நாம் கடந்து வந்த 2023 ஆம் ஆண்டுக்கு இன்று நள்ளிரவுடன் விடைகொடுக்கப் போகின்றோம். இன்று நள்ளிரவு புதிய ஆண்டான 2024 இற்குள் நாம் பிரவேசிக்கப் போகின்றோம். கடந்து வந்த கரடுமுரடான பாதையின் அவல நினைவுகளை மறந்து ஒதுக்கிவிட்டு, புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்க நாம் தயாராக உள்ளோம்.
உலக மக்களுக்கு கடந்த இரண்டொரு வருடங்கள் சிறப்பானதாக அமையவில்லையென்பது உண்மை. உலக நாடுகளையெல்லாம் கொவிட் பெருந்தொற்று ஓரிரு வருடங்களாக வாட்டிவதைத்தது. மில்லியன்கணக்கான மனித உயிர்களை உலகம் பறிகொடுத்தது. அதேசமயம் கொவிட் தொற்றின் மறைமுகமான பாதிப்புகள் உலகை விட்டு இன்னுமே நீங்கவில்லை.
பொருளாதார வீழ்ச்சி, தொழில்வாய்ப்பின்மை, ஆரோக்கியக் குறைபாடு, கல்விப்பாதிப்பு என்றெல்லாம் பல்வேறு பாதிப்புகள் உலகநாடுகளில் இன்னும் நீங்காதுள்ளன. இவ்வீழ்ச்சியிலிருந்து உலகம் மீள்வதென்பது இலகுவானதல்ல.
உலக மக்களுடன் ஒப்பிடுகையில், கடந்த காலப்பகுதியில் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் சற்று அதிகமென்றே கூற வேண்டியுள்ளது. கொவிட் தொற்றிலிருந்து மீண்டெழுந்ததும், பொருளாதார நெருக்கடியானது இலங்கையைச் சூழ்ந்து கொண்டது.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கையில், அரசியல் நெருக்கடியானது பூதாகரமாக உருவெடுத்தது.
ஆட்சித் தலைமையையே புரட்டிப் போட்டு விட்டது அரசியல் நெருக்கடி!
அன்றைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவும் கூடிய ஒரேயொரு தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அவரது பதவியேற்பின் பின்னரே நாட்டை மீட்டெடுக்க முடியுமென்ற நம்பிக்கையும் உருவானது. ‘இலங்கையானது வங்குரோத்து அடைந்த நாடு’ என்ற கறைபடிந்த முத்திரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகற்றியுள்ளார். அவரது ஆளுமை, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றினாலேயே இது சாத்தியமானது.
உலக அரங்கில் இலங்கை தலைநிமிர்ந்து நிற்கும் நிலைமையை குறுகிய காலப்பகுதியில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
அதன் காரணமாகவே புதிய நம்பிக்கைகளுடன் 2024 இற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை மக்களால் முடிகின்றது. கடந்த இரண்டொரு வருடங்களாக களையிழந்து போயிருந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் இம்முறை கோலாகலம் நிறைந்ததாக மாறியிருப்பதற்குக் காரணம் மக்களின் உள்ளத்தில் பிறந்த நம்பிக்கையாகும்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு பிறக்கப் போகின்ற புத்தாண்டை அனைவரும் நம்பிக்கைகளுடன் வரவேற்போம். பொருளாதாரத்திலும், இன ஐக்கியத்திலும் மேலோங்கிய தேசமாக எனது தாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் கைகொடுப்போம்.
நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டையொட்டி எமது வாசக நேயர்கள் அனைவருக்கும் தினகரன் வாரமஞ்சரியின் இதயபூர்வமான வாழ்த்துகள் உரித்தாகட்டும்!