இந்திய பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் டுபாயில் கடந்த வாரம் இடம்பெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் 10 அணிகளிலும் நிரப்ப வேண்டி இருக்கும் 72 இடங்களுக்காக 333 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றார்கள். ஏலம் கடுமையாகத்தான் இருந்தது.
இருக்கின்ற குழப்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 வயது சஷான்க் சிங்கை வாங்குவதற்கு பதில் 32 வயது சஷான்க் சிங்கை வாங்கியது. பின்னர் பரவாயில்லை அவரும் நன்றாக விளையாடுவார் என்று சமாளித்தது.
மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவன் துஷாரவை வாங்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டபோது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வேண்டும் என்று அவரது விலையை ஏத்திவிட்டது. கடைசியில் இந்திய நாணயப்படி 50 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு வந்த நுவன் துஷாரவை 4.8 கோடி ரூபாவுக்கு வாங்க வேண்டியதாயிற்று.
இத்தனைக்கும் இலங்கையின் முன்னணி சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாவுக்கே வாங்கியதோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை மும்பை அணி 4.6 கோடிக்கே வாங்கியது.
என்றாலும் இந்த ஏலத்தில் குதித்த மற்ற இலங்கை வீரர்களான தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் சரித் அசலங்க ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்கான போட்டியே தனி. ஐ.பி.எல் ஏலம் ஒன்றில் வீரர் ஒருவருக்கு முதல் முறையாக 20 கோடி ரூபாவுக்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
அதுவும் ஒருவரல்ல இரண்டு பேர், அதுவும் இரண்டுமே அவுஸ்திரேலிய வீரர்கள்.
முதலில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸை சாதனை விலையாக 20.5 கோடி ரூபாவுக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. சற்று நேரத்தின் பின் அந்த சாதனையை முறியடித்து ஆஸி. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்கை 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
முன்னதாக ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைபோன வீரராக சாம் கரன் இருந்தார். அவர் கடந்த ஆண்டு ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடி ரூபாவுக்கு விலைபோனார்.
அதாவது ஐ.பி.எல் ஏலத்தில் இந்திய வீரர்கள் 42 பேர் ஏலம் போன மொத்த தொகை ரூபா 79.45 கோடி. ஆனால் அவுஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் மட்டும் ஏலம் போனபோதும் 68.05 கோடிக்கு விலைபோயிருக்கிறார்கள். அண்மையில் நடந்த உலகக் கிண்ணத்தில் ஆஸி. அணி கிண்ணத்தை வென்றது அந்த வீரர்களின் கிராக்கி அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதாவது ஸ்டார்க் வாங்கப்பட்ட விலையின்படி அவர் 2024 ஐ.பி.எல் தொடர் முழுவதும் ஆடினால் சராசரியாக அவர் ஒரு பந்தை வீசுவதற்கு 7.3 இலட்சம் ரூபாவை அறவிடுவார்.
கொல்கத்தா அணி 32.7 கோடி ரூபா கையிருப்புத் தொகையுடனேயே இந்த ஏலத்திற்கு வந்தது. ஆனால் அந்த அணி ஸ்டார்க்கை வாங்குவதற்கு மாத்திரம் கையிருப்பு தொகையில் 75 வீதத்திற்கு மேல் செலவிட்டது. எனவே கொல்கத்தா அணி ஸ்டார்க் தவிர அடிப்படை விலைக்கு வந்த வீரர்களையே அதிகம் வாங்க வேண்டி ஏற்பட்டது. இப்படி 9 வீரர்களை அது அடிப்படை விலைக்கே வாங்கியது.
இந்த மினி ஏலத்திலே விலைபோன 72 வீரர்களில் 36 வீரர்கள் வேகப்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்கள் அல்லது பந்துவீச்சாளர்களாகவே இருந்தனர். இவர்களை வாங்க செலவிட்ட தொகை 154.5 கோடி ரூபா. இது அந்த ஏலத்தில் மொத்தமாக செலவிட்ட தொகையில் மூன்றில் இரண்டு பங்கு. இந்த 36 வீரர்களில் இருபது பேர் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்கள். இவர்கள் சம்பாதித்த தொகை 88.85 கோடி ரூபா.
இதனால் இந்த ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் அணிகளை அதிகம் கவரவில்லை. சுழற்பந்து சகலதுறை அல்லது பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் 16 வீரர்கள் மாத்திரமே ஏலம் போனார்கள். அதிலும் பத்து வீரர்கள் 20 கோடிக்குள் அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டார்கள்.