் கடன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஆரம்பித்தாலும், 2019ஆம் ஆண்டில் மாகோவிலிருந்து ஓமந்தை வரையான 128 கிலோ மீற்றர் தொலைவுக்கு கேள்வி மனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போட்டித் தன்மையுடனான கேள்விப் பத்திரங்களுக்கு அமைய இந்தியாவின் 100 வீத அரச நிறுவனமான எல்கோன் என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரையிலும் இந்தப் பணிகள் செயற்படவில்லை.
நான் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறாவது துரிதமாக முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன். இதற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணிகளுக்கு அமைய அந்தக் காலப்பகுதியினுள் மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு விருப்பப்படவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தோம். இதற்கு அனுமதி கிடைத்திருந்த போதிலும், பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் இந்த ரயில் பாதை அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரைக்கும் ஆறு மாத காலத்திற்கு மூடப்பட்டது.
அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு பீடங்களிலிருந்து இந்தப் பணியை ஆரம்பிக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த பாதை மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலிருந்து மாகோ வரையான பகுதியைப் புனரமைப்புச் செய்வதற்கான பணிகளை எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன்காரணமாக கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரையான புகையிரதப் பயணம் நிறுத்தப்படவுள்ளது.
அந்தப் பணிகளை ஆரம்பிப்பதற்கும், மக்களுக்கு நலன் வேண்டியும் புகையிரத திணைக்களத்தினால் இன்று டிசம்பர் 31ம் திகதி இரவு முதல் ஜனவரி முதலாம் திகதி வரை ஸ்ரீ மஹா போதியில் தர்ம போதனை நடைபெறவுள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் 06ம் திகதி வரை விசேட புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள இத்திட்டத்தை ஆரம்பித்து பொசன் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதை முழுமையாகச் சீர்செய்யப்பட்டு மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய சிறந்த ரயில் பாதையாக மாற்றப்படும். இதன் மூலம் தற்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எடுக்கும் சுமார் 7 மணி வரையான பயண நேரத்தை 5 மணித்தியாலங்களாக மாற்ற முடியும். இதனடிப்படையில் இரண்டு மணி நேரம் மீதப்படுத்தப்படும். இது மிகப்பெரிய புகையிரத அபிவிருத்தி வேலைத்திட்டமாகும்.
இது நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் காரணமாக அமையும். வரவு செலவு திட்ட முன்மொழிவாக இரண்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான சொத்துக்களில் இருந்து மிகச் சிறப்பான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், நஷ்டத்தைக் குறைத்துக் கொண்டு ரயில் வேக்குச் சொந்தமான காணிகளில் செயற்படும் வணிகத் திட்டங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் அக்காணிகள் வழங்கப்படும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு நாமும் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரையிலான புதிய ரயில் பாதைக்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரிய அநுராதபுர நகர திட்டத்தின் கீழ் மிஹிந்தலையை பரிமாற்ற மையமாக மாற்றுவதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிஹிந்தலை புகையிரத நிலையத்துக்கு அருகில் காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்காக மிஹிந்தலை களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்த முடியும். புகையிரத கட்டணத்துக்கும் பஸ் கட்டணத்துக்கும் இடையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இப்போது செய்யப்படும் இந்த குறுகிய கால தியாகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் சிறப்பான சேவையை வழங்குகின்றனர். சில என்ஜின்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. அவ்வாறானவை 60 எஞ்சின்களே எங்களிடம் உள்ளன. எனினும் புதிதாகக் கொள்வனவு செய்வதற்குப் பணம் இல்லை. நீண்ட காலமாக புகையிரத சேவை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இப்போதும் இந்தப் பணிகள் அனைத்தும் கடனில்தான் செய்யப்படுகின்றன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மட்டுமே இதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, எதிர்காலத்தில் அதிக கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 2024ஆம் ஆண்டில் புகையிரத சேவையில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் தீர்வை வழங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
புகையிரத பொது முகாமையாளர் எச். எம். கே. டப்ளிவ். பண்டார இங்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,
“மாகோவிலிருந்து அநுராதபுரம் வரைக்கும் இந்த அபிவிருத்திப் பணிகள் இடம்பெறும். இதனடிப்படையில் இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் 07ஆம் திகதியிலிருந்து இந்த ரயில் பாதை மூடப்படும். இதனிடையே அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையிலான இரண்டு புகையிரதப் பயணங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை பெலியத்தையிலிருந்து பயணிக்கும் புகையிரதத்தை மாகோ வரைக்கும் பயணிப்பதற்கும் மீண்டும் பெலியத்தை வரை செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று அநுராதபுரம் மற்றும் மாகோ இடையிலான பஸ் சேவையும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம் வரைக்கும் பயணிக்கும் புகையிரத திருகோணமலை வரைக்கும் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். 07ஆம் திகதி வரைக்கும் அநுராதபுரத்திற்கு விசேட ரயிலை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
மார்ச் மாத இறுதிக்குள் மிஹிந்தலை ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய முடியும். வடக்கு ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகளை அடுத்து 50 வருடங்ளுக்கு மீண்டும் அவ்வீதியை அபிவிருத்தி செய்வதற்கான தேவை இருக்காது. இது வடக்கு மக்களைப் போன்று மன்னார் மக்களுக்கும் மிகப் பெரும் ஆறுதலாக இருக்கும்.
இது சுற்றுலாத்துறைக்கு சாதகமானதொரு சூழ்நிலையாகும். புகையிரதத்தில் பயணிக்கும் 20 முதல் 25 வீதமானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கின்றனர். அவ்வாறனவர்களுக்கு அபராதம் விதிக்க எதிர்பார்க்கின்றோம். இந்த அபராத தொகையை 10,000 ரூபாவாக அதிகரிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.
இழக்கப்பட்ட வருமானத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த ஊடகச் சந்திப்பில் புகையிரத பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) என். ஜே. இதிபொலகே மற்றும் வடக்கு ரயில்பாதை புனரமைப்புத் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் அசோக முணசிங்க ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
சுபாஷினி சேனாநாயக்க மற்றும் மஹிந்த அளுத்கெதர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்