பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. நிதிரீதியான தீர்வுகளுக்கு அப்பால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.
அவர் தற்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் தருணத்திலும் சரி, அதற்கு முன்னர் பிரதமராக இருந்த காலப்பகுதிகளிலும் சரி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தநிறுத்தம் கொண்டுவரப்பட்டு, புலிகள் இயக்கத்துடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலும் நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நாட்டைப் பெறுப்பேற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பம் முதலே, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றார்.
இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அது மாத்திரமன்றி, சகல கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாட்டை நடத்தி இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்திருந்ததுடன், தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த வரிசையில் கடந்த வியாழக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், ஜீ.கருணாகரன், டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு, நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது. காணி, மீள்குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீளஇணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்து இல்லையென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர், சிரேஷ்ட அரசியல்வாதி இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து ஏமாற்ற முயல வேண்டாம் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்பட வேண்டியது அவசியம் என்ற விடயங்களையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றபோதும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஒரு சில செயற்பாடுகள் இதற்குப் பாதகமாக அமைகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் பல ஆண்டுகளாக கால்நடைப் பண்ணைகளை நடத்திவரும் தமிழர்களுக்கு பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், மரபுரிமை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நில சுவீகரிப்பு போன்ற செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் தேவையற்ற சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அமைகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதன் தேவையும் காணப்படுகின்றது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் இவ்விடயம் அவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இது பற்றி அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்திருந்தாலும் தொடர்ந்தும் இடம்பெறும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாததாகிறது. எனவே, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசாங்க அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது காலத்தின் தேவையாகும்.
கடந்த கால ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் அனைத்துத் தரப்பினருடனும், குறிப்பாக சிறுபான்மையினருடன் அதுவும் யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட சமூகமான தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதே தமிழர் தரப்பின் எண்ணமாகும்.
கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாகத் தமது அரசியலை முன்கொண்டு செல்வதிலேயே அதிகம் கவனம் செலுத்தியிருந்தனர். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இனங்களையும் இணைத்துக்கொண்டு ஒற்றுமையுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.
அண்மையில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவைக்கும், பௌத்த சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த முயற்சியை ஜனாதிபதி மற்றும் மகாசங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி நல்லிணக்கத்துக்கான தனது சமிக்ஞையை தமிழ் பிரதிநிதிகள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மற்றுமொரு பிரிவினைவாத செயற்பாட்டைத் தாங்கிக் கொள்வதற்கான பலம் இல்லை. நாட்டை பாதிப்பிலிருந்து மீட்டு மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு செல்வதாயின் நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்குவது அத்தியாவசியமானது. இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி தொடர்ந்தும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றர்.
பி.ஹர்ஷன்