தற்போதைய பொருளாதார நிலைமையின் போதும் இலங்கைக்கு தொடர்ந்தும் பலமாக இருப்போமென்பதுடன், இலங்கைக்கு வலுவான ஆதரவை வழங்க தயாரென்றும், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதியளித்துள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு தொடர்பாக அவர்கள் கலந்துரையாடினர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே காணப்படும் நெருங்கிய உறவுகளை தொடர்ந்தும் வலுவான முறையில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்திய சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்கு தொடர்ந்தும் பலமாக இருப்போமென்றும் இந்திய மக்களவை சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பும் நடைபெற்றது.
இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள சகல விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா வசதியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா வழங்குவது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.