2023 ஆம் ஆண்டின் வருட இறுதிக்கான விடுமுறைக் காலம் தற்போது தொடங்கியுள்ள போதும், அரசியல் பரபரப்பின் தீவிரத் தன்மை குறைவில்லாமல் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான தீவிர முயற்சிகளை முடுக்கி விட்டிருப்பதுடன், வாக்காளர்களாகிய பொதுமக்கள் மத்தியிலும் தேர்தலுக்கான பரபரப்பொன்று உருவாகியிருப்பதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையப் போகின்றது என்பதாலேயே இந்தப் பரபரப்பு அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தொற்றியுள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதாவது அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு வேட்புமனுக் கோரல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் – தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் – இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தலொன்று நடைபெறுவதற்கே அதிக வாய்ப்புக் காணப்படுகிறது.
இருப்பினும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே நடத்தப்பட வேண்டும். தற்போதைய கணிப்பீட்டின்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னணிப் போட்டியாளர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
இவர்களை விடவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அல்லது முன்னிலைப்படுத்தப்படக் கூடிய வேறு பிரமுகர்களின் பெயர்களும் ஊடகங்களினால் குறிப்பிடப்படுகின்றன. இவர்களில் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோ மற்றும் தொழிலதிபர்களாக தம்மிக்க பெரேரா, திலித் ஜயவீர ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால் அவர்களும் களம் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
அதேநேரம், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மூலம் நீக்கப்பட்ட ஜனக ரத்னாயக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இவ்வாறானவர்களின் அறிவிப்புக்கள் எந்தளவுக்கு தாக்கத்தைச் செலுத்தும் என்பது சந்தேகமாகவே உள்ளது.
இருந்தபோதும், மூன்று முன்னணி வேட்பாளர்களில் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகிய இருவரும் தாம் சார்ந்த கட்சிகளால் வேட்பாளர்களாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சி அவரைக் களமிறக்குவதில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடாவிட்டாலும், நான்கரை தசாப்த கால அனுபவமும், ஆளுமையும், ஆற்றலும் நிறைந்த அவரது பங்களிப்பு நாட்டின் தலைமைத்துவத்துக்கு மிகவும் அவசியமென்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த அவர், அடுத்த தேர்தலில் மீண்டும் நாட்டின் தலைமைப் பதவிக்கு வருவதே பொருத்தமானதென்று பலரும் கருதுகின்றனர்.
அதேசமயம் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக வர வேண்டுமென்பது அவரது நிலைப்பாடாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இலங்கையின் அரசியல் களத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு புத்திசாலித்தனமான அரசியல் மூலோபாயவாதியாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளரா இல்லையா என்பதை அவர் இன்றும் நேரடியாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பது அவரது கட்சியினர் மற்றும் மக்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.
நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் கடுமையான பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை அதாவது கடந்த பொதுத் தேர்தலில் ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலைவரை வீழ்ச்சியுற்ற கட்சியின் மீட்சிக்கான முன்னெடுப்புக்களை கட்சியிடமே கையளித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியேயிருந்து ஒத்துழைப்புக் கிடைப்பது மிகவும் அவசியமானதாகும். தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவே ஜனாதிபதிக்கு முழுமையான பக்கபலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் எவ்வாறு இணைந்து செயற்படப் போகின்றன என்பது இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
இருந்தாலும், கடந்த வாரம் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் அதன் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவானபோதும், ஜனாதிபதித் தேர்தல் குறித்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. எனினும், பிரபல தொழிலதிபரும் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவும் குறித்த தேசிய மாநாட்டில் முன்வரிசையில் இடம்பிடித்திருந்தார்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலர் ஊடகங்களுக்குக் கூறியிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக தம்மிக பெரேரா களமிறக்கப்படலாம் என்ற ஊகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அவ்வாறானதொரு தீர்மானத்துக்குப் பொதுஜன பெரமுன செல்லுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் காய்நகர்த்தல்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எனினும், பொதுஜன பெரமுனவைப் பொறுத்த வரையில் அவர்கள் எடுக்கும் தீர்மானத்தினால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கான சாத்தியங்களே அதிகமாகும். கோட்டாபய ராஜபக் ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து பொதுஜன பெரமுன ஏற்கனவே பலரை இழந்துள்ளது. அதாவது, கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான பலர் தம்மை சுயாதீன உறுப்பினர்களாக அறிவித்து எதிர்க்கட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மறுபக்கத்தில், பொதுஜன பெரமுனவில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் “அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம்” என்று பகிரங்க வெளிகளில் கூறியுள்ளனர். இந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது பொதுஜன பெரமுன மேற்கொள்ளும் முடிவினால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளுக்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.
இது இவ்விதமிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாசவை தமது ஜனாதிபதி வேட்பாளர் என முன்னிலைப்படுத்தி காய்நகர்த்தல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுயாதீன உறுப்பினர்கள், குறிப்பாக டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினர் சஜித் பிரேமதாசவுடன் கூட்டணியை ஏற்படுத்தி செயற்படுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்படும் கூட்டணியானது பாரிய கூட்டணியாக அமைவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. பாட்டலி சம்பிக்க ரணவக்க புதிய கட்சியை ஆரம்பித்து செயற்பட்டு வருவதால் அவரும் இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அதேநேரம், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது. அவர்கள் கூட்டணிகளை அமைப்பதைவிட தனித்துக் களமிறங்குவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டுள்ளனர். வாக்காளர் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றம் தமக்குச் சாதகமாகும் என்ற கணிப்பை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தனித்து இயங்குவதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் அவர்களின் கணிப்புக்கள் பிழைத்திருந்த நிலையில், தற்போதும் அவர்கள் தம்மை அதிகளவில் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக ஜே.வி.பியின் கூட்டங்கள் பொதுமக்களால் நிரம்பியிருந்தாலும் தேர்தல் முடிவுகளில் அதற்கான வெளிப்பாடுகளைக் காணமுடிவதில்லை. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் வெளிப்படுத்தப்படலாம் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது குறித்து குழப்பமான நிலை காணப்படுகின்ற போதிலும், தேர்தல்கள் அடுத்தவருடம் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளமையால் அனைத்துத் தலைவர்களும் தம்மை தேர்தலுக்குத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை.