இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்கு ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு வழங்கியதை கௌரவிக்கும் வகையில், ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க, இலங்கை கணினி சங்கத்தின் National CIO பட்டியல் 2023 இல் உள்வாங்கப்பட்டிருந்தார்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்பாட்டாளர்களின் பிரதான நிபுணத்துவ அமைப்பான இலங்கை கணினி சங்கத்தினால் (CSSL) முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய CIO பட்டியல் அறிமுக நிகழ்வு 2023 டிசம்பர் 12ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொழிற்துறையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற நிபுணர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. CIO இன் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும், டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணம் முன்னெடுக்கப்படும் நிலையில், உதவி பணிநிலை என்பதிலிருந்து மூலோபாய பணிநிலையாக மாற்றமடைந்து வருகின்றது. தேசிய ரீதியில் CIO களை தெரிவு செய்யும் போது, முன்னெடுக்கப்பட்டிருந்த மதிப்பாய்வு அளவீட்டு தெரிவில் இது பிரதிபலிக்கப்பட்டிருந்தது.
பவர் நிறுவனத்தில் அனோஜா 2008 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப முகாமையாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் Brandix, PricewaterhouseCoopers மற்றும் Hayleys ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருந்தார்.