செங்கடலில் யெமன் நாட்டுக்கு அருகிலுள்ள பாப் அல் மன்டெப் நீரிணை (Bab al-Mandab Strait) தற்போது உலகின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதையில் அமைந்துள்ள முக்கியத்துவம் மிக்க நீரிணை இது.
சர்வதேச கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் 40 சதவீதமான கப்பல்கள் இப்பாதையையே பயன்படுத்துகின்றன. கிழக்கு அமெரிக்கா, வட ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய தரைக்கடலை அண்டிய நாடுகள் என்பவற்றுக்கு பயணிக்கும் பெரும்பாலான வர்த்தகக் கப்பல்கள் இப்பாதையிலேயே பயணிக்கின்றன.
எஸ் அன்ட் பி குளோபல் நிறுவனத்தின் தகவல்கள்படி, ‘உலகுக்கான உணவுத் தேவையில் 15 சதவீதமும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் 27 சதவீதமும், மசகுஎண்ணெய் 13 சதவீதமும் இக்கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
இக்கப்பல் போக்குவரத்துப் பாதையின் ஊடாகப் பயணிக்கும் பெரும்பாலான கப்பல்கள் இஸ்ரேலின் ஈழட், ஹைபா துறைமுகங்களில் தரித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அதன் ஊடாக இஸ்ரேலிய துறைமுகங்கள் அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்கின்றன.
இவ்வாறான சூழலில் யெமன் நாட்டின் கௌதி அன்ஸாருல்லாஹ் ஆயுதக்குழுவினர் இப்பாதை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களை கடந்த 19 ஆம் திகதி முதல் நேரடியாகவும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்கத் தொடங்கினர். குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான வர்த்தகக் கப்பல்களும் இஸ்ரேல் துறைமுகங்களுக்கு பயணிக்கும் கப்பல்களும் இலக்கு வைத்துத் தாக்கப்படுகின்றன. கடத்துதல், சிறைப்பிடித்தல், தாக்குதல் ஆகிய அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் இப்பாதை ஊடான கப்பல்கள் முகம்கொடுத்திருக்கின்றன.
இஸ்ரேல்-_ ஹமாஸ் மோதல்கள் ஆரம்பமான சில நாட்களிலேயே கௌதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இஸ்ரேலில் இருந்து 2000 கிலோ மீற்றர் தூரத்தில் யெமன் அமைந்துள்ள போதிலும், கௌதிகளும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் பங்குபற்றியுள்ளனர்.
கௌதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவும் ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலின் ஏவுகணைகள் இடைமறித்து தாக்கி அழிக்கின்றன. சில ஏவுகணைகள் இஸ்ரேலின் ஈழட் நகரில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
“பாப் அல் மன்டெப் நீரிணை ஊடான செங்கடல் பாதையை இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களும் இஸ்ரேலியர்களுக்குச் சொந்தமான கப்பல்களும் பயன்படுத்தக்கூடாது. இதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் சிறைப்பிடிக்கப்படும், தாக்கப்படும்” என்று நவம்பர் 10 ஆம் திகதி திடீரென அறிவித்த கௌதிகள், “காஸா மீது முன்னெடுக்கும் போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றி சென்றடைய இடமளிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அத்தோடு நில்லாமல் அப்ரஹாம் ரமி உங்கர் என்ற இஸ்ரேலியருக்குச் சொந்தமான ‘கலெக்ஷி லீடர்’ என்ற கப்பலை 2023 நவம்பர் 19ஆம் திகதி சிறைப்பிடித்து யெமனின் ஹுதைதா துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அக்கப்பலில் இருந்த 22 மாலுமிகள் உட்பட 52 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த சமயம்தான் இக்கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாப் அல் மன்டெப் நீரிணை உலகளவில் அதிகளவில் பேசுபொருளாகியுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் பாப் அல் மன்டெப் நீரிணை ஊடான செங்கடல் வழிப்பாதை மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும். இந்நீரிணையானது 32 கிலோ மீற்றர் அகலம் கொண்டது. இந்து சமுத்திரத்தையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் பாதையில் இந்நீரிணை அமைந்துள்ளது.
அதாவது ஐரோப்பா, மத்திய தரைக்கடல் மற்றும் ஆபிரிக்காவைச் சுற்றிய நன்னம்பிக்கை முனையின் ஊடாக இந்து சமுத்திரத்தின் சர்வதேச கப்பல் பாதையை அடைவதைத் தவிர்ப்பதற்கான கிட்டிய கப்பல் பாதையாக செங்கடல் பாதை விளங்குகிறது. இப்பாதையை விடுத்து தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி செல்வதாயின் வர்த்தகக் கப்பலொன்றுக்கு 14 நாட்கள் எடுக்கும். இது மேலதிக நேரத்தையும் செலவையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.
செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்துப் பாதை அதிக நேர காலத்தையோ செலவையோ ஏற்படுத்தக்கூடியதல்ல. அதனால்தான் இப்பாதை ஊடாக நாளொன்றுக்கு 3 பில்லியன் முதல் 9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி முதல் பல வர்த்தகக் கப்பல்களை கௌதிகள் தாக்கியுள்ளனர். அவர்களது தாக்குதல் அச்சத்தின் பின்னணியில் செங்கடல் பாதையைத் தவிர்த்து ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் பயணிக்க சுமார் 55 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுயேஸ் கால்வாய் அதிகார சபைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்பாதை ஊடாக பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களுக்கான காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் பொருட்களின் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இஸ்ரேலின் தேவையில் 70 சதவீதமானவை சரக்குக் கப்பல்கள் மூலம்தான் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. 30 சதவீதம்தான் தரை மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக பெறப்படுகின்றன.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி கௌதிகள் முன்னெடுக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய பொருளாதாரம் மாத்திரமல்லாமல், உலகளாவிய பொருளாதாரமும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளது. குறிப்பாக சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் 12 பன்னாட்டு நிறுவனங்கள் செங்கடல் பாதை ஊடான கப்பல் போக்குவரத்தை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளன.
இவை இவ்வாறிருக்க, இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்வதை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துவதாக ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டுள்ள ஒ.ஒ.சி.எல் என்ற கப்பல் நிறுவனம் அறிவித்துள்ள அதேநேரம், இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு செங்கடல் வழியாக மறுஅறிவித்தல் வரை பயணிப்பதில்லை என ‘எவர்கிறீன்’ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஒ.ஒ.சி.எல். நிறுவனமானது உலகில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து சம்மேளனத்தின் பேச்சாளர் ஜோன் ஸ்டவ்பேர்ட், ‘பாப் அல் மன்டெப் வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இஸ்ரேலின் பிரச்சினை அல்ல. இது உலகளாவிய வர்த்தகப் பிரச்சினை’ என்றுள்ளார்.
‘பாப் அல் மன்டெப் ஊடான கப்பல் போக்குவரத்து நெருக்கடி நீடிக்குமாயின் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஈரோ ஏசியா நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கோகொரி போ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்பாதை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தச் செய்யும் வகையிலான பேச்சுவார்த்தைகள் ஒமானின் ஊடாக கௌதிகளுடன் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் காஸா மீதான யுத்தத்தை நிறுத்தமாறும், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் கௌதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கப்பல் போக்குவரத்துப் பாதையில் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடி இஸ்ரேலிய பொருளாதாரத்தில் மாத்திரமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்திலும் பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், பஹ்ரெய்ன், சீஷெல்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளை உள்ளடக்கி கடல்சார் பாதுகாப்புப் படையை உருவாக்கும் முயற்சி அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்களைக் காவுகொண்டுள்ள காஸா மீதான யுத்தத்தை நிறுத்தி மனிதாபிமான உதவிகள் அங்கு செல்ல இடமளிக்கும் போது காஸாவில் மாத்திரமல்லாமல் பிராந்தியத்திலும் அமைதி நிலவும். கௌதிகளும் தாக்குதல்களை நிறுத்தவே செய்வர். அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களின் கருத்தாகும். இதைவிடுத்து கௌதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் போது மற்றொரு யுத்தமுனை உருவாக வாய்ப்பாக அமையும். அவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கலாகாது.