சிற்றின்ப சந்தோஷத்தில்
சிறகடித்துப் பறந்திடவே
சிந்தையில் நுழைந்தது போதை
சீரழிந்து போனது என் பாதை
திசைமாறியே என் கால்கள்
தினசரி நடந்ததால்
வசைமாரி பொழிந்தே வாழ்வு
வலுவிழந்து போனதே
நீசனாய் என் பெயரும்
நிதர்சனமாய் உலாவிட –
கெடுதியின்
தாசனாய் என் செயலும்
சேர்ந்தே சென்றதே
பெற்றோரின் கண்ணீரும்
கற்றோரின் கண்டனமும்
சுற்றத்தாரின் சுடுசொல்லும்
முற்றத்திலே முகாமிட்டதே
கால்க்கட்டுப் போட்டாலே
காளையிவன் திருந்தலாமென்றிட
காரிகைக்கான விண்ணப்பம்
காண்போரிடம் சென்றதே
நிராகரிக்கப்பட்ட
விண்ணப்பங்களால்
சுதாகரிக்கவும் முடியாமலாகி
நிந்தனைகளால் கைதாகி
வந்தனங்களும் சிறையானதே
சரிந்து போன வாழ்க்கையதை
சரியாக்கி நிமிர்த்திவிட
துணிந்து ஒருத்தி வந்தாளே – என்
துயர் துடைக்க முனைந்தாளே
காரிருளை விலக்கிவிட
கதிரவன் வருவது போல் – என்
கறைபட்ட உள்ளம் ஒளிர்ந்திட
கன்னியவள் கழுத்தை நீட்டினாளே
தையலவளின் ஸ்பரிசத்தால்
மையல் வாழ்வில் மலர்ந்திட
பொய்யும் புரட்டும் படிப்படியாய்
பொசுங்கித்தான் போனதே
வையகத்தின் வாழ்க்கையை
மெய்யாகவே அர்த்தமாக்கி
காத்திரமாம் போதனைகளால்
கட்டியம் கூறினாளே
கசந்து போன வாழ்க்கையதில்
வசந்தம் வந்து வாழ்த்திட
சுகந்தமாய் பாதையமைத்து
சுபீட்சத்தைத் தெளித்தாளே
தீய பழக்கங்கள் யாவும்
திடமாகத் தகர்ந்திட
தூயவனாய் எனை மாற்றி
துலங்கிட வைத்தாளே
வாழவந்தவர் நாமென்று
வாகைக்காய் அறிவுரையை
வானளாவப் போதித்ததாலே
வாசம் வந்து வீசியதே
தூற்றிய நாவுகள் பல
போற்றியே புகழ்ந்திட – மனதில்
ஏற்றிய தீபமாய்
என்னவள் ஒளிர்ந்திட
மாற்றிய நடத்தைகள்
மகிழ்வாய் அமைந்தனவே
ஆணின் வெற்றிக்குப் பின்னாலே
பெண் இருக்கிறாள் என்று
ஆன்றோர்கள்
சொன்னார்கள் அன்று
ஆணித்தரமாய் உணர்ந்தேன்
நான் அதை இன்று.